அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய வெளிநாட்டவரை நாடுகடத்துவதில் தீவிரம் காட்டி வருகிறார்.

அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறிய 18,000 இந்தியர்களைத் திரும்பப்பெறுவதாக இந்தியாவும் உடன்பட்டுள்ளது. ஆனால் கொலம்பியா அமெரிக்காவின் நாடு கடத்தல் திட்டத்தை நிராகரித்தது. இதனால் கோபம் தலைக்கேறிய ட்ரம்ப், கொலம்பியா மீது வரி விதிப்பு, விசா இரத்து, பயணிகள் வர தடை உள்ளிட்ட கெடுபிடி உத்தரவுகளைப் பிறப்பித்தார்.

முன்னதாக பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டவர்களை அமெரிக்க அதிகாரிகள் கைதுசெய்து விமானப்படை விமானங்கள் மூலம் அனுப்பி வைத்தனர்.

ஆனால், அகதிகள் அனுப்பி வைக்கப்பட்ட 2 விமானங்களைத் தரையிறங்க கொலம்பியா அனுமதிக்கவில்லை. இதனால் கொதித்த ட்ரம்ப், அந்த நாட்டு பொருட்களுக்கு 25 சதவீதம் இறக்குமதி வரியை உயர்த்தி உத்தரவிட்டார்.

மேலும் இந்த வரி விதிப்பு ஒரு வாரத்தில் 50 சதவீதமாக உயர்த்தப்படும், கொலம்பிய நாட்டு அரசு அதிகாரிகள், அவர்களை சார்ந்தோருக்கான விசா இரத்து, கொலம்பியர்கள் அமெரிக்காவுக்கு பயணிக்க தடை உள்ளிட்ட உத்தரவுகளையும் அவசரகதியில் ட்ரம்ப் பிறப்பித்தார்.

இதற்கு பதிலடியாக, அமெரிக்காவிலிருந்து இறக்குமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரியை உயர்த்தி கொலம்பியா ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ உத்தரவிட்டார். “நீங்கள் எங்களுக்கு செய்வதை, நாங்களும் உங்களுக்கு செய்வோம்” என்று, அவர் தெரிவித்தார்.

மேலும், கொலம்பிய அதிகாரிகளின் விசா இரத்து, பயணிக்க தடை உள்ளிட்டவை குறித்து பேசிய குஸ்டாவோ பெட்ரோ, “நான் ஒன்றும் அமெரிக்கா வர விரும்பவில்லை. அது எனக்கு சலிப்பாக இருக்கிறது. நானோ, மற்ற கொலம்பியா நாட்டவரோ, நீங்கள் நினைப்பது போல் மட்டமானவர்கள் அல்ல” என்று தெரிவித்தார்.

இந்நிலையில் கொலம்பியா தனது நிலைப்பாட்டில் இருந்து திடீரென மாறி, அமெரிக்காவில் இருந்து அனுப்பட்ட தங்கள் நாட்டு அகதிகளை ஏற்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.

கொலம்பியா அரசு, ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோவின் வழிகாட்டுதலின் கீழ், நாடு கடத்தும் விமானங்களில் நாட்டுக்கு வரவிருக்கும் சக நாட்டவர்கள் பாதுகாப்பாக திரும்புவதையும், கண்ணியமாக நடத்தப்படுவதையும் உறுதி செய்வதாக, அறிக்கை வெளியிட்டுள்ளது.

எந்த சூழ்நிலையிலும் திரும்ப வந்தவர் வெளியேற்றப்பட மாட்டார்கள் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.

இதன்மூலம், கொலம்பியா தன்னிடம் அடிபணிந்ததை அடுத்து, அந்நாட்டின் மீது விதிக்கப்பட்ட 25 சதவீத வரி உயர்வு, விசா இரத்து, பயண தடை ஆகியவற்றை அமெரிக்கா திரும்பப்பெற்றுள்ளது.

இதேவேளை, மெக்சிகோ நாடும் தங்கள் அகதிகளை திரும்பப்பெற்றுள்ள நிலையில், தங்கள் நாட்டவரை விமானத்தில் தண்ணீர் கொடுக்கால், ஏசி இல்லாமல், கைவிலங்கிட்டு அமெரிக்கா கீழ்த்தரமாக நடத்தியுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version