‘வடக்கு மண்ணில் வாழும் மலையகப் பின்புலத்தை கொண்ட நாங்கள் உயர்மட்டத்தில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்பட்டவர்களாகவே நாட்களை கடத்துகிறோம். எங்களுடைய பிரச்சினைகளை தொடர்ந்தும் மறைத்துவைக்க முடியாது. இந்திய வீடமைப்புத்திட்டத்தை தவிர அபிவிருத்திசார்ந்த எந்தவொரு திட்டங்களும் எங்களுக்கு முன்னெடுக்கப்படுவதில்லை என்கிறார் கருப்பையா சேகர். (வயது 48)
கிளிநொச்சி மாவட்டத்துக்கு உட்பட்ட சாந்தபுரம் பகுதியில் வாழும் மலையக பின்புலத்தைக் கொண்டவரும் சமூக ஆர்வலருமான சேகரின் உளக்குமுறலே இது.
இவரது பெற்றோர் 1977 காலப்பகுதியில் தென்னிலங்கையில் ஏற்பட்ட இனக்கலவரம் காரணமாக பாதுகாப்பு கருதி மாத்தளையிலிருந்து இந்த பகுதிக்கு புலம்பெயர்ந்து சென்றுள்ளனர். மேற்குறிப்பிடப்பட்ட நபர் இந்த பகுதியிலேயே பிறந்து வளர்ந்துள்ளார். என்றாலும் மலையகத்தான் என்ற பாகுபாட்டை உணர முடிவதாகவே குறிப்பிடுகிறார். மலையக பின்புலம் கொண்ட மக்கள் வாழும் இந்த பகுதிகளில் தபால் நிலையம், போக்குவரத்து வசதி மற்றும் சமூர்த்தி காரியாலயம் என்பன இல்லை எனவும் சுட்டிக்காட்டினார்.
மேலும் இரணைமடுக்குளம் மற்றும் ஐயங்குளம் பகுதிகளில் நீர்ப்பாசனத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ள போதிலும் இங்குள்ள மக்களுக்கு போதுமான நீர்ப்பாசனத்திட்டம் இல்லாமையால் விவசாய நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாமல் கூலித்தொழிலை நம்பி வாழ வேண்டியுள்ளதாக கவலை வெளியிட்டார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் வாழும் மலையக பின்புலம் கொண்ட தமிழர்கள் தொடர்பில் வீரகேசரி அண்மையில் மேற்கொண்ட கள ஆய்வில் பல்வேறு விடயங்களை திரட்டக்கூடியதாக இருந்தது.
1970களில் தென்னிலங்கையில் ஏற்பட்ட இனக்கலவரம் காரணமாக வடக்கு, கிழக்கு பகுதிகளில் குடியேறிய இந்திய வம்சாவளிகள் காலஓட்டத்தோடு தங்களை இலங்கை தமிழர்களாக ஒருங்கிணைத்துக்கொண்டு வாழ பழகிக்கொண்டுள்ளதை அவதானிக்க முடிந்தது.
மலையகத்தில் வாழும் இந்திய வம்சாவளிகள் இன்றுவரை நிலவுரிமை வீட்டுரிமைக்காக போராடிவருகின்றனர். இவர்களது போராட்டத்துடன் ஒப்பிடுகையில் வடக்கில் புலம்பெயர்ந்து வாழும் இவர்கள் காணி உரிமையை பெற்றவர்களாகவும் இந்திய வீட்டுத்திட்டத்தின் கீழ் தனிவீடுகளையும் பெற்றுக்கொண்டுள்ளனர். ஆனால் அரசாங்கத்தின் ஏனைய அபிவிருத்தித் திட்டங்களான பாதை அபிவிருத்தி, குடிநீர் வசதி உள்ளிட்ட அபிவிருத்தித்திட்டங்கள், சமூர்த்தி உள்ளிட்ட நிவாரண கொடுப்பனவுகள் என அனைத்திலும் தங்களை மேல்மட்டத்தில் புறக்கணிப்பதாகவே தெரிவித்தனர்.
அதேவேளை இளந்தலைமுறையினர் தாங்கள் மலையகத்தை பூர்வீகமாக கொண்டவர்கள் என்பதை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. மாறாக தாம் இலங்கை தமிழரென்றே கூறுகின்றனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இந்த இளந்தலைமுறையினரும் ஏதோ ஒரு இடத்தில் புறக்கணிப்பை எதிர்கொள்வதாகவே தெரிவிக்கின்றனர்.
அதாவது கல்வித்தகைமைகளை கொண்டவர்கள் உயர் பதவிகளுக்கு செல்கின்றபோதிலும் அரசியலுக்குள் பிரவேசிக்கின்றபோதிலும் உயர்மட்டங்களில் புறக்கணிப்பொன்றை எதிர்கொள்வதாக சுட்டிக்காட்டுகின்றனர்.
