சமஷ்டி என்றால் என்ன?

சமஷ்டி ஆட்சி முறை இன்றைய உலகுக்கு அத்தியாவசியமான ஒரு ஆட்சி முறையாக வளர்ச்சியடைந்து வருவதாக அரசியல் ஞானிகள் கூறிவருகிறார்கள்.

உலகில் 700 கோடி சனத் தொகையில் 40 சதவீதமான மக்களைக் கொண்டுள்ள 28 மேற்பட்ட நாடுகள் சமஷ்டி ஆட்சி முறை கொண்டதாகவே காணப்படுவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

அதிகளவான நிலப்பரப்பை கொண்டுள்ள அல்லது சனத்தொகையைக் கொண்டுள்ள பெரும்பாலான நாடுகள் சமஷ்டி நாடுகளாக காணப்படுகின்றன. இன்னும் சில நாடுகள் சமஷ்டி ஆட்சி முறையை நோக்கி மாறிக் கொண்டிருக்கிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னர் ஒற்றையாட்சியை கொண்ட நாடுகளாக இருந்தவை சமஷ்டி நாடுகளாக மாறிய வரலாறுமுண்டு. பெல்ஜியம், எத்தோப்பியா, மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளை இதற்கு உதாரணமாக குறிப்பிடலாம்.

சமஷ்டி முறைகள் அதன் பொருளாதார சமூக தொகுப்பின் அடிப்படையில் அவற்றின் நிறுவன அடிப்படையிலும் பாரிய அளவில் வித்தியாசம் கொண்டவை. குறிப்பாக, பல்லின சமூகம் கொண்ட நாடுகளில் இது பெரிதும் வரவேற்கப்படுகின்றன. இந்தியா, சுவிட்ஸர்லாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளை இதற்கு உதாரணமாக எடுத்துக் கொள்ள முடியும்.

எல்லா வகைகளிலும் அதிகாரம் ஓர் மத்திய அதிகார பீடத்திடம் மட்டும் குவிக்கப்பட்டுள்ள ஆட்சி முறை ஒற்றையாட்சி முறையாகுமென பேராசிரியர் ஹர்மஸ் வரைவிலக்கணப்படுத்துவார்.

அதேவேளை, தமது அதிகாரத்துறைகளில் சுயாதீனமாக கருமம் ஆற்றும் அதேவேளை சில விடயங்கள் தொடர்பாக ஒன்றுபட்டு கருமம் ஆற்றுவதற்கு வழியேற்படும் பண்பு முறைகள் கொண்ட ஆட்சி முறை கூட்டாட்சி முறையாகு மென அரசியல் அறிஞர் கே.சி. விபர் குறிப்பிட்டுள்ளார்.

சுவிட்ஸர்லாந்து

நான்கு மொழிகளை பேசுவோரைக் கொண்ட நாடு இது. இது ஒரு கூட்டாட்சி நாடு. ஜேர்மன் மொழி பேசுவோர் 65 சதவீதமும், 18 சதவீதம் பிரான்ஸ் மொழியை பேசுவோரும், 9 சதவீதம் இத்தாலி மொழி பேசுவோரும், ஒரு ச த வீதம் ரோமன் மொழியையும் பேசுகிறவர்களும் இந்த நாட்டின் தேசிய இனங்களாக கருதப்படுகிறார்கள்.

குறித்த நான்கு மொழிகளும் நாட்டின் தேசிய மொழியாகவும், 3 மொழிகள் ஆட்சி மொழியாகவும், அங்கீகரிக்கப்பட்டுள்ளன. 1948 ஆம் ஆண்டு இந்த நாட்டின் கூட்டாட்சி யாப்பு வரையப்பட்டது.

மாநிலங்கள் கன்ரைன்கள் (CONTONS) என அழைக்கப்படும். 26 கன்ரைன்கள் உண்டு. அமெரிக்க யாப்பைப்போல் மத்திய அரசுக்கென சில அதிகாரங்களை ஒதுக்கிவிட்டு, ஏனையவை மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.

