வேனில் வந்து சிறுமி ஒருவர் கடத்தப்பட்டுள்ள சம்பவம் தவுலகல பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.

அது தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய தவுலகல பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் என பொலிஸ் ஊடகப் பிரிவு ஞாயிற்றுக்கிழமை (12) மாலை அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம், சனிக்கிழமை (11) காலை வேளையில் இடம்பெற்றுள்ளது. அந்த சிறுமி, ஹந்தெஸ்ஸ பிரதேசத்தில் தங்கியிருப்பவர் என்றும் அவர்,

தன்னுடைய தோழியுடன் பாடசாலைக்குச் சென்று கொண்டிருந்த போது, வேனில் வந்த இனந்தெரியாத நபர்களால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். இந்த கடத்தல் தனிப்பட்ட காரணங்களுக்காக இடம்பெற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில், அந்த வான், பொலன்னறுவையில் கைவிடப்பட்டிருந்த நிலையில், அன்றைய தினமே மீட்கப்பட்டுள்ளது. வேன் சாரதி, கம்பளையில் வைத்து தவுலகல பொலிஸாரினால் ஞாயிற்றுக்கிழமை (12) கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரான 30 வயதான சாரதி, கம்பளை கஹட்டபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஆவார். கடத்தப்பட்ட சிறுமியை மீட்டெடுப்பதற்கும், கடத்திய சந்தேக நபரை கைது செய்வதற்கும் தற்போதைக்கு மூன்று பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பொலிஸ் ஊடகப் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள மற்றுமொரு ஊடக அறிக்கையில்,

சிறுமியின் தந்தையின் சகோதரியின் மகனே இந்த சிறுமியை கடத்தியுள்ளார் என்றும், அவ்விருவரும் திருமணம் செய்து கொள்வதற்கான இணக்கத்தை இருவீட்டாரும் முதலில் தெரிவித்துள்ளனர்.

எனினும், சிறுமியின் தந்தை பின்னர் விருப்பமின்மையை தெரிவித்துள்ளார். இதனால், முரண்பாடு ஏற்பட்டுள்ளது என்பது ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது என்று ​அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version