கும்பமேளாவிற்கு வரும் வித்தியாசமான சாதுக்கள் பக்தர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றனர். ராஜ்புரி ஜி மகாராஜ் என்ற அந்த பாபா தலையில் கடந்த 8 ஆண்டுகளாக புறா இருப்பதாகவும், அவர் எங்கு சென்றாலும் அவருடன் புறா செல்வது வழக்கம் என்றும் அவரது பக்தர்கள் தெரிவித்தனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் பிரயக்ராஜ் நகரில் கடந்த 13-ம் தேதி தொடங்கிய கும்பமேளாவில், தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர். கும்பமேளாவிற்கு உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் வந்து கொண்டே இருக்கின்றனர். அதிக அளவில் சாதுக்கள் வந்தவண்ணம் இருக்கின்றனர்.
கும்பமேளாவின் பிரதான நாள்களில் ஒன்றாக கருதப்படும் மெளனி அமாவாசையன்று 12 ஆயிரம் சாதுக்கள் நாகா சாதுக்களாக மாற இருக்கின்றனர். அதோடு அன்றைய தினம் மட்டும் 8 முதல் 10 கோடி பக்தர்கள் கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி நதிகளின் சங்கமமான திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து அதற்கான ஏற்பாடுகளை செய்யும் படி முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். பாதுகாப்பு மற்றும் கூட்டத்தை கட்டுப்படுத்த கூடுதலாக 20 சதவீதம் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.ஏழு அடுக்கு பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கும்பமேளாவிற்கு வரும் வித்தியாசமான சாதுக்கள் பக்தர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றனர். சந்நியாசிகள் தாங்களே ஷெட் அமைத்து தங்கி இருக்கின்றனர்.
இது குறித்து பாபா கூறுகையில்,”புறா அன்பு மற்றும் நல்லிணக்கத்தின் அடையாளமாகும். உயிர்களிடத்தில் கருணை மற்றும் இரக்கத்தை கற்றுக்கொடுக்கிறது. இந்த புறா எனது தலையில் கடந்த 8 முதல் 9 ஆண்டுகளாக இருக்கிறது. அது இருப்பது எனக்கு எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. உயிர்களுக்கு சேவை செய்வது நமது கடமை. அதைத்தான் நான் செய்கிறேன். எங்களது நோக்கம் வாழும் உயிர்களுக்கு அர்ப்பணிக்கவேண்டும் என்பதுதான்”என்றார். பாபாவின் வீடியோக்கள் சோசியல் மீடியாவிலும் வைரலாகி வருகிறது.