ஜனாதிபதி ஜயவர்தன காலத்தில் கொண்டு வரப்பட்ட 13 ஆவது திருத்தம் தொடர்பாக பல கண்டனங்களும் அதிருப்திகளும் தெரிவிக்கப்பட்டன. கடுமையான எதிர்ப்புக்கள் காட்டப்பட்டபோதும், இந்தியாவின் அழுத்தம் காரணமாக ஒரு பரீட்சார்த்த முயற்சியாக இது கொண்டுவரப்பட்டு மாகாண சபைகள் உருவாக்கப்பட்டன.
அச்சபைகளுக்கான தேர்தல்கள் நடத்தப்பட்டு அதிகாரப் பகிர்வுக்கான முதல்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என மௌனமாக தெரிவிக்கப்பட்டாலும் 13 ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்ட பின்னும், விடுதலைப் புலிகள் தனி ஈழத்துக்கான போரை முன்னெடுத்து நடத்திக் கொண்டிருந்தார்கள். இதை தமிழ் மக்கள் தீவிரமாக ஆதரித்தார்கள்.
இதேவேளை, மிதவாத கட்சியான தமிழர் விடுதலைக் கூட்டணி போர் நிகழ்ந்த காலத்தில் மிக அடக்கி வாசிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அவர்கள் ஆயுதப்போர் நிகழ்த்தியவர்களுக்கு எதிராