மன்னார் நீதிமன்றத்துக்கு முன் கடந்த வியாழக்கிழமை (16) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவ சிப்பாய் ஒருவர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இராணுவத்தில் பணியாற்றும் சிப்பாய் மன்னார் -தலைமன்னார் பிரதான வீதியில் நடுக்குடா கடற்கரை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் பின்னர், மேலும் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 2022ஆம் ஆண்டு மன்னார் நொச்சிக்குளம் பகுதியில் இடம்பெற்ற இரட்டைப் படுகொலை தொடர்பான வழக்கு கடந்த வியாழக்கிழமை மன்னார் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவிருந்தது.

இந்நிலையில் விசாரணைகளுக்காக சென்ற சந்தேக நபர்கள் மூவர் உள்ளடங்கலாக நான்கு பேர் மீது நீதிமன்றத்துக்கு முன் வைத்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது இருவர் உயிரிழந்ததுடன், இருவர் படுகாயமடைந்தனர்.

அதனையடுத்து, பொலிஸார் விசேட தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் நிலையில் சந்தேக நபரான இராணுவ சிப்பாய் கைது செய்யப்பட்டுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர் என கருதப்படும் இந்த இராணுவ சிப்பாய் கைது செய்யப்பட்டு பேசாலை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டதை தொடர்ந்து, விசாரணைகள் நடத்தப்பட்டது.

அதன் பிரகாரம், தொடர்ச்சியாக மேலும் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் மன்னார் மற்றும் பேசாலை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version