முன்னாள் ஜனாதிபதிகளுக்கான முப்படையினரின் பாதுகாப்பு நீக்கம் குறித்து தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மீது தொடர்ச்சியாக விரல் நீட்டப்பட்டு வருகின்றது. இவர்களுக்கான முப்படையினரின் பாதுகாப்பு கடந்த டிசம்பர் மாதம் 23 ஆம் திகதி நீக்கப்பட்டிருந்தது.
பொலிஸ் பாதுகாப்பு நீக்கப்படவில்லை. எனினும் மஹிந்தவின் உயிருக்கு ஏதாவது அச்சுறுத்தல்கள் ஏற்படின் அதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பொறுப்பு கூற வேண்டும் என பொதுஜன பெரமுன தெரிவிக்கின்றது.
பயங்கரவாத தாக்குதல்களையெல்லாம் தாண்டி கோட்டாபய சகோதரர்களை தெரிவு செய்த பொதுமக்களே ஒரு கட்டத்தில் அவர்களுக்கு எதிராக திரும்பி, ஆட்சியிலிருந்து துரத்திய வரலாற்றை பொதுஜன பெரமுன மறந்து விட்டு பேசுகின்றது.
முன்னாள் ஜனாதிபதிகளில் சந்திரிக்கா பண்டாரநாயக்க அம்மையார் மற்றும் மஹிந்த ராஜபக் ஷ ஆகிய இருவருமே இரண்டு தடவைகள் ஜனாதிபதிகளாக பதவி வகித்த அதேவேளை, விடுதலை புலிகளுடனான யுத்தத்தில் பாதுகாப்பு அமைச்சர்கள் என்ற வகையில் அவர்களுக்கெதிரான வியூகங்களை வகுத்தவர்கள்.
இதில் சந்திரிகா அம்மையார் புலிகளின் குண்டுத்தாக்குதலுக்கு இலக்காகி தனது ஒரு கண்ணில் பாதிப்பை எதிர்நோக்கியவர். மஹிந்த ராஜபக் ஷ ஜனாதிபதியாக இருந்த போது புலிகளின் இலக்காக இருந்தவர்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக் ஷ மற்றும் இராணுவத் தளபதியாக செயற்பட்ட சரத் பொன்சேக்கா ஆகியோராவர்.
கோட்டாபய மற்றும் சரத் பொன்சேக்கா ஆகிய இருவரின் மீதும் தற்கொலை குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் கோட்டாபய காயங்களின்றி தப்பி விட, சரத் பொன்சேக்கா மரணத்தை தொட்டு வந்தார். மஹிந்தவுக்கு பின் வந்த மைத்ரிபால சிறிசேனவுக்கு பாதுகாப்பு பிரச்சினைகள் பெரிதாக இருக்கவில்லையென்று கூறலாம்.
ஆனால் அவருக்குப்பிறகு ஜனாதிபதியான கோட்டாபயவுக்கு அந்த சவால்கள் இருந்ததாக கூறப்பட்டது. எனினும் 2009 ஆம் ஆண்டு யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த மஹிந்த ராஜபக் ஷ, நாட்டில் இனி பயங்கரவாதத்துக்கு இடமில்லை என மக்கள் மத்தியில் கூறினார்.
ஆனால், யுத்தம் முடிவுற்ற பிறகும் கூட வருடா வருடம் பாதுகாப்பு செலவீனங்களுக்காக வரவு செலவு திட்டத்தில் பாரிய நிதி ஒதுக்கீடு செய்யப்படுவது எதற்காக என்ற கேள்வி சாதாரண மக்கள் மத்தியிலும் எழுந்தது.
அப்படியானால் இன்னும் எமது நாட்டுக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் இருக்கின்றதா என்ற கேள்விகள் முன்வைக்கப்பட்டன. எனினும், பாதுகாப்பு செலவீனங்களுக்காக ஒதுக்கப்படும் நிதியில் பாரிய தொகை முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்கானது என்பதையும் செலவீனங்களையும் தேசிய மக்கள் சக்தி வெளிப்படுத்தியது.
முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு செலவீனங்களுக்காக வருடந்தோறும் அரசாங்கம் சுமார் 100 கோடி ரூபாவை ஒதுக்க வேண்டியுள்ளதாக தேசிய மக்கள் சக்தி சுட்டிக்காட்டியுள்ளது. யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்தவர் என்ற ரீதியில் மஹிந்த ராஜபக் ஷவுக்கே அதிக பாதுகாப்பு வழங்கப்பட்டதுடன் பாதுகாப்பு செலவீனத்தின் பெரும்பகுதி அவருக்கே ஒதுக்கப்பட்டிருக்கின்றது.
முப்படையினரில் 100 பேர் அவரின் பாதுகாப்புக்காக அமர்த்தப்பட்டுள்ளனர். அதை விட பொலிஸாரும் ஒரு தொகையினர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான கொடுப்பனவுகள், விசேட படிகள் சாதாரண ஒரு பொலிஸ் அதிகாரியோ அல்லது இராணுவ வீரரோ பெறும் தொகையை விட அதிகமாகும்.
இவ்வருடம் ஜனவரி மாதத்திலிருந்து நவம்பர் மாதம் வரை முன்னாள் ஜனாதிபதிகளுக்காக பாதுகாப்பு செலவீனம் 1.5 பில்லியன் ரூபாவாகும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
இதில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் பாதுகாப்பு செலவீனம் ஆச்சரியப்பட வைக்கின்றது. கடந்த ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் மாதம் வரையிலான காலப்பகுதியில் அவருக்கு பாதுகாப்பு வழங்கும் இராணுவத்தினருக்கு 328 மில்லியன் ரூபாவும் பொலிஸாருக்கு 327 மில்லியன் ரூபாவும், ஜனாதிபதி செயலகம் ஊடாக 55 மில்லியன் ரூபா என்ற அடிப்படையில் மொத்தமாக 710 மில்லியன் ரூபா செலவழிக்கப்பட்டுள்ளது. இவை வெறும் இலக்கங்கள் அல்ல. அனைத்தும் மக்களின் வரிப்பணங்கள்.
முன்னாள் ஜனாதிபதிகளுக்கான முப்படையினரின் பாதுகாப்பு நீக்கப்பட்டதுடன் மஹிந்தவின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்ட நூறு பேர் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவுற்ற பிறகும் கூட நாமே நாட்டை பயங்கரவாதத்திலிருந்து மீட்டோம் என்ற பிரசாரத்தை மஹிந்த தரப்பினர் தொடர்ச்சியாக முன்னெடுத்து வந்தனர். நாட்டு மக்களாலேயே புறக்கணிக்கப்பட்டு வீட்டில் முடங்கிப் போயிருந்தாலும் மஹிந்த புராணம் பாடும் சிலர், இந்த பாதுகாப்பு குறைக்கப்பட்ட விவகாரத்தை அரசியலாக்க ஆரம்பித்துள்ளனர்.
பொது ஜன பெரமுனவின் உறுப்பினரான மனோஜ் கமகே, “மஹிந்தவுக்கு நூறு படையினர் அல்ல, ஆயிரம் பேரை பாதுகாப்புக்கு நியமித்தாலும் அதில் குறை காண முடியாது. ஏனென்றால், தமது சொந்து ஊருக்கே இராணுவத்தினர் சவப்பெட்டியில் செல்லும் யுகத்தை அவரே முடிவுக்குக் கொண்டு வந்தார்.
முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால, ரணில் ஆகியோருடன் மஹிந்தவை ஒப்பிட முடியாது. மஹிந்தவுக்கு எதிராக தேசிய மற்றும் சர்வதேச ரீதியிலும் அச்சுறுத்தல்கள் இருக்கின்றன” என ஊடவியலாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.
நாட்டை பாதுகாத்தமைக்காக முன்னாள் ஜனாதிபதிகளுக்கு பாதுகாப்பு வழங்குவது பொருத்தமானதாக இருந்தாலும் இந்நாட்டு மக்களை வேறு வழிகளில் இந்த முன்னாள் ஜனாதிபதிகள் பாதுகாத்தனரா என்ற கேள்விக்கு பதில்கள் இல்லை. யுத்தம் முடிவுற்றாலும் கூட இன்னும் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த முடியாத இவர்கள் தமது பாதுகாப்பை நினைத்து வருத்தப்படுகின்றனர்.
விடுதலை புலிகளுக்கு எதிரான யுத்தத்தை நேரடியாக செயற்படுத்திய இவர்கள் தமிழர்கள் மீதான பேரினவாத யுத்தத்தை மறைமுகமாக முடுக்கி விட்டவர்கள். அதன் பலாபலன்களை அனுபவித்தவர்கள் இந்நாட்டின் தமிழ் மக்களாவர். ஆகவே, முன்னாள் ஜனாதிபதிகள் இந்த நாட்டின் தமிழ் மக்களுக்கு எந்த விதத்திலும் பாதுகாப்பாக இருந்தவர்கள் இல்லை.
மக்களை கடன்காரர்களாக்கி விட்டு அவர்களின் பணத்திலேயே பாதுகாப்பாகவும் சொகுசாகவும் காலத்தை கடத்துவது எந்த வகையில் நியாயம் என்பது புரியவில்லை. மேலும், பொருளாதார நெருக்கடி காலங்களிலும் முன்னாள் ஜனாதிபதிகள் எவருமே தமது பாதுகாப்பு செலவீனங்களையும் சலுகைகளையும் குறைத்துக்கொள்ள முன்வரவில்லையென்பது முக்கிய விடயம்.
தேசிய மக்கள் சக்தியின் மூன்று மாத ஆட்சியில் தேங்காய், அரிசி விலை உயர்வுகளை சுட்டிக்காட்டுவோர் கடந்த காலத்தில் அவற்றின் மூலம் கோடிக்காணக்கான தரகுப்பணங்களை பெற்றுக்கொண்டு நாட்டிற்குக் கிடைக்க வேண்டிய வருமானத்தை சுருட்டிக்கொண்டவர்களாகவே உள்ளனர்.
மக்களின் வரிப்பணம் இவ்வாறு திருடர்களை பாதுகாத்த ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்கு செலவழிக்கப்படும் அதே வேளை, அரசியல்வாதிகள் வெளிநாடுகளில் சிகிச்சை பெறுவதற்கு ஜனாதிபதி நிதியம் மூலமாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. மக்களின் பணம் அவர்களுக்கே சென்றடைய வேண்டும் என்பதில் தேசிய மக்கள் சக்தி உறுதியாக உள்ளதாகத் தெரிகின்றது.
அநாவசிய செலவுகளை கட்டுப்படுத்துவதில் மெதுவாக காய்களை நகர்த்தி வருகின்றது அநுர அரசாங்கம். பாராளுமன்றத்தில் எம்.பிக்கள், அமைச்சர்களுக்குரிய சலுகைகளை குறைத்த அநுர வேறு வழிகளில் செலவுகளை கட்டுப்படுத்துவதில் உறுதியாக இருக்கின்றார்.
எனினும் முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு விடயத்தில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உடனடியாக சில முடிவுகளை எடுக்கவில்லையென்பதை சுட்டிக்காட்டுதல் அவசியம். அவர்களின் பாதுகாப்பு மற்றும் சலுகைகள் தொடர்பில் மறுபரிசீலனை செய்வதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டு அதன் அறிக்கையின் பிரகாரமே இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
மேலும் முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானங்கள் ஆறு மாதங்களுக்கொரு முறை மீள் பரிசீலனை செய்யப்படும் என்றும் அரசாங்கம் அறிவித்துள்ளமை முக்கிய விடயம்.
சிவலிங்கம் சிவகுமாரன்