“காலனித்துவ யுகத்திலிருந்து விடுபட்டு 77 ஆண்டுகள் கடந்துவிட்டதொரு நாடு என்ற வகையில், சுதந்திரம் குறித்து புதிதாக சிந்திக்க முடியும். நாங்கள் அனைவரும் நாட்டிற்கான முழுமையான பொருளாதார, சமூக மற்றும் கலாசார சுதந்திரத்தை வென்றெடுக்கும் போராட்டகளத்தின் போராட்டக்காரர்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இந்த தாய்நாட்டிற்காக நாம் அனைவரும் ஒற்றுமையாக சுதந்திரப் போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டியுள்ளது”
“எமது பொருளாதார சுதந்திரத்திற்காக, சமூக, கலாசார சுதந்திரத்திற்காக, சுருக்கமாகக் கூறினால், நவீன பிரஜைகளாக இந்த நாட்டில் பெருமையுடன் வாழத் தேவையான சுதந்திரத்தை உருவாக்குவதற்காக நாம் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும்”
“எனவே, சுதந்திரத்தின் கனவை ஒன்றாகப் காண்போம். அந்தக் கனவை ஒன்றாக நனவாக்கிகொள்வோம். நீங்களும் நானும், நாம் அனைவரும் இணைந்து பயணித்துக் கொண்டிருக்கும், சுதந்திரம் மற்றும் ஜனநாயகம் தொடர்பிலான நவீன உலக அரசியலில் அழியாத முன்னுதாரணமாக இந்த இலங்கை நாட்டை மாற்றியமைப்பதற்கான பயணமாக இருக்கலாம்
“நாம் இந்த உலகின் செல்வந்த நாடாக மாற முடியாது என்றாலும், நாம் முயற்சி செய்தால் இந்த உலகத்தில் வளமான தேசிய உயிர்ப்பை தாங்கிக்கொண்டிருக்கும் சமத்துவம் மற்றும் சுதந்திரத்திற்கான முன்னுதாரணமான நாடாக நாம் மாறலாம்”
இவை ‘தேசிய மறுமலர்ச்சிக்காக அணிதிரள்வோம்’ என்ற தொனிப்பொருளில் முனனெடுக்கப்பட்ட நாட்டின் 77ஆவது சுதந்திர தினத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் ஆற்றப்பட்ட உரையின்போது தெரிவிக்கப்பட்ட கருத்துகளாகும்.
உண்மையில், இடதுசாரித்துவ சித்தாந்தில் ஊறித்திளைத்து அக்கோட்பாட்டு மையத்தில் நின்று கொண்டிருக்கும் ஜனாதிபதி என்ற வகையில் தோழர் அநுரகுமாரவினால் இதற்கு மேல் தேசப்பற்று மிக்க அரவணைப்புக் கோசத்தையோ பொருளாதார மீட்சிக்கான அறைகூவலையோ பொதவெளியில் வெளிப்படுத்த முடியாது.
ஆனால், கொழும்பின் மையத்தில் உள்ள தேசிய சுதந்திர சதுக்கத்தில் ஜனாதிபதியாக நின்றுகொண்டு அநுரகுமார மேற்படி அறைகூவலை விடுக்கும்போது, வடக்கு,கிழக்கில் சம நேரத்தில் காணப்பட்ட நிலைமைகளை ஒரு தடவை ஆழமாக அவதானிப்பது பொருத்தமானதாகும்.
வட,கிழக்கின் வீதியெங்கும் கறுப்புக் கொடிகள் பறக்கின்றன. யாழ்.பல்கலைக்கழகத்தில் தேசியக்கொடி இறக்கப்பட்டு கறுப்புக்கொடி ஏற்றப்படுகின்றது. உறவுகளைத் தொலைத்த தாய்மார்கள் போராட்டத்தில் ஈடுபடுகின்றார்கள். அரசியல் பிரமுகர்களும், சிவில் அமைப்பினரும், மதத் தலைவர்களும் அவர்களுக்கு துணையாக களத்தில் நிற்கின்றனர்.