மத்திய அரசு செய்யக் கூடியவை போர்ப்பிரகடனம், அமைதி அறிவிப்பு வெளியுறவுக் கொள்கை, நாணய வெளியீடு, தபால் சேவை, ரயில், விமானசேவை, போக்குவரத்து இராணுவும் என்பவை போன்றவை மத்திய அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டவையாகும்.

இந்தியா

பலமொழிகள் பேசும் மக்களைக் கொண்ட நாடு இந்தியா. ஹிந்தி, கன்னடம், தெலுங்கு, தமிழ், பஞ்சாபி உட்பட 18 மொழிகள் தேசிய மொழிகளாக காணப்படுகிறது. மாநிலங்கள் விரும்பினால் தங்கள் தாய் மொழியை மாநில அளவில் நிர்வாக மொழியாக வைத்திருக்க முடியும். இந்திய மாநிலங்கள் அனைத்தும் மொழிவழி மாநிலங்களாகும். அதில் ஹிந்தி மொழி பேசும் மாநிலங்கள் அதிகமாகவுள்ளன.

28 மாநிலங்கள், 6 யூனியன்கள், ஒரு தேசிய தலைநகர்பகுதி கொண்ட நாடு இந்தியா. 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் திகதி இந்திய அரசியல் யாப்பு நடை முறைக்கு வந்தது. இந்திய யாப்பு கூட்டாட்சி பண்பு கொண்டது. இந்த யாப்பின் பிரகாரம் மத்திய அரசின் பட்டியல், மாநில அரசின் பட்டியல், பொதுப்பட்டியல் என பிரிக்கப்பட்டு அதிகாரங்கள் பகிரப்பட்டுள்ளன.

அமெரிக்கா

அமெரிக்காவின் அரசியல் யாப்பு அதிகாரப் பங்கீட்டில் மிக முக்கியமான யாப்பாக பேசப்படுகிறது. 1789 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட கூட்டாட்சி 50 அரசுகளைக் கொண்டதாக அமைகிறது. 50 அரசுகளுக்கும், ஐம்பது அதிகார அலகுகள் உருவாக்கப்பட்டுள்ளன. நிலப்பரப்பு, மக்கள் தொகை என்பவற்றின் அளவுகளைப் பொருட்படுத்தாமல், எல்லா அரசுகளும் சமமாக மதிக்கப்படுகின்றன.

மத்திய அரசின் இரண்டாவது சபையாக கருதப்படும் செனட்சபையில் எல்லா மாநிலங்களுக்கும் சமமான அங்கத்துவம் வழங்கப்பட்டுள்ளது. இதன் சிறப்பு அம்சம் என்னவெனில் 50 மாநிலங்களுக்கு சமமான அதிகாரங்களை வழங்கிய யாப்பாக அமெரிக்க யாப்பு காணப்படுகிறது.

சில குறிப்பிட்ட அதிகாரங்களே மத்திய அரசுக்கு உரியவை. ஏனையவை மாநிலங்களுக்குரியவை. உதாரணம். வெளிநாட்டு வர்த்தகம், வெளிநாட்டு உறவுகள், முப்படைகள் போர்ப்பிரகடனம், நாணய வெளளியீடு உட்பட 18 வகையான அதிகாரங்கள் மத்திய அரசுக்கு உள்ளன. ஏனையவை மாநில அரசுக்குரியவை.

ரஷ்யா

1917 ஆம் ஆண்டு லெனின் தலைமையில் ஏற்பட்ட புரட்சிக்குப்பின் உருவாக்கப்பட்ட நாடு இது. 1924 ஆம் அண்டு யாப்பின் பிரகாரம் நாட்டுக்கு சோவியத் சோஷலிச குடியரசு களின் ஒன்றியம் என பெயர் சூட்டப்பட்டது. இதுவே சமஷ்டிக்கு வழிவகுத்தது. இங்குள்ள தேசிய இனங்களின் அடிப்படையில் அரசியல் யாப்பு உருவாக்கப்பட்டது.