வடக்கு மண்ணில் பிறந்து வளர்ந்த தாங்கள் புறக்கணிக்கப்படுகிறோமாயின் அதற்கு மலையகம் என்ற பின்புலம் மாத்திரமே காரணமாக இருக்க முடியும் என்பதை இவர்கள் உணர்கின்றனர். இந்த ஆய்வில் தமிழ் தேசியத்துடன் பெயரளவில் மாத்திரம் இங்குள்ள மக்கள் இணைத்துக்கொள்ளப்பட்டவர்களாக உணர்வதை அவதானிக்க முடிந்தது. மேற்படி ஆய்வில் திரட்டப்பட்ட விடயங்கள் வருமாறு:
கிளிநொச்சி மாவட்டத்தின் பாரதிபுரம், மலையாளபுரம், கிருஸ்ணபுரம், செல்வநகர், மாயவனூர், தருமபுரம், சாந்தபுரம், பொன்நகர், உதயநகர், ஆணைவிழுந்தான், ஜெயபுரம், கோணாவில் ஆகிய பிரதேசங்களில் மலையக பின்புலம் கொண்ட ஒரு இலட்சம் தமிழர்கள் வாழ்கின்றனர்.
இங்கு வாழும் மலையக பின்புலம் கொண்ட தமிழர்கள் தொடர்பான கள ஆய்வானது கரைச்சி பிரதேச செயலகத்துக்குட்பட்ட சாந்தபுரம் பகுதியில் மேற்கொள்ளப்பட்டது.
கிளிநொச்சி நகரிலிருந்து 9 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள இந்த பிரதேசத்தில் 2011 ஆண்களும் 2025 பெண்களும் வசிப்பதுடன் இவர்களில் 600 பாடசாலை செல்லும் மாணவர்களும் உள்ளடங்குகின்றனர். (சாந்தபுரம் பகுதிக்கு பொறுப்பான கிராமசேவகர் கணபதி சத்தியசீலன் வழங்கிய தகவல்). விவசாயமே இவர்களது பிரதான சீவனோபாயமாக இருக்கிறது.
வடக்கில் புலம்பெயர்ந்து வாழும் இந்திய வம்சாவளி தமிழர்கள் தொடர்பில் இந்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடல்களில் இந்த மக்கள் புறக்கணிப்புக்கு மத்தியிலேயே தாம் வாழ்ந்துவருவதாக தெரிவிக்கின்றனர். சிலர் பாதுகாப்பு நிமித்தம் தங்களுடைய பெயர்களையும் முகங்களையும் ஊடகங்களுக்கு காட்டுவதை இவர்கள் தவிர்க்கின்றதை அவதானிக்க முடிகிறது.
‘1978ஆம் ஆண்டு இனக்கலவரம் காரணமாக நாவலப்பிட்டி பகுதியிலிருந்து கிளிநொச்சி சாந்தபுரம் பகுதிக்கு பெற்றோருடன் குடியேறினோம். பாதுகாப்பு கருதி நாங்கள் இங்கு வந்துசேர்ந்தபோதிலும் எவ்வித முன்னேற்றங்களுமின்றி வறுமைக்கு மத்தியிலேயே காலத்தை கடத்துகிறோம் என்கிறார் ராஜேந்திரம் ஜெயந்தினி (வயது 55)’.
மூன்று பிள்ளைகளைக் கொண்ட ஐவர் அடங்கிய குடும்பத்தில் வாழும் இவர் பொருளாதார ரீதியில் இங்குள்ள மக்கள் பின்தள்ளப்பட்டவர்களாக வாழ்ந்து வருவதாகவே தெரிவிக்கிறார். போதுமான போக்குவரத்து வசதிகள் கூட இல்லை எனவும் வீதிகள் புனரமைப்பின்றி காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டும் இவர், முறையான நீர்ப்பாசன திட்டங்கள் இல்லாமையால் விவசாயத்தைக் கூட முன்னெடுக்க முடியாமல் உள்ளதாக சுட்டிக்காட்டுகிறார்.
வட மாகாணத்துக்குட்பட்ட கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா ஆகிய மாவட்டங்களில் இலங்கைத் தமிழர்கள் என அடையாளப்படுத்தப்படும் தமிழர்கள் செறிந்து வாழுகின்றனர். ஆனால், இவர்களில் கிளிநொச்சி மாவட்டத்தில் 54 சதவீதமான மலையகத்தை பின்புலமாகக் கொண்ட இந்திய வம்சாவளி தமிழர்களே வாழ்ந்து வருகின்றனர்.
(இனத்துவ கற்கைகளுக்கான சர்வதேச நிலையமும் சர்வதேச கற்கைகளுக்கான பண்டாரநாயக்க மையமும் இணைந்து ‘இந்திய வம்சாவளி தமிழ் மக்களின் 200 வருடங்கள்’ என்ற தொனிப்பொருளில் 2023இல் நடத்திய சர்வதேச மாநாட்டில் இந்தத் தரவு சுட்டிக்காட்டப்பட்டிருந்தது).
