அமெரிக்காவில் மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ள டொனால்ட் ட்ரம்ப் மேற்கொண்டு வரும் நகர்வுகள் சர்வதேச அரசியலை அதிக கொதிநிலைக்கு இட்டுச் செல்கிறது.
இதனை உலகளாவிய ரீதியான சக்திகள் பயன்படுத்திக் கொள்கின்ற அணுகுமுறை ஒருபுறம் அமைய மறுபக்கத்தில் அதனால் பாதிக்கப்படுகின்ற நாடுகளும் இனங்களும் அதிக குழப்பத்தையும், தெளிவற்ற போக்கையும், வன்முறைக்கான திட்டமிடல்களையும் அதிகரிக்க வாய்ப்பைக் கொடுத்திருக்கின்றது.
குறிப்பாக பலஸ்தீன மக்கள் காசாவில் இருந்து வெளியேற்றப்படுதல் மற்றும் காசாவை அமெரிக்காவுக்கு சொந்தமாக்குதல் போன்ற உரையாடல்களை வெளிப்படுத்துவதோடு அதனால் ஏற்படக்கூடிய விளைவுகளை கருத்தில் கொள்ளாது அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் நகர்வதை அவதானிக்க முடிகிறது.
இதனை எதிர்கொள்வதில் மேற்காசிய நாடுகளிடமோ அல்லது உலகளாவிய ஏனைய அதிகார சக்திகளிடமோ எந்த வகையான உத்திகளையும் கண்டு கொள்ள முடியாது.
ஆனாலும் அத்தகைய நாடுகள் தமக்கான சவாலை எதிர்கொள்ளுகின்ற முனைப்பை முன்வைக்கத் தொடங்கியுள்ளனர்.
உலகில் இன்று காணப்படும் ஒற்றைமையை உலக ஒழுங்கில் தவிர்க்க முடியாமல் அமெரிக்காவின் தலைமைக்குள் கட்டுண்டுள்ளது.
இதிலிருந்து விடுபடுவது என்பது கடினமான செய்முறையாகவே அமைய உள்ளது. இக்கட்டுரையில் அமெரிக்க ஜனாதிபதி குடியேற்றவாசிகள் பொருத்தும், காசா பொருத்தும் முன்னிலையில் இருக்கும் நடவடிக்கைகளையும் அதன் விளைவுகளை தேடுவதாக இக்கட்டுரை அமைய உள்ளது.
பிரதானமாக குடியேற்றவாசிகளை வெளியேற்ற முயற்சிக்கும் அமெரிக்காவின் நிர்வாகம் நாடுகள் மீதும் நாடுகளின் உற்பத்திப் பொருட்கள் மீதும் தடைகளையும் வரிவிதிப்புகளையும் மேற்கொண்டு வருகின்றது.
மேலும், காசாவில் இருந்து பலஸ்தீனியர்களை வெளியேற்றும் முயற்சி அதிக எதிர்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது. இதனை ஆழமாக தேடுதல் அவசியமானது.
முதலாவது, இஸ்ரேலிய பிரதமர் அமெரிக்கா சென்றபோது இரு தலைவர்களுக்கும் இடையே நிகழ்ந்த உரையாடல்களும் வெளிப்பாடுகளும் காசா மீதான அமெரிக்காவின் ஆதிக்கத்தை அங்கீகரிப்பதாகவே அமைந்திருந்தது. இஸ்ரேலிய அரசாங்கம் காசாவை அமெரிக்காவுக்கு வழங்குவதில் முரண்பாடு எதுவுமின்றி செயற்பட்டுள்ளது.
இஸ்ரேலிய பிரதமர் அமெரிக்க ஜனாதிபதியுடன் ஊடகங்களை சந்தித்தபோது அது தொடர்பில் எத்தகைய மறுப்பையோ அல்லது நிராகரிப்பையோ அல்லது வேறுபட்ட கருத்துளையோ கொண்டிருக்காதவராக காணப்பட்டார்.
இது காசா மீதான இஸ்ரேலியப் போர், இஸ்ரேலிய- அமெரிக்க கூட்டு போர் என்பதையே அடையாளப்படுத்துகிறது. அமெரிக்க காங்கிஸிலும் இஸ்ரேலிய பிரதமர், ‘அமெரிக்காவுக்காகவே தாம் போர் புரிவதாக’ தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது. அதனையே மீளவும் உச்சரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. அமெரிக்க நலன்களை மேற்காசியாவில் கட்டமைக்கின்ற நாடாகவே இஸ்ரேலும் யூதர்களும் காணப்படுகின்றனர்.
காசா நிலப்பரப்பை சர்வதேச மட்டத்தில் வர்த்தக நகரமாகவும் அதனை ஒரு வர்த்தக மையமாகவும் மாற்றுவது என்ற எண்ணம் அமெரிக்க கொள்கை வகுப்பாளர்களிடம் நீண்ட காலமாகவே காணப்பட்டுள்ளது.
அதனை வெளிப்படுத்துபவராக அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதி விளங்குகின்றார். எனவே அமெரிக்கா முன்கூட்டியே மேற்காசிய பரப்பில் தனது பிடியை பலப்படுத்தும் வாய்ப்புகள் ஒவ்வொன்றையும் வெளிப்படுத்துவதில் அல்லது கையாள்வதில் வெற்றி கண்டு வருகிறது.
அவரது முதலாவது ஆட்சிக் காலப்பகுதியில் இஸ்ரேலிய தலைநகரத்தை ஜெருசேலத்துக்கு கொண்டு சென்றது போன்று, காசா நிலப்பரப்பிலிருந்து மக்களை வெளியேற்றி வர்த்தக நகரமாக்குதல் என்ற இலக்கு இலகுவானதாக இல்லாவிட்டாலும், சாத்தியப்படுத்த அமெரிக்கா தயாராகிறது.
இதனை ஏற்றுக் கொள்வதில் இஸ்ரேலுக்கு பெரும் இலாபம் காணப்படுகிறது. காசா நிலப்பரப்பு வளர்ச்சி அவர்களிடம் இருக்கும் வரை இஸ்ரேலின் இருப்பு என்பது யூதர்களின் அமைதியான வாழ்வு என்பதும் கடினமான தடைகளிலிருந்து அகற்றப்படுகிறது.
ஆகாய வழியிலும், கடல் வழியிலும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தும் திறனை காசாவின் புவிசார் அரசியல் வலு கொண்டிருக்கின்றது. அத்தகைய புவிசார் அரசியல் வலு காசாவின் அரசியல் புவியலுக்கு உண்டு.
இதனால் இஸ்ரேலியர் இருப்பினை தக்க வைத்துக் கொள்ளவும், எதிர்கால சந்ததியினை பாதுகாத்துக் கொள்ளவும் வாய்ப்பாகவே இஸ்ரேல் அமெரிக்காவின் அணுகுமுறையை கருதுகின்றது.
இன்றைய உலக ஒழுங்கில் இஸ்ரேல்- அமெரிக்க கூட்டு வலுவான மாற்றங்களை ஏற்படுத்த துணிகிறது. இதனை எதிர்கொள்ளுகின்ற சக்திகள் ஒப்பீட்டு அடிப்படையில் பலவீனமாகவே உள்ளன.
ஈரானின் இயலாமை; ரஷ்யாவின் உக்ரைன் போர்; சீனாவின் தலையீடற்ற அரசியல் மற்றும் தைவான் பொறுத்து சீனாவுக்கு உள்ள அச்சம் போன்ற பல விடயங்கள் மத்தியில் இத்தகைய மாற்றத்தை காசாவில் பலஸ்தீனர்கள் எதிர்கொள்ள வேண்டிய துயரம் ஏற்பட்டுள்ளது.
இரண்டாவது அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி தனது கடந்த கால ஆட்சியிலும் மெக்சிகோவுக்கு எதிரான அணுகுமுறைகளை அதிகம் கொண்டிருந்தார்.
குடியேற்றவாசிகளின் நுழைவை தடுக்க, தடுப்புச் சுவர்களை அமைப்பது மறுபக்கம் உலகமயமாக்கம் பற்றி உரையாடுவதும் அமெரிக்கமயவாக்கத்தை பற்றிய எண்ணங்களை பரப்புவதுமாக அமைந்திருந்தது. தற்போது முழுமையாகவே அமெரிக்கா எல்லை நாடுகளையும், நட்பு நாடுகளையும் பகைமைக்கு தள்ளுகின்ற அணுகுமுறை ஒன்றை ஏற்படுத்தி இருக்கின்றது.
குறிப்பாக இந்திய குடியேற்றவாசிகளை கைகளிலும் கால்களிலும் விலங்கிட்டு இராணுவ விமானத்தில் அனுப்பி இருப்பது என்பது அதிக அதிர்வலைகளை இந்திய-அமெரிக்க நட்புறவில் ஏற்படுத்த ஆரம்பித்துள்ளது.
சீனா, கனடா மீதான வரி விதிப்புகளும் குடியேற்றவாசிகளை ஏற்றுக் கொள்ளாத சூழலில் வரிவிதிப்பில் அதிகரிப்பையும் வெளிப்படுத்தியது. அமெரிக்க ஜனாதிபதி இந்தியாவுக்கு எந்தவிதமான வரிசார்ந்த நெருக்கீடுகளையும் ஏற்படுத்தாத போதும், குடியேற்றவாசிகளை சிறை கைதிகள் போன்று அனுப்பியுள்ளது.
இது இந்தியர்களை அவமதிப்பது மட்டுமின்றி இந்திய தேசத்துடனான பொருளாதார உறவுகளை பெருமளவில் பாதிக்கின்ற ஒரு விடயமாக எதிர்காலத்தில் மாறுவதற்கான வாய்ப்பை கொடுத்திருக்கிறார்.
இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் பொருளாதார உறவு என்பது வலிமையானது. சமகாலத்தில் பொருளாதார நலனை மையப்படுத்தி இரு நாட்டுக்குமான நட்புறவு ரஷ்யா- இந்திய நட்புறவைக் கடந்தும் பேணப்பட்டு வந்தது.
இதனை நெருக்கடிக்கு உள்ளாக்குகின்ற சூழலையே டொனால்ட் ட்ரம்ப் அரசாங்கம் ஏற்படுத்தி உள்ளது. அவ்வாறாயின் அமெரிக்காவின் திட்டங்களில் அமெரிக்கா இலக்கம் ஒன்று என்ற எண்ணம் எவ்வகை சூழலை அடைய இருக்கிறது என்பது முக்கியமான கேள்வியாக மாறுகிறது.
ஒற்றைமைய உலகத்துக்கு தலைமை தாங்கும் அமெரிக்கா குடியேற்றவாசிகளின் ஆதிக்கத்தினால் அதிக நெருக்கடியை எதிர்கொள்கிறது என்பது சவாலான விடயமாகவே உள்ளது. ஆனால் அதனை எதிர்கொள்ளுகின்ற உத்திகளும் அணுகுமுறைகளுமே பலவீனமானதாக காணப்படுகிறது.
எனவே, அமெரிக்க ஜனாதிபதியின் அரசியல் ரீதியான செய்முறைகள் ஒவ்வொன்றும் பொருளாதார ரீதியிலும் இராணுவ ரீதியிலும் அதிக நெருக்கடிகளை உலகத்துக்கு ஏற்படுத்த இருக்கின்றது. தீவிரவாதமும் பயங்கரவாதமும் எழுச்சி பெறுவதற்கான வாய்ப்பை அதிகப்படுத்துவதோடு, அமெரிக்கா பொருளாதாரரீதியில் நெருக்கடிக்குள்ளாகின்ற சூழல் தவிர்க்க முடியாததாக அமையப்போகிறது.
அதுமட்டுமின்றி வரி விதிப்புக்களும் அதற்கான போட்டி வரி விதிப்புகளும் உலகளாவிய ரீதியில் பொருளாதாரத்தின் உறுதித் தன்மையை சிதைப்பதோடு சாதாரண மக்களின் வாழ்க்கை முறையயை பாரிய சவாலுக்கு உட்படுத்த இருக்கின்றது.
உலக ஒழுங்கு அமைதியற்ற சூழலை எதிர்கொள்ளுகின்ற நிலையை இது ஏற்படுத்தும். பணமா கால்வாய் தொட்டு காசா வரையும் அமெரிக்கா தனக்குரித்துடைய நிலங்களாக மாற்ற முயற்சிக்கின்ற போது ஏற்படக்கூடிய விளைவுகள் உலகளாவிய அமைதியை குறைப்பதாகவே அமையும். போராட்ட உலகம் பற்றிய கனவுகளோடு நுழைந்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பொருளாதார போருக்கூடாக மறைமுக யுத்தம் ஒன்றை தொடக்கி உள்ளார். அதன் விளைவுகளை உலகம் எதிர்கொள்ளப் போகின்றது.
அமெரிக்காவோட கூட்டுச் சேர்ந்துள்ள இஸ்ரேல் அதிக குழப்பத்தை மேற்காசியாவில் மட்டுமல்ல, உலகளாவிய ரீதியில் ஏற்படுத்த தயாராகும். மறுபக்கத்தில் ரஷ்யாவும், சீனாவும் இந்தியாவுடன் நெருக்கத்தை முதன்மைப்படுத்திக் கொண்டு நாணயப் போருக்கான அணுகுமுறையை தொடக்கியுள்ளது. எனவே தான் அமைதியற்ற உலகத்தின் ஆட்சியாளராக காட்சிப்படுத்தப்படுகின்ற நிலைக்கு அமெரிக்காவை விட்டுச் செல்லக் கூடிய சூழல் காணப்படுகிறது.
ரிஇகணேசலிங்கம்-தினகரன்