மத்தியிலும், மாநிலத்திலும் தேசிய இனங்களை கவனத்தில் கொண்டே நிறுவனங்கள் உருவாக்கப்பட்டிருந்தன. சிறிய தேசிய இனங்களுக்கும் அதிகாரம் பெறும்வகையில் யாப்பில் உரிமை வழங்கப்பட்டிருக்கிறது. 185 மொழிபேசும் 150 தேசிய இனங்கள் அங்கு வாழுகிறார்கள்.

சிறிய இனங்களும் அதிகாரப்பங்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதால் 4 வகையான அதிகார அலகுகள் உருவாக்கப்பட்டன.

தன்னாட்சி குடியரசுகள் (Autonomous Republics)

தன்னாட்சி பிராந்தியங்கள் (Autonomous Regions)

தன்னாட்சி தேசிய பகுதிகள் (Autonomous National Areas)

குடியரசு (Republic)

இதன் அடிப்படையில் 16 குடியரசுகள், 20 தன்னாட்சி குடியரசுகள், 10 தன்னாட்சி பிராந்தியங்கள், தன்னாட்சி தேசிய பகுதிகளாக ரஷ்ய நாடு இயங்கிவருகிறது. ரஷ்யப் புரட்சிக்கு தலைமை தாங்கிய லெனின், தேசிய இனத்துக்கு சுய நிர்ணய உரிமை உண்டு என்ற பிரகடனத்தை முதல் முதல் செய்தவராவார்.

இலங்கையில் சமஷ்டி பற்றிய எண்ணக்கரு

பிரித்தானிய ஆட்சியாளர்களால் அடக்கி ஒடுக்கப்பட்ட கண்டிய மக்கள் 1924 நவம்பரில் கண்டி தேசிய சபை யொன்றை நிறுவினார்கள். இதன் நோக்கம் 1815 ஆம் ஆண்டு பிரித்தானிய இராஜ்ஜியத்தால் கைப்பற்றப்பட்ட கண்டிய இராசதானிய மக்கள் தங்களுக்கு சமஷ்டி தீர் வொன்றின் மூலம் அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டு மென்ற கோரிக்கையை தேசிய சபை மூலம் டொனமூர் (1931)ஆணைக்குழுமுன் சமர்ப்பித்தார்கள்.

அவர்களின் ஆலோசனைப்படி இலங்கைத்தீவில் கண்டி இராஜ்ஜியம், யாழ்ப்பாண அரசு, கீழ் நாட்டு சிங்கள இராஜ்ஜியம் என்ற மூன்று ஆட்சி முறைமையாக இலங்கைத்தீவு கொண்டு வரப்படவேண்டும்,

அந்த மூன்று அரசுகளும் சமஷ்டி ஆட்சி முறையை கொண்டதாக இருக்கவேண்டும் என தமது கோரிக்கையை சமர்ப்பித்தவர்கள் மூன்று சமஷ்டி கட்டமைப்பின் எல்லைகளையும் வகுத்துக்காட்டியிருந்தார்கள்.

அந்த வகையில் கண்டி அரசானது வட மத்திய மாகாணம், வடமேல் மாகாணம், மத்திய மாகாணம், ஊவா மாகாணம், சப்ரகமுவ மாகாணங்களை உள்ளடக்கியதாகவும், கீழ் நாட்டு சிங்கள அரசு மேல் மாகாணம், தென் மகாணம், உள்ளடக்கியதாகவும் தமிழ் அரசு வட கிழக்கு மாகாணங்களை தன்னகத்தே கொண்டதாகவும் அமைக்கப்படவேண்டு மென தமது முன் மொழிவை ஆணைக்குழுமுன் சமர்ப்பித்திருந்தார்கள். தங்கள் முன்மொழிவுகளில் அதிகார பகிர்வு தொடர்பில் பின்வரும் வியாக்கியானங்களையும் வழங்கியிருந்தார்கள்.