அதேவேளை வடக்கில் குடியேறியுள்ள மலையகம் பின்புலம் கொண்ட தமிழர்கள் என்ற பிரத்தியேக தரவுகள் பிரதேச செயலகங்களிடம் இல்லை என்ற தகவலை கிளிநொச்சி பிரதேச செயகலகத்தின் பிரதி செயலாளர் ராஜ் வினோத் உறுதிபடத் தெரிவித்தார்.
இங்குள்ள மக்கள் புறக்கணிக்கப்படுவதாக தெரிவிக்கின்றமை தொடர்பில் வினவியபோது,
“முல்லைத்தீவு மாவட்டத்திலும் இந்திய வம்சாவளிகள் கணிசமானோர் வாழ்ந்து வருகின்றனர். குறிப்பாக கிளிநொச்சி மாவட்டத்தின் சாந்தபுரம், ஆணைவிழுந்தான், பொன்நகர், பாரதிபுரம், மலையாளப்புரம், தர்மபுரம், ஆனந்தபுரம் கிழக்கு, செல்வாநகர் உள்ளிட்ட பிரதேசங்களிலும் சாந்தபுரம் பிரதேசத்தில் 90 சதவீதமானோர் இந்திய வம்சாவளி தமிழர்கள் வாழ்கின்றனர்.
அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற வேலைத்திட்டங்களில் புறக்கணிப்புகளுக்கு இடம்கொடுக்கப்படுவதில்லை. இங்கு வாழும் இந்திய வம்சாவளிகளில் பெரும்பாலானவர்கள் உயர் பதவிகளிலும் அரசியலிலும் காணப்படுகின்றனர். ஆனால், பொருளாதார ரீதியில் இவர்கள் மத்தியில் பின்னடைவொன்றை காணக்கூடியதாக உள்ளது. இங்குள்ள மக்கள் விவசாயத்தில் ஈடுபடுகின்றனர். இவர்களுக்கு குடிநீர் பிரச்சினை நீண்டகாலமாக நிலவி வருகின்றது. என்றாலும் தற்போது நீர்ப்பாசனத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதில் கரைச்சி பிரதேச செயலகத்துக்குட்பட்ட இந்த பகுதிகளும் உள்வாங்கப்பட்டுள்ளன” என்றார்.
இந்திய வம்சாவளிகளின் வரலாற்றுத் தளும்புகளின் ஒரு பார்வை
1823 காலப்பகுதிகளில் தென்னிந்தியாவிலிருந்து பிரித்தானியர்களால் கூலிகளாக அழைத்துவரப்பட்ட இந்திய வம்சாவளி தமிழர்கள் மலையகத்திலும் தென்பகுதிகளிலும் அதிகளவில் குடியமர்த்தப்பட்டனர். அதற்கு தேயிலை, கோப்பி உள்ளிட்ட பயிர்ச்செய்கைகள் காரணங்களாக அமைந்தன.
1931இல் டொனமூர் சீர்த்திருத்தில் மலையக மக்களுக்கு வழங்கப்பட்ட குடியுரிமை 1949இல் பறிக்கப்பட்டு நாடற்றவர்கள் ஆக்கப்பட்டனர். (அப்போது 7 பேர் பாராளுமன்றம் சென்றதும் மறுக்க முடியாது). பின்னர் 1964 சிறிமா சாஸ்திரி ஒப்பந்தம் ஊடாக சுமார் 9 இலட்சம் பேரில் ஏறக்குறைய 418,000 பேர் திருப்பி அனுப்பப்பட்டனர். 2003 இல் இறுதித்தீர்வாக எஞ்சியிருந்த அனைத்து மலையகத்தவர்களுக்கும் குடியுரிமை வழங்கப்பட்டது. இதற்கிடையில் இவர்களில் பலர் இலங்கையின் பல பாகங்களுக்கும் புலம்பெயர்ந்துவிட்டார்கள்.
இந்திய வம்சாவளிகளின் புலம்பெயர்வுக்கான காரணங்கள்
1956, 1978, 1983 ஆகிய காலப்பகுதிகளில் இலங்கையில் ஏற்பட்ட இனக்கலவரங்களால் சிதறிப்போன இந்திய வம்சாவளிகளில் பலர் பாதுகாப்பு கருதி இலங்கையின் பல பாகங்களில் குடியேறினார்கள். அவர்களில் சிலர் இலங்கைத் தமிழர்கள் வாழும் பகுதியென அடையாளப்படுத்தப்படும் வடக்கு, கிழக்கு பகுதிகளுக்கு புலம்பெயர்ந்தனர். தென் பகுதிகளில் குடியேறிய இந்திய வம்சாவளி மக்களில் பலரும் 1983 கலவரத்துக்கு பின்னர் வடக்கு, கிழக்கு நோக்கி புலம்பெயர்ந்தனர்.
