– முதலீட்டு சபைக்கு கடிதம் அனுப்பி வைப்பு

இந்திய அதானி நிறுவனம் இலங்கையில் மன்னார் பிரதேசத்தில் நிர்மாணிக்க திட்டமிட்டிருந்த 1 பில்லியன் டொலர் முதலீட்டுடனான காற்றாலை மின்சார உற்பத்தி திட்டத்திலிருந்து விலகி கொள்வதற்கு தீர்மானித்துள்ளது.

அந்த வகையில் மேற்படி திட்டத்தை கைவிடுவதாக அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் அறிவித்துள்ளதுடன், அந்த நிறுவனத்தின் செயலாளர் இலங்கை முதலீட்டு சபைக்கு அது தொடர்பில் கடிதமொன்றையும் அனுப்பி வைத்துள்ளார்.

இலங்கையில் மன்னார் மற்றும் பூநகரி பகுதிகளில் 484 மெகாவோட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் புதுப்பிக்கத்தக்க காற்றாலை மின் உற்பத்தி நிலையத்தினை அமைப்பதற்கு அந்த நிறுவனம் திட்டமிட்டிருந்தது.

அத்துடன், அதன் சேவையை தென்னிலங்கைக்கு விஸ்தரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்ததுடன், மேலும் 2 மின்சார மையங்களை உருவாக்குவதற்குமான வேலைத் திட்டமும் அதானி நிறுவனத்தினால் ஆரம்பிக்கப்படவிருந்தது.

அது தொடர்பாக அதானி நிறுவனம் இலங்கையில் அரச உயர் அதிகாரிகளுடன் 14 சுற்று பேச்சு வார்த்தைகளை நடத்தியுள்ளதாகவும், அந்த நிறுவனம் இலங்கை முதலீட்டு சபைக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளது.

மேற்படி, மின்சார உற்பத்தி திட்டத்தின் மன்னார் காற்றாலை மின் உற்பத்தி நிறுவனத்திற்கு எதிரான வழக்கு மற்றும் சுற்றாடல் அறிக்கை தவிர ஏனைய அனைத்து அனுமதிகளும் அந்த நிறுவனத்திற்கு வழங்கப்பட்டு விட்டன.

அத்துடன் மேற்படி வேலைத்திட்டத்தின் ஆரம்ப கட்ட நடவடிக்கைகளுக்காக 5 மில்லியன் டொலர் வரை செலவிடப்பட்டுமுள்ளது.

இந்த நிலையில், மின் உற்பத்தி திட்டம் தொடர்பில் மீண்டும் மீளாய்வு பேச்சு வார்த்தைகளை மேற்கொள்வதற்காக அமைச்சரவை உப குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக நிறுவனத்திற்கு தகவல் கிடைத்திருப்பதாகவும், அது தொடர்பில் நிறுவனத்தின் நிர்வாக சபையில் கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் அந்த கடிதத்தில் எப்படி நிறுவனம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்தவகையில், இலங்கையின் இறைமையை முழுமையாக மதிப்பதாக தெரிவித்துள்ள அதானி நிறுவனம், கௌரவத்துடன் இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதிலிருந்து விலகிக் கொள்ள முடிவு செய்துள்ளதாகவும் அறிவித்துள்ளது.

எவ்வாறானும், எதிர்காலத்தில் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து ஏனைய வேலைத் திட்டங்களை முன்னெடுப்பதற்கு தயாராக உள்ளதாகவும் அந்த நிறுவனம் இலங்கை முதலீட்டு சபைக்கு அனுப்பியுள்ள தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.

 

Share.
Leave A Reply

Exit mobile version