ரஸ்யாவுடனான போர்முனையில் காயமடைந்த இரண்டு வடகொரிய இராணுவத்தினரை கைதுசெய்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
கேர்ஸ்க்கின் ஒப்லாஸ்டில் இரண்டு வடகொரிய இராணுவத்தினரை கைதுசெய்துள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி விளாடிமிர் ஜெலென்ஸ்கிதெரிவித்துள்ளார்.
இருவருக்கும் மருத்துவ உதவிகளை வழங்கியுள்ளோம்,அவர்களை உக்ரைன் பாதுகாப்பு சேவையை சேர்ந்தவர்கள் தடுத்துவைத்துள்ளனர் என உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
காயமடைந்த வடகொரிய இராணுவீரர்களை கைதுசெய்ய உதவியமைக்காக உக்ரைனின் பரசூட் படைப்பிரிவினருக்கும், விசேட படைப்பிரிவினருக்கும் அவர் நன்றியை தெரிவித்துள்ளார்.
உக்ரைனிற்கு எதிராக வடகொரிய படையினரை பயன்படுத்துவது குறித்த எந்த ஆதாரத்தையும் ரஸ்யா அழித்துவிடுவது வழமை என்பதால் வடகொரிய படையினரை கைதுசெய்துள்ளமை சாதாரணமான செயல் இல்லை என உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
சர்வதே சட்டங்களில் குறிப்பிடப்பட்டுள்ள தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய இடத்தில் அவர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் என உக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது.
கைதுசெய்யப்பட்டவர்கள் ஆங்கிலத்திலோ உக்ரைன் மொழியிலோ ரஸ்ய மொழியிலோ உரையாடும் திறன் அற்றவர்களாக காணப்படுகின்றனர் என தெரிவித்துள்ள புலனாய்வு வட்டாரங்கள் தென்கொரியாவின் புலனாய்வு பிரிவின் உதவியுடன் அவர்களுடன் கொரிய மொழியில் உரையாடியதாக தெரிவித்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட இரண்டு வடகொரிய போர்வீரர்களுடன் எஸ்பியுவின் விசாரணையாளர்களுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளனர் என தெரிவித்துள்ள உக்ரைன் ஜனாதிபதி அவர்களை பத்திரிகையாளர்கள் சந்திப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
என்ன நடக்கின்றது என்ற உண்மையை உலகம் அறியவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.