இவ்வாறு வடக்கு பகுதியில் புலம்பெயர்ந்து வாழும் மலையக பின்புலத்தைக் கொண்டவர்கள் புறக்கணிப்புக்கு மத்தியில் வாழ்வதை மக்களது வாயிலாகவே அறியக்கூடியதாகவுள்ளது.
இவர்கள் புறக்கணிக்கப்படுவதாக தெரிவிப்பது ஏன்?
பாதுகாப்பு கருதி மலையகத்திலிருந்து புலம்பெயர்ந்து வடக்கு, கிழக்கு பகுதிகளில் வாழும் இந்த மக்கள் யுத்தம் நிறைவடைந்த பின்னர் தமக்குரிய நிலத்தில் குடியிருப்புகளை அமைத்துக்கொண்டு வாழ்ந்து வருகின்றபோதிலும் உயர்மட்டத்தினால் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுவதாகவே சுட்டிக்காட்டுகின்றனர். தமக்குரிய நில உரிமை பெயரளவில் மாத்திரம் கிடைத்துள்ளதாகவும் அதற்குரிய ஆவணங்களை பெற்றுக்கொள்வதில் கூட இன்று வரை பல்வேறு இழுத்தடிப்புகள் காணப்படுவதாகவே தெரிவிக்கின்றனர்.
கிளிநொச்சி மாவட்டத்தின் சாந்தபுரம் பகுதியில் பரந்துவாழும் 1000 மலையக பின்புலம் கொண்ட தமிழர்களில் அதிகளவானோர் கூலித்தொழிலை பிரதான தொழிலாகக் கொண்டுள்ளனர். இவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான போக்குவரத்து, கல்வி உள்ளிட்ட விடயங்களில் பாரபட்சம் காட்டப்படுவதாக இவர்கள் மத்தியில் மேற்கொண்ட கள ஆய்வில் தெரிவிக்கப்பட்டது.
அதாவது, திட்டமிட்ட வகையில் இவர்கள் வாழும் பகுதிகளுக்கு மாத்திரம் போதுமான வீதி புனரமைப்பு விடயங்கள் மேற்கொள்ளப்படவில்லை என தெரிவிக்கும் இந்த மக்கள், தமது பிள்ளைகள் சாந்தபுரம் கலைமகள் வித்தியாலயத்தையே நம்பியிருப்பதாக தெரிவிக்கின்றனர்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுடன் ஒப்பிடுகையில், நாளாந்தம் 2500 ரூபா முதல் 3000க்கும் அதிகமான நாட்கூலியை இவர்கள் உழைக்கின்றபோதிலும் அவர்களது வாழ்க்கைச் செலவை சமாளிக்க இயலாதவர்களாகவே வாழப்பழகியுள்ளனர்.
‘இரணைமடு குளத்துக்கு அருகாமையில் சாந்தபுரம் பகுதி அமைந்துள்ளது. ஆனால் இன்றுவரை போதிய நீர்பாசன வசதியில்லாமல் விவசாய நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாமல் தொடர்ந்தும் வறுமையிலேயே தவிக்கிறோம். இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட 5 இலட்சம் வீட்டுத்திட்டத்தை தவிர வேறு எந்த வரப்பிரசாதங்களும் எங்களுக்கு கிடைப்பதில்லை. நிவாரணங்கள் வழங்கப்பட்டால்கூட கடைசியாகத்தான் எங்களுக்கு வந்துசேரும். அந்தளவு தூரம் நாங்கள் புறக்கணிப்புக்கு மத்தியில் வாழ வேண்டியிருக்கிறது என்கிறார் புஸ்பராஜா ராஜேஸ்வரி (வயது 65).’
சாந்தபுரம் பகுதியில் வசிக்கும் இவர் பிள்ளைகளின் தயவிலேயே வாழ்ந்து வருகிறார். 1978ஆம் ஆண்டு மாத்தளையிலிருந்து இனக்கலவரம் காரணமாக குடும்பத்தோடு புலம்பெயர்ந்து சாந்தபுரம் பகுதியில் குடியேறிய இவர், இன்று வரை தாம் வறுமையின் பிடிக்கு மத்தியிலேயே வாழ்ந்து வருவதாக தெரிவித்தார். நிவாரண உதவிகள் கூட இந்த பகுதிக்கு பாரிய இழுத்தடிப்புக்கு மத்தியிலேயே கிடைப்பதாக தெரிவித்திருந்தார்.
“எமது பாடசாலையில் விளையாடுவதற்கு மைதானம் இல்லை. ஆசிரியர்களுக்கான பற்றாக்குறை காணப்படுகிறது. பாடசாலையில் மலசலக்கூடம் உள்ளிட்ட வளப்பற்றாக்குறையுடன் எமது பாடசாலை இயங்கி வருகிறது” என்கிறார் சதாசிவம் ரிபானா (வயது 14).
