தைப்பொங்கல் மதங்களைக் கடந்து தமிழ் மக்கள் அனைவராலும் கொண்டாடப்படுகின்ற ஒர் பண்பாட்டுப் பெருவிழா. இயற்கையைப் போற்றுகின்ற இவ்விழாவில் இயற்கைக்கு இசைவான மண்பானைகளிலேயே தொன்றுதொட்டுப் பொங்கல் இடம்பெற்று வந்துள்ளது. ஆனால், வசதி கருதி மண்பானைகளைத் தவிர்த்து அலுமியப் பானைகளில் பொங்கும் போக்கு எம்மிடையே அதிகரித்துள்ளது.

அலுமியப் பாத்திரங்களை முற்றாகத் தவிர்க்க இயலாது போனாலும் தைப்பொங்கல் போன்ற பண்பாட்டுப் பெருநாட்களிலாவது மட்பாண்டங்களைப் பயன்படுத்துவோம் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

நல்லூர் திவ்ய ஜீவன சங்க மண்டபத்தில் நேற்று வியாழக்கிழமை (09) இடம்பெற்ற பசுமை இயக்கத்தின் மண்பானைப் பொங்கல் பொதிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே பொ. ஐங்கரநேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் உரையாற்றுகையில்,

அலுமினியம் பாரம் இல்லாத ஒரு உலோகம் என்பதால் கையாள்வதற்கு சுலபமானது. உலோகம் என்பதால் இலகுவில் வெப்பத்தைக் கடத்தி சமையலை விரைந்து முடிக்க வல்லது. வளைந்து நெளிந்தாலும் ஒருபோதும் உடைந்துவிடாது, விலையும் மலிவானது. இவை போன்ற காரணங்களால் சமையல் அறைகளில் மட்பாத்திரங்களைப் புறந்தள்ளி அலுமினியம் இன்று கோலோச்சுகின்றது.

அலுமினியப் பாத்திரங்களில் உணவு சமைக்கும்போது அலுமினியம் உணவுடன் கலப்பதைத் தடுக்கும் பொருட்டுப் பாத்திரத்தின் உட்பகுதியில் அலுமினியம் ஒட்சைட்டுப் படலம் இடப்படுகிறது.

அலுமினியப் பாத்திரங்களைத் தேய்த்துக் கழுவும்போது அலுமினியம் ஒட்சைட்டு தேய்வடைந்து உணவுப் பாதுகாப்பு கேள்விக்குறியாகி விடுகிறது.

மேலும், சமைக்கப்படும் உணவுப் பொருளின் அமில, கார இயல்பு, சேர்க்கப்படும் உப்பு, சமைக்கும் வெப்பநிலை என்பனவற்றைப் பொறுத்து அலுமினியம் கொஞ்சம் கொஞ்சமாகக் கரைந்து உணவுடன் கலப்பது அறியப்பட்டுள்ளது. உணவுடன் உடலில் கலக்கும் அலுமினியம் மூளை நரம்புகளைப் பாதிப்பதோடு ஏற்கனவே சிறுநீரக நோயுடையவர்களின் சிறுநீரகங்களை மேலும் பாதிப்படையவும் செய்கிறது என ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

மட்பாத்திரங்கள் அவற்றின் மேற்பரப்பில் இயற்கையாகவே உள்ள நுண்ணிய துவாரங்கள் ஊடாக வெப்பத்தைப் பரவி உணவைச் சீராக வேகவைக்கிறது. மெதுவாகவே சூடுபடுத்துவதால் உணவில் போசணைப் பொருட்களின் அழிவு தவிர்க்கப்படுகிறது.

மண் கார இயல்பு கொண்டதால் உணவில் அமிலத் தன்மையை நடுநிலைப்படுத்துகிறது. சமைக்கும்போது மண்ணிலிருந்து கனியுப்புகள் உணவுடன் கலப்பதால் உணவு கூடுதல் போசணைப் பெறுமானம் பெறுகிறது. இவற்றோடு, உணவின் வாசனையுடன் மண் வாசனையும் சேர்ந்து உணவுக்குக் கூடுதல் சுவையும் கிடைக்கிறது.

எல்லாவற்றையும் விரைவாகச் செய்துவிட வேண்டும் என்று நினைக்கும் நாம் உடல் ஆரோக்கியத்தைப் பேண வேண்டிய சமையலையும் அவ்வாறே விரைந்து முடிப்பதற்காக உலோகப் பாத்திரங்களை நாடியுள்ளோம். இதன் விளைவாக நோய்க்கும் ஆளாகி வருகிறோம். மட்பாண்டங்களுக்கு உடனடியாகத் திரும்புதல் இயலாததாக இருக்கலாம். எனினும், தமிழ் மக்களின் இயற்கையைப் போற்றும் தைப்பொங்கல் போன்ற பண்பாட்டுப் பெருநாட்களிலாவது மண்பானைகளில் பொங்குவோம். இது நலிவடைந்துள்ள மட்பாண்டக் கைவினையர்களது வாழ்வையும் வளப்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version