நிதி வசூலிப்பு, சட்டம் இயற்றல், வரிவிதிப்பு, கல்வி விவசாயம், பிராந்திய நிர்வாகம், காணி ஆகியவை மாகாண சபைகளிடம் இருக்க, எஞ்சியவை மத்திய அரசிடம் இருக்கவேண்டும் என தமது சிபார்சில் தெரிவித்திருந்தார்கள்.

அன்னியர் ஆட்சிக்கு முன் இலங்கைத் தீவு கோட்டை இராஜ்ஜியம், கண்டி இராஜ்ஜியம், யாழ்ப்பாண இராஜ்ஜியம் ஆகிய மூன்று இராஜ்ஜியம் இருந்தமையை கருத்திற் கொண்டு டொனமூர் ஆணைக்குழுமுன் ஒரு சமஷ்டி அரசியல் முறையை வழங்கும்படி கண்டி தேசிய சபையினர் கோரிக்கை விடுத்திருந்தார்கள்.

செல்வம் கொழிக்கும் மலை நாட்டு வருமானத்தைக் கொண்டு இலங்கையின் ஏனைய பிரதேசங்கள் அபிவிருத்தி அடைவதனையும், தங்கள் பகுதிகள் பின்தங்கிய நிலையில் கவனிப்பார் அற்று இருப்பதையும் கண்டு வருந்தியே கண்டிய தேசிய சபையினர் சமஷ்டி அரசியல் அமைப்பை கோரினார்கள்.

ஆனால், டொனமூர் ஆணைக்குழுவினர் இவை அனைத்தையும் மறுத்து, சேர்.பொன் இராமநாதன் தலைமையிலான தேசிய காங்கிரஸ் சமர்ப்பித்த சர்வஜன வாக்குரிமை தொகுதி வாரியான பிரதிநிதித்துவத்தை ஏற்றுக் கொண்டு கண்டிய தேசிய சபையின் ஆலோசனைகளை நிராகரித்தனர்.

கண்டிய தேசிய சபையினரின் சமஷ்டி கோரிக்கையை அறிந்திருந்த யாழ்குடா புத்திஜீவிகள,; மற்றும் கல்விமான்கள் மத்தியில் இது ஒரு விழிப்புணர்வை கொண்டுவந்தது.

இதன் தொடர்ச்சியாகவே 1926 ஆம் ஆண்டு இடம்பெற்ற இன்னொரு சம்பவம் வட மாகாண மக்கள் மத்தியில் சமஷ்டி பற்றிய எண்ணக்கருவை வலுவடைய வைத்தது.

யாழ்ப்பாணத்தில் யாழ் வாலிபர் காங்கிரஸ் என்ற பெயரில் ஒரு சங்கம் இயங்கிவந்தது. இச்சங்கம் கண்டிய தேசிய காங்கிரஸ் ஆரம்பிக்கப்பட்ட அதே காலப்பகுதியில் தொடக்கி வைக்கப்பட்டது. பழமைவாத தலைவர்கள் போக்கில் அதிருப்தியடைந்த படித்த வாலிபர்களால் இச்சங்கம் 1924 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.

தேசிய கலாசாரம், பொருளாதார சுபீட்சம், சமூக ஒற்றுமை, பூரண சுயாட்சி ஆகிய நான்கு கொள்கைகளை தாரக மந்திரமாகக் கொண்டு இயங்கிய இவர்கள், 1926 ஆம் ஆண்டு இங்கிலாந்து ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் கல்விகற்று வந்த கல்விமானான எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கா என்ற கல்விமானை உரையாற்ற அழைத்திருந்தார்கள். கண்டி தேசிய சபை ஆரம்பிக்கப்பட்டு, சுமார் இரண்டு ஆண்டுக்குப்பின் பண்டாரநாயக்கா யாழ்ப்பாணம் அழைக்கப்பட்டிருந்தார்.