சாந்தபுரம் கலைமகள் வித்தியாலயத்தில் தரம் 9இல் கல்வி பயிலும் மாணவியொருவரின் அபிப்பிராயமே இது. 600 இந்திய வம்சாவளி மாணவர்கள் பயிலும் இந்த பாடசாலையில் சாதாரண தரம் வரை மாத்திரமே உள்ளது. உயர்தரத்தை ஆரம்பிக்குமாறு கோரிக்கை விடுத்தபோதிலும் எவ்வித நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை எனவும் இங்கு வளப்பற்றாக்குறை, ஆசிரியர் பற்றாக்குறை என்பன மிக நீண்டகாலமாக காணப்படும் அதேவேளை மாணவர்களின் இடைவிலகல் என்பது தொடர்ந்த வண்ணமே இருப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனர். இதற்கு வறுமை நிலையே பிரதான காரணம் எனவும் சுட்டிக்காட்டினார்கள்.
அதேநேரம் பாரதிபுரம் மகா வித்தியாலயத்தில் பல போராட்டத்துக்கு மத்தியில் அண்மையில் உயர்தரம் ஆரம்பிக்கப்பட்டுள்ளபோதிலும் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு தேவையான வளங்கள் பற்றாக்குறையாகவே இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
“தமிழ் தேசியம் என்பது வடக்கு, கிழக்கை பூர்வீகமாக கொண்டவர்களுக்கு மட்டுமே சொந்தமானது என்ற எண்ணமே இங்குள்ள அரசியல் கலாசாரமாக உள்ளதால் நாங்கள் புறக்கணிக்கப்படுகின்றோம்” என்கிறார் சேதுபதி (வயது 50). இவர்களது அரசியல் பிரவேசம் தொடர்பில் கிளிநொச்சியை சேர்ந்த அரசியல் செயற்பாட்டாளர் ஒருவரது பதிவே இது.
கிளிநொச்சி பிரதேச செயலகத்துக்குட்பட்ட சாந்தரபுரம், பாரதிபுரம், மலையாளபுரம் உள்ளிட்ட பிரதேசங்களில் உட்கட்டமைப்பு வசதிகளான குடிநீர், மலசலக்கூடம், நிலைய குடியிருப்பு கூட இன்றி மக்கள் வாழ்வதாக சுட்டிக்காட்டும் இவர் இம்மக்கள் அரசியல் நீரோட்டத்தில் பாரபட்சத்துக்குள்ளாகி வருவதாகவும் தெரிவிக்கிறார்.
இந்த மக்களது அரசியல் பிரவேசம்
கிளிநொச்சி மாவட்டத்துக்குட்பட்ட கரைச்சி, பச்சிலைப்பள்ளி, பூநகரி ஆகிய மூன்று பிரதேச சபைகளிலும் கணிசமானோர் மலையக பின்புலத்தை கொண்டவர்களாக இருப்பதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. அதில் கரைச்சி பிரதேச சபையில் அங்கம் வகிக்கும் 35 பேரில் 16 பேர் மலையக பின்புலத்தை கொண்டிருக்கின்றனர்.
எனவே இந்த அத்திவாரத்தைக் கொண்டு மாகாண சபை, பாராளுமன்றத் தேர்தல்களில் இவர்களுக்கு களமிறங்கக்கூடிய வாய்ப்புகள் இருந்தாலும் கூட அதற்கான சந்தர்ப்பங்கள் மறைமுகமாக மறுக்கப்படுவதாகவே தெரிவிக்கப்படுகிறது. என்றாலும் தமக்குரிய வாய்ப்புகளை கேட்டு பெறுமளவுக்கு போதுமான புள்ளிவிபரங்கள் இதுவரை திரட்டப்படவில்லை என சுட்டிக்காட்டப்படுகிறது. இதற்கு அரசியல் பின்புலம் மிகப் பிரதான காரணமாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனிடம் வினவியபோது,
‘வடக்கு மண்ணில் புலம்பெயர்ந்து வாழும் மலையக பின்புலம் கொண்ட தமிழர்கள் என்ற பாகுபாடு தற்போது இங்கு கிடையாது. அங்கிருந்து புலம் பெயர்ந்து வாழும் மக்கள் மேட்டுநிலங்களில் குடியமர்த்தப்பட்டதால் குடிநீருக்கான பிரச்சினை காணப்படுகிறது. இது கிராமபுறங்களுக்கு மாத்திரமின்றி நகர்புறங்களிலும் காணப்படுகிறது. என்றாலும் கிளிநொச்சி மாவட்டத்துக்குட்பட்ட இரணைமடு நீர்ப்பாசனத்திட்டத்தின் ஊடாக நகர்ப்புறங்களுக்கு குழாய் வழி நீர் விநியோகத்தை முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடைமுறைப்படுத்தியிருந்தார்.
