நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதன் நபர் ஒருவரை தாக்கிய பிரச்சனை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் வைத்து இரு தரப்பினரதும் சம்மதத்துடன் சமரசமாக முடித்து வைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் கடந்த செவ்வாய்க்கிழமை (11) இரவு நாடாளுமன்ற உறுப்பினரும் , சட்டத்தரணி கௌசல்யாவும் உணவருத்திக்கொண்டிருந்த வேளை அவ்விடத்திற்கு வந்த இருவர், அவர்களுடன் கதைக்க முற்பட்ட நிலையில், தர்க்கமாக மாறி கைக்கலப்பில் முடிந்தது.

கைக்கலப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் நபர் ஒருவரின் தலையில் பீங்கானால் அடித்தமையால் , அவர் தலையில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா , தனது உயிருக்கு ஆபத்து என யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார். அதேவேளை , காயமடைந்த நபரும் தன் மீதான தாக்குதலுக்கும் பரஸ்பர முறைப்பாட்டை வழங்கி இருந்தார்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை (14) இரவு இரு தரப்பினரையும் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து , யாழ்ப்பாண உதவி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.

அதன் போது , இரு தரப்பினரும் சமாதானமாக செல்வதாகவும் முறைப்பாடுகளை மீள பெற்றுக்கொள்வதாகவும் கூறி இரு தரப்பினரும் சமரசமாக செல்வதற்கு உடன்பட்டதை அடுத்து , இரு தரப்பினருக்கும் இடையிலான பிரச்சினை பொலிஸ் நிலையத்தில் வைத்து தீர்க்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version