வாலிப காங்கிரஸின் அழைப்பின்பேரில் யாழ்ப்பாணம் வந்த பண்டாரநாயக்கா, ஆற்றிய உரை இளைஞர்கள் மத்தியில் சமஷ்டி ஆட்சி பற்றிய விழிப்புணர்வை தூண்டி விட்டது. விளக்கங்கள் யாழ் இளைஞர்கள் மத்தியில் ஆழமான அரசியல் சிந்தனையை தூண்டிவிட்டது.

தந்தை செல்வாவின் சமஷ்டிக்கனவு

பண்டாரநாயக்காவின் யாழ் விஜயம், கண்டிய தேசிய சபையினரின் சமஷ்டி ஆட்சி பற்றிய கோரிக்கைகள் இடம் பெற்று சுமார் 23 வருடங்கள் கழிந்து கொண்டிருந்த நிலையில் இலங்கை தமிழரசுக்கட்சியை ஸ்தாபிக்கவேண்டிய சூழ்நிலை யொன்றுக்கு தந்தை செல்வா தள்ளப்பட்டார்.

காரணம், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தலைவர் ஜி.ஜி. பொன்னம்பலத்தினுடைய கொள்கையில் ஏற்பட்ட முரண்பாட்டு மாற்றங்களாகும். பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் காங்கிரஸில் இணைந்து செயற்பட்டுவந்த தந்தைக்கும், பொன்னம்பலத்துக்கும் இடையில் ஏற்பட்டகருத்து விரிசல்களும், முரண்பாடுகளும் இருவரையும் மிகவிரைவில் பிரித்துவைக்கப்போகிறது என செல்வாவின் நண்பர்கள் உணர்ந்து கொண்டநிலையில்தான் எதிர்பாராத சம்பவம் ஒன்று நடைபெற்றது.

பிரஜாவுரிமை சட்டம்

1949 ஆம் ஆண்டு (05.08.1949) இந்திய – பாகிஸ்தானிய பிரஜாவுரிமைச்சட்டமூலம் பாராளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. மலையக தமிழர்களின் வாக்குரிமையை பறிக்கும் இந்த மசோதாவுக்கு ஆதரவாக தமிழ் காங்கிரஸ் தலைவர், ஜி.ஜி. பொன்னம்பலம், கனகரத்தினம், இராமலிங்கம் ஆகியோர், வாக்களித்தனர்.

ஆனால், தமிழ் காங்கிரஸ் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்திய தந்தை செல்வநாயகம், கோப்பாய் வன்னிய சிங்கம், திருமலை சிவபலான் ஆகியோர் மேற்படி சட்டமூலம் எதிர்த்து வாக்களித்தனர். இந்த சட்டம் மூலம் இலங்கைவாழ் தமிழ் மக்களின் எண்ணிக்கையை குறைத்து அவர்களை பலவீனப்படுத்த இச்சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது என தந்தை வாதிட்டார்.

டி.எஸ்.சேனநாயக்காவின் மந்திரி சபையில் அமைச்சராக இருந்த பொன்னம்பலம் கடும் கோபமடைந்து தந்தை செல்வநாயகம் கோப்பாய் வன்னியசிங்கம், திருமலை சிவபாலன் ஆகியோரை கட்சியிலிருந்து நீக்கினார். இதனால் மனமுடைந்து போன தந்தை செல்வநாயகம் அரசியலிருந்து வலகும் நிலைக்கு தள்ளப்பட்டார்.

இதனால் தமிழ்க்காங்கிரஸ் இரண்டு அணியாக பிளவு பட்டதுபோல் காணப்பட்டது. ஜி.ஜி அணி, செல்வநாயகம் அணி என பிரிந்து போன நிலையில் தந்தை தீவிரமாக யோசித்து தனது வாழ்வை தமிழ் மக்களுக்காக அர்ப்பணிக்க முடிவு செய்தார்.

தொடரும்….

திருமலை நவம்

(கடந்த வார தொடர்ச்சி)

Share.
Leave A Reply

Exit mobile version