உயிர்வாழும் உரித்தை உறுதி செய்தல், மொழி உரிமையை நிரந்தரமாக்கல், சம பிரஜைகள் என்ற அந்தஸ்துக்கான ஏக்கத்தை பூர்த்தி செய்தல், பொறுப்புக்கூறலைச் செய்தல், மீள நிகழாமையை உறுதிப்படுத்தல், அதிகாரங்களை பகிர்ந்து கொள்ளல், அரசியல் அபிலாஷைகளைப் பெற்றுக்கொள்ளல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட பதாகைகளை தாங்கி நிற்கின்றார்கள். ஆக்ரோஷமான கோசங்களை எழுப்புகிறார்கள்.
இத்தகைய நிலைமையானது இன்னமும் ஏன் நீடித்துக்கொண்டிருக்கின்றது என்பதற்கான காரணங்களை நன்கறிந்திருக்கும் ஜனாதிபதி அநுரகுமார அதற்கான ஆகக்குறைந்த பதிலளிப்புக்களைச் செய்யும் வகையில் தனது உரையில் மறந்தேனும் ஒருசொற்றொடரைக்கூட பயன்படுத்தியிருக்கவில்லை.
அரசியல்கவர்ச்சியாக ஜனாதிபதி அநுர எந்தவிதமான கருத்துக்களை வெளிப்படுத்துவதில்லையென்றும், போராடுபவர்களுக்கு எந்த இடையூறும் அளிக்காதிருப்பதை உறுதி செய்திருக்கின்றார் என்றும் அவரது தரப்பில் வாதமொன்றைச் செய்யலாம்.
ஆனால், முன்னுதாரணமான நாடாக உருவெடுப்பதற்க பேதங்களின்றி நவீன பிரஜைகளாக உருவெடுக்க வேண்டும் என்ற அவரது கனவு மெய்ப்படுவதற்கு போராடியவர்கள் உட்பட வடக்கு,கிழக்கில் பெரும்பான்மையாக வாழும் தமிழ் மக்கள் நாங்களும் நாட்டின் பிரஜைகள் என்ற மனோநிலையை அடைய வேண்டியது அவசியமாகின்றதல்லவா?
அவ்வாறான நிலையில் ஜனாதிபதி அநுரகுமாரவின் கருத்துக்கள், இடதுசாரித்துவத்தின் அடிப்படைகளான சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி அரசியல் அபிலாஷைகளுக்காவும், பொறுப்புக்கூறலுக்காகவும் வரலாறு முழுவதும் போராட்டத்தினை முன்னெடுத்துக்கொண்டிருக்கும் இனக்குழுமத்தின் அபிலாஷைகளை நீர்த்துப்போகச் செய்யும் உத்தியாகவே அடையாளப்படுத்த வேண்டிய துரதிஷ்டவசமான நிலைமை ஏற்பட்டிருக்கின்றது.
அடுத்ததாக, நாட்டின் பொருளாதார மீட்சிக்கான பங்காளிகாக அனைவரும் இருக்க வேண்டும் என்பது ஜனாதிபதி அநுரகுமாரவின் எதிர்பார்ப்பு என்பதும் அவரது உரையில் தெளிவாக வெளிபடுத்தப்படுகின்றது.
வட,கிழக்கு மக்களும், அவர்களைச் சார்ந்துள்ள புலம்பெயர் தமிழர்களும் பொருளாதார மீட்சியின் பங்காளிகளாக மாறுவதில் எந்தவிதமான பிரச்சினைகளும் கிடையாது. ஆனால் பங்காளியாக மாறும் ஒவ்வொருவருக்கும் தனது பூர்வீக அடையாளமும், தேசத்துக்கான அங்கீகாரமும் உறுதி செய்யப்பட வேண்டியது அவசியமாகவுள்ளது.