ஆனால் அருகிலுள்ள சாந்தபுரம், மலையாளபுரம், பாரதிபுரம் போன்ற கிராமங்களுக்கு இன்னும் குடிநீர் பிரச்சினை தொடர்ந்துகொண்டே இருக்கிறது. இதற்கு அதிகாரத்தில் இருந்தவர்களே பொறுப்புக்கூற வேண்டும். இந்த மக்களுடைய அரசியல் பிரவேசம் என்பது தற்போது நன்றாகவே அதிகரித்துள்ளது. பிரதேச சபை மட்டத்திலிருந்து மாகாண சபைக்குள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமுள்ளன. நடந்து மடிந்த பாராளுமன்ற தேர்தலிலும் கூட மலையக பின்புலம் கொண்ட இருவர் எமது தமிழ் அரசு கட்சியின் ஊடாக நிறுத்தப்பட்டார்கள்.
1000 வாக்குகள் கூட பெறமுடியவில்லை. இந்த சமூகத்திலிருந்து ஒருவரை தெரிவு செய்து பாராளுமன்றுக்கு அனுப்புவதென்பது அந்த மக்களுடைய கைகளிலேயே தங்கியுள்ளது. எனவே வடக்கு, கிழக்கில் பிரதேசவாதத்துக்கு இடமில்லை. மாறாக அபிவிருத்தித் திட்டங்களில் பாரபட்சம் இன்னமும் நிலவுகிறது.
இவர்களுக்கு காணி பிரச்சினை உள்ளது. அதாவது யுத்த காலத்தில் பறிபோன காணிகள் இங்குள்ள பலருக்கு கிடைக்காமல் உள்ளது. ஆனால், அவை படிப்படியாக விடுவிக்கப்பட்டுள்ளன. அதேநேரம் பொருளாதார ரீதியிலும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். கிளிநொச்சி சேவை சந்தையில் மலையக பின்புலம் கொண்ட வர்த்தகர்களே அதிகம் உள்ளனர். ஆனால் இவர்களது தொழில் முயற்சிக்குரிய தெரிவுகளால் இவர்கள் பொருளாதார ரீதியில் முன்னேற முடியாமலுள்ளனர்.
அரச நியமனங்கள் எனும்போது பெரும்பாலானவை போட்டிப் பரீட்சைகள் ஊடாகவே நடைபெறுகின்றன. ஆனால் நேர்முகத் தெரிவில் பாரபட்சம் நிலவுகிறது என்பதை ஏற்றுக்கொள்கிறோம்.
நெதர்லாந்து அரசாங்கத்தின் நிதி உதவியின் கீழ் மலையாளபுரம், சாந்தபுரம் போன்ற பகுதிகளில் 5400 கிலோமீற்றர் வரை கார்பட் வீதி போடப்பட்டுள்ளது.
2016 வரைக்கும் காணப்பட்ட 12,000 சமூர்த்தி பயனாளிகளின் எண்ணிக்கை 2019 நல்லாட்சி காலத்தில் 24,000ஆக மாற்றப்பட்டது. இதில் மலையக பின்புலம் கொண்ட மக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது” என்றார்.
இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனிடம் வினவியபோது,
“வடக்கு மண்ணில் வாழும் மலையக பின்புலம் கொண்ட மக்கள் இலங்கை தமிழர்களாக வாழ பழகிவிட்டார்கள். அரசியல் ரீதியிலான எந்தவித பாரபட்சங்களும் காட்டப்படுவதில்லை. அதற்காக முழுமையாகவே அரசியல் புறக்கணிப்பு இல்லையென கூறிவிடமுடியாது. அதற்காக ஒருசிலரது செயற்பாடுகளால் முழுமையாக இவர்கள் புறக்கணிக்கப்படுவதாக சுட்டிக்காட்டுவதை ஏற்றுக்கொள்ளவும் முடியாது.
வீதி அபிவிருத்தி உள்ளிட்ட உட்கட்டமைப்பு திட்டங்கள் முன்னெடுக்கப்படும்போது முன்னுரிமையின் அடிப்படையில் முன்னெடுக்கப்படும். ஆகவே எந்தெந்தப் பகுதிகளுக்கு தேவை அதிகமாக காணப்படுகிறதோ அந்தந்த பகுதிகளுக்கு அதற்குரிய வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும்.
மலையகத்திலிருந்து புலம்பெயர்ந்துள்ள மக்களில் 90 வீதமானோர் இன்று சொந்த நிலத்தில் இந்திய வீட்டுத்திட்டத்தின் ஊடாக தனிவீடுகளில் நிம்மதியாக வாழ்கின்றனர். அவர்களது பொருளாதார மேம்பாட்டுத்திட்டங்களுக்கு அந்தந்த மக்களும் பொறுப்புடையவர்களாகவே இருக்கின்றனர். எனவே வடக்கு மண்ணில் பாரபட்சம் நிலவுதாக குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது” என்றார்.
இந்த மக்கள் தொடர்பில் கல்விமான்கள் தெரிவிப்பது
இந்த மக்களது பூர்வீகத்தை அடிப்படையாகக் கொண்டு எதிர்வரும் காலங்களில் மேற்கொள்ளப்படும் கணக்கெடுப்புக்களில் இதற்குரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென்பது சமூக ஆய்வாளர்களது அபிப்பிராயமாக உள்ளது. அதேநேரம் புவியியல் ரீதியான மாற்றங்களால் வேறுபட்டுள்ள தொப்புள்கொடி உறவுகள் புறக்கணிப்புக்கு மத்தியில் வாழும் அவநிலையிலிருந்து விடுபட்டு அவர்களும் தேசிய நீரோட்டத்துக்குள் இணைத்துக்கொள்ளப்பட வேண்டும் என்ற கருத்தும் வலுப்பெற்றுள்ளது.
பேராசிரியர் ஏ.எஸ். சந்திரபோஸ்
வடக்கு, கிழக்கில் உள்ளவர்கள் கால ஓட்டத்தில் இலங்கை தமிழர்களாக ஒருங்கிணைந்து கொள்வதும் அதுபோல தெற்கில் குடியேறிய இந்திய தமிழர்கள் கால ஓட்டத்தில் சிங்கள மக்களாக ஒருங்கிணைந்துகொள்வதும் தவிர்க்க முடியாத ஒரு விடயமாக இருக்கிறது.
இந்திய வம்சாவளிகள் என்ற பிரிவுக்குள் இவர்களை மீளிணைக்கும் முயற்சி என்பது தற்காலிகமானதாகவே அமையும். காலப்போக்கில் அவர்கள் காலஓட்டத்தோடு அந்தந்த சமூகத்தோடு இணைந்து செல்வார்களே ஒழிய, தாம் இசைவாக்கமடைந்துள்ள கலாசாரம், வாழ்க்கைச்சூழலை மாற்றிக்கொள்வதென்பது சாத்தியமற்றது.
வடக்கில் இருப்பவர்கள் புதிய சமூகக் குழுவாக எதிர்காலத்தில் உருவாகக்கூடிய சந்தர்ப்பங்களும் காணப்படுகின்றது என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். உதாரணமாக சாதி கட்டமைப்பாகவோ அல்லது தொழில் ரீதியாகவோ உருவாகக்கூடிய சந்தப்பங்களும் காணப்படுகின்ற நிலையில் இந்திய வம்சாவளிகள் என்ற வட்டத்துக்குள் எதிர்காலத்தில் இவர்களை ஒன்றிணைப்பதென்பது சாத்திமற்றது என்றார்.
சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி யசோதரா கதிர்காமத்தம்பி
இந்திய வம்சாவளி மக்கள் மலையகத்துக்குள் மாத்திரமின்றி இலங்கை முழுவதும் பரந்து வாழ்கின்றனர். இதனை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.
உலகளாவிய ரீதியில் புலம்பெயர்ந்து செல்லும் மக்கள் அந்நாட்டு கலாசாரத்துக்குள் உள்வாங்கப்படுகிறார்கள். காலப்போக்கில் அந்நாட்டின் பிரஜைகளாக மாறிவிடுவார்கள். இதுவே யதார்த்தம். இதேபோன்றுதான் மலையக பிரதேசங்களிலிருந்து இடம்பெயர்ந்து வடக்கு, கிழக்கில் வாழும் இந்திய வம்சாவளிகள் உள்ளூர் கலாசாரம் உள்ளிட்ட ஏனைய நடைமுறைகளை பல வருடங்களாக பின்பற்றி வருகின்றனர். இது ஒன்றும் தவறான விடயமல்ல. இலங்கை தமிழர்கள் என்ற அடிப்படையில் மொழி, இன ரீதியிலான கலாசாரத்தை ஏற்றுக்கொண்டவர்களாக இங்கு வாழும் மலையகத் தமிழர்கள் மாறிவிட்டனர்.
ஆனால் இங்கு பிரச்சினைக்குரிய விடயம் என்னவெனில், இந்திய வம்சாவளிகள் என்ற அடையாளத்தை கொண்ட இந்த மக்கள் புறக்கணிக்கப்படுவதாக தெரிவிக்கின்றனர். எனவே அதனை கண்டும் காணாததை போன்று இருக்க முடியாது. இவ்வாறு இடம்பெயர்ந்து வாழும் மக்கள் எவ்வாறான விடயங்களில் புறக்கணிக்கப்படுகின்றார்கள்.
இந்த மக்களுக்கு பாரபட்சம் இழைக்கப்படுவதாக தெரிவிக்கப்படுவதற்கு என்ன காரணம், அவர்களது பிரச்சினைகள் என்ன என்பது தொடர்பாக ஆய்வு செய்வது மட்டுமன்றி அவர்களை பாராளுமன்றம், மாகாண சபை, உள்ளுராட்சி சபைகளில் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள் உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்கு இந்திய வம்சாவளி மக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
சமூக செயற்பாட்டாளர் அருட்தந்தை சக்திவேல் கருத்து தெரிவிக்கையில்,
1970களில் இலங்கையின் தென்பகுதிகளில் ஏற்பட்ட இனக்கலவரம் காரணமாக பாதுகாப்பு கருதி வடக்கு, கிழக்கு பகுதிகளில் குடியேறிய மலையக பின்புலம் கொண்ட தமிழர்கள் தங்களுடைய அடையாளத்தை மாற்றிக்கொண்டு வாழும் மண்ணுக்கு ஏற்ப மொழி, கலாசாரம் பாரம்பரியம் என தங்களை மாற்றிக்கொண்டு வாழப் பழகிவிட்டார்கள். இவர்களில் மூத்த குடிகள் மத்தியில் தாம் மலையக பின்புலம் கொண்டவர்கள் என்ற நிலைப்பாடு இருந்தாலும் கூட தற்கால பரம்பரையினருக்கு பூர்வீகம் தொடர்பான சிந்தனை இல்லை. காரணம், இவர்கள் இந்த மண்ணிலேயே பிறந்து இங்குள்ள கலாசாரத்தை பின்பற்றி இலங்கை தமிழர்களாகவே வாழ்கின்றனர்.
இந்நிலையில் தமது வறுமை தொடர்பில் பொதுவானதொரு பார்வையே இவர்கள் மத்தியில் நிலவுகிறது. எனவே காலப்போக்கில் இந்த மக்கள் இலங்கை தமிழர்களாகவே ஒருங்கிணைந்துக்கொள்வார்கள். மாறாக, மலையகம் எனும் பூர்வீகம் தொடர்பான மோகம் இவர்கள் மத்தியில் இருக்கப்போவதில்லை. அது குறையென கூற முடியாது. காரணம், வாழும் மண்ணுக்கு ஏற்ப வாழப்பழகுவது மனித இயல்பு. என்றாலும் இந்த மக்கள் அபிவிருத்தித்திட்டங்கள் ஊடாக புறக்கணிக்கப்படுவதாகவே நினைக்கின்றார்கள்.
உட்கட்டமைப்பு வசதிகள், அபிவிருத்தித்திட்டங்கள் மற்றும் அரச சலுகைகள் என அனைத்திலும் ஒருவித பாரபட்சம் நிலவுவதாகவே கருதுகின்றன. இதனை படித்த இளம் தலைமுறையினர் ஏற்றுக்கொள்கிறார்கள். காரணம் இவர்கள் பெரும் சிரமங்களுக்கு மத்தியில் ஒருகட்டத்தில் உயர் நிலைகளுக்கு செல்லுகின்றபோது தமிழ் தேசியம் என்பதற்குள் இவர்கள் மலையக பின்புலம் காரணமாக புறக்கணிக்கப்படுகிறார்கள்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில் இதனை ஏற்றுக்கொள்கிறார்கள். ஆகவே தமிழ் தேசியம் எனும் சுயநல சிந்தனை வாதம் வேரூன்றியிருப்பதால் இவர்கள் புறக்கணிக்கப்படுவதை சுட்டிக்காட்டியாக வேண்டும். என்றாலும் காலப்போக்கில் மலையக பின்புலம் கொண்ட மக்கள் என்ற அடையாளம் இல்லாமல்போகும்போது இவர்கள் முழுமையாக தமிழ் தேசியத்துக்குள் உள்வாங்கப்படுவார்கள் என்றார்.
இலங்கையில் புலம்பெயர்ந்து வாழும் இந்திய வம்சாவளி மக்கள் தாம் வாழும் சூழலுக்கேற்ப இரண்டர கலந்து வாழ கற்றுக்கொண்டபோதிலும் புறக்கணிப்பு, கலாசார மாற்றத்துடன் வாழ்வதென்பது மிகக்கொடுமையானது. அதிலும் இந்திய வம்சாவளி இளம்தலைமுறையினர் தமது வரலாறு அறியாமலுள்ளதென்பது தேவனைக்குரியது.
அதேநேரம் இந்த மக்களது பிரச்சினை என்பது சட்ட ரீதியாக தீர்க்கப்பட வேண்டிய ஒன்றாக இருக்கின்ற நிலையில் இந்த சமூகத்துக்கு ஆரோக்கியமான வாழ்க்கைச்சூழலை ஏற்படுத்திக்கொடுப்பதை உறுதிப்படுத்துவது அந்தந்த சமூகம் சார்ந்த பிரதிநிகளின் கைகளிலேயே தங்கியுள்ளது.
(நிவேதா அரிச்சந்திரன்)
மேற்படி ஆய்வு மேற்கொள்ளப்பட்ட கிளிநொச்சி சாந்தபுரம் பகுதியின் அமைவிடம்: