“வாஷிங்டன்:அமெரிக்க பாராளுமன்றத்தில் ஜனவரி மாதத்தை தமிழ் மொழி மற்றும் பாரம்பரிய மாதமாக அறிவிக்க கோரி தீர்மானம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்திய வம்சாவளியை சேர்ந்த ராஜா கிருஷ்ணமூர்த்தி எம்.பி. தலைமையில் ரோ கன்னா, அமி பெரா, ஸ்ரீ தானேதர், பிரமிளா ஜெயபால் ,சுஹாஸ் சுப்பிரமணியம் உள்பட 15 உறுப்பினர்கள் இத்தீர்மானத்தை அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் கொண்டு வந்தனர்.
இதுதொடர்பாக ராஜா கிருஷ்ணமூர்த்தி கூறும்போது, ஒரு தமிழ்-அமெரிக்கராக, அமெரிக்காவிலும் உலகெங்கிலும் உள்ள தமிழ் மொழி, பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை மதிக்கும் இந்த இரு கட்சி தீர்மானத்தை அறிமுகப்படுத்துவதில் நான் பெருமைப்படுகிறேன்.
அமெரிக்கா என்பது பல்வேறு மொழிகள், கலாச்சாரங்கள், கருத்துக்கள் மற்றும் மரபுகளின் ஒரு அங்கமாகும்.
இந்தத் தீர்மானம் 3.5 லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழ்-அமெரிக்கர்களின் வளமான மற்றும் தனித்துவமான கலாச்சாரம் மற்றும் நம்பமுடியாத சாதனைகள் மீது வெளிச்சம் போடும் என்று நான் மனதார நம்புகிறேன்.
தமிழ்-அமெரிக்கர்கள் சமூகங்களில் ஏற்படுத்திய தாக்கத்தை அங்கீகரிக்க, தீர்மானத்தை விரைவாக எடுக்குமாறு வலியுறுத்துகிறேன் என்றார்.
இத்தீர்மானத்துக்கு பல்வேறு தமிழ் அமைப்புகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.தமிழ்-அமெரிக்கர்கள் ஐக்கிய பி.ஏ.சி. அமைப்பு கூறும்போது,
பண்டைய தமிழ் மக்களின் வளமான வரலாற்றையும் நவீன உலகிற்கு அவர்கள் அளித்த விலைமதிப்பற்ற பங்களிப்புகளையும் இத்தீர்மானம் எடுத்துக்காட்டுகிறது என்றது. வட அமெரிக்காவின் தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பு கூறும்போது,
பெருமைமிக்க தமிழ்-அமெரிக்கர்களாக, தமிழ் மொழி மற்றும் பாரம்பரிய மாதத்தை உருவாக்குவதற்கான பிரதிநிதி கிருஷ்ண மூர்த்தியின் தீர்மானத்தை நாங்கள் ஆதரிக்கிறோம் என்று தெரிவித்தது.
அதேபோல் அமெரிக்க தமிழ் நடவடிக்கைக் குழு கிருஷ்ணமூர்த்திக்கு நன்றி தெரிவித்ததுடன், தீர்மானத்தை உரிய வேகத்தில் நிறைவேற்றுமாறு பாராளுமன்றத்தை வலியுறுத்தியுள்ளது.”,