அவ்வாறில்லாது, தேசியத்தில் கலப்பதால் எந்தவிதமான நன்மைகளும் கிடைக்காது என்பது ஏழரை தசாப்தங்களாக விடுதலைக்காக போராடிவருகின்ற இனக்குழுமம் அறியாதவொரு விடயமல்ல என்பதை ஜனாதிபதி அநுரகுமார உணரத்தலைப்படவில்லையா? அல்லது உணர்ந்ததை மறைத்து விட்டாரா? என்ற கேள்விகள் எழுகின்றன.
வடக்கு,கிழக்கு,தெற்கு,மேற்கு என்று நாற்திசையிலும் மக்கள் எமக்கு ஆணை அளித்திருக்கின்றார்கள் என்று மார்பு தட்டிப்பேசும் ஜனாதிபதி அநுரகுமாரவுக்கு நாற்திசை இனக்குழுமங்களின் அபிலாஷைகளை, நியாயமான கோரிக்கைகளை தேசிய தளத்தில் வைத்து வெளிப்படுத்துவதற்கான ‘தயக்கம்’ நீடித்துக்கொண்டே இருக்கின்றது.
ஜனாதிபதி தேர்தலின் பின்னரான நாட்டு மக்களுக்கான உரையிலோ, பாராளுமன்ற அக்கிராசன உரையிலோ, சுதந்திரதின உரையிலோ தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு, பொறுப்புக்கூறல் விடயங்கள் தொடர்பில் ஆகக்குறைந்த நம்பிக்கையளிக்கும் வெளிப்பாடுகளை அவர் மேற்கொண்டிருக்கவில்லை.
77ஆவது சுதந்திர தினத்தன்றைய ஜனாதிபதி அநுரவின் மேற்படியான கருத்துக்கள் தமிழர்களின் ஒட்டுமொத்த அரசியல் அபிலாஷைகள் உள்ளிட்ட அனைத்தையும் புறமொதுக்கி, நீர்த்துப்போகச் செய்யும் வகையில் அமைந்திருக்கையில் அதற்கு மறுதினமன்று அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சவைப் பேச்சாளர் அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ வெளிப்படுத்திய அரசியலமைப்பு திருத்த விடயம் சம்பந்தமான கருத்துக்கள் ஒட்டுமொத்த அரசாங்கத்தின் மீதான எதிர்பார்ப்பையும் மலினப்படுத்தியுள்ளது.
குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் தேசிய இனப்பிரச்சினை, வாக்குறுதி அளிக்கப்பட்டதன் பிரகாரம் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிப்பு உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்ட அரசியலமைப்பு திருத்தம் அல்லது புதிய அரசியலமைப்பு சம்பந்தமாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கருத்துக்களை வெளியிட்டார்.
அவர், “அரசியலமைப்பு திருத்த பணிகளை விட பொருளாதார சவால்களை எதிர்கொள்வதற்கான வேலைத்திட்டங்களுக்கே அரசாங்கம் முன்னுரிமையளித்துள்ளது. அந்த வகையில் தற்போது அரசியலமைப்பு திருத்தத்தினை மேற்கொள்ளப்போவதில்லை”
“பொருளாதாரம் ஸ்திரமற்ற நிலையில் உள்ளது. பொருளாதாரம் ஓரளவு ஸ்திரநிலைமையை அடைந்ததையடுத்து அரசியலமைப்பு திருத்த பணிகளை முன்னெடுப்போம்”
அரசியலமைப்பு பணிகளையும் நீண்ட நாட்களுக்கு இழுத்துச் செல்லமாட்டோம். குறிப்பிட்ட காலத்துக்குள் மக்களின் கருத்துக்களுக்கு முன்னுரிமையளிப்பதற்கான பொறிமுறையொன்றை ஸ்தாபித்து உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்போம்”என்று கூறினார்.
நாட்டின் ‘பொருளாதார மீட்சி’ என்பது மிக நீண்ட,நெடியதொரு பயணம். அது, உள்நாட்டு உற்பத்திகள் அதிகரிக்கப்பட வேண்டும். வெளிநாட்டு முதலீடுகள் தராளமாக இடம்பெற வேண்டும். ஏற்றுமதிச் சந்தை விரிவாக்கம் செய்யப்பட வேண்டும். டிஜிட்டல் மயமாக்கம், நவீன தொழில்நுட்ப உள்ளீர்ப்பு என்ற பலவிடயங்களில் தங்கியுள்ளது.
வெறுமனே சுற்றுலாப்பயணிகளின் வருகையையும், நாட்டில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை மிக்க பாராளுமன்றம் இருப்பதால் அரசியல் ஸ்திரத்தன்மை காணப்படுகின்றமை என்ற பிம்பமும் பொருளாதார மீட்சியை ஏற்படுத்தி விடாது.
நாட்டின் பிரஜையொருவர் சதாரணமாக உணவுத்தேவையில் தன்னிறைவை அடைவதற்கான பொருளாதார நிலைமை ஏற்படுவதற்கே ஜனாதிபதி அநுரகுமாரவின் முதலாவது பதவிக்காலத்துக்கான ஆயுள் போதாது.
அவ்விதமானதொரு சூழலில் பொருளாதாரநெருக்கடிகளை தீர்த்துவிட்டு விரைந்து அரசியலமைப்பு விடயங்களை கையாள்வோம் என்று அரசாங்கம் அறிவித்திருப்பதானது அரசியலமைப்பு விடயத்தில் அரசாங்கத்தின் எள்ளளவான கரிசனையின்மையையே வெளிப்படுத்தியிருக்கிறது.
22தடவைகள் திருத்தங்களுக்கு உள்ளானதும், தமிழ் மக்களை புறக்கணித்தம் உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அரசியலமைப்பை திருத்துவது இன்றியமையாதவொரு விடயம்.
அதனை காலம் தாழ்துவதானது, பொருத்தப்பாடுடைய செயற்பாடும் அல்ல. கடந்த காலங்களில் ஆட்சிப்பொறுப்பில் இருந்த அத்தனை தலைவகளும் பெயரளவுக்கேனும் முன்னெடுத்த அரசியலமைப்பு விடயங்கள் வெற்றிபெற்றிருக்கவில்லை.
அச்செயற்பாடுகள் அனைத்தும் அவர்களின் ஆட்சிக்காலத்தின் இறுதியான தருணங்களில் முன்னெடுப்பதை அவர்கள் கிஞ்சித்தும் விரும்பியிருக்கவில்லை. அதற்கு காரணம், ஆட்சிக்காலத்தின் இறுதியில் ஏற்படுகின்ற வாக்குவங்கி மீதான அச்சமே.
இந்தநிலைமைகளையெல்லாம் கடந்து அநுரவின் அரசாங்கம் தற்போது கூறுவரைதப்போன்று அரசியலமைப்பு விடயங்களை ஆட்காலத்தின் பிற்பகுதியில் முன்னெடுத்தால்கூட தமிழ் மக்களின் நீண்டகாலக் கோரிக்கையான ஏற்றுக்கொள்ளக்கூடிய நேர்மையான சமஷ்டி அடிப்படையிலான தீர்வினை அரசியலமைப்பில் முன்வைப்பதற்கான கலந்துரையாடல்களில் ஈடுபடுவதற்கு கூட தயராக இருக்காது.
ஆகவே, பொருளாதார மீட்சிக்கான பயணத்துக்கு சமாந்தரமாக அதன் வெற்றியில் பெரும்பங்காற்றக்கூடிய புதிய அரசியலமைப்பு அல்லது அரசியலமைப்பு திருத்த விடயத்துக்கான செயற்பாடுகளை தற்போதே ஆரம்பது தான் பொருத்தமானது.
அவ்வாறில்லாத நிலை நீடிக்குமாக இருந்தால், மாற்றத்துக்கான அநுர அரசாங்கமும் கடந்தகால சிங்கள, தேசிய மையவாத அரசாகவே முடிவுறும்.
ஆர்.ராம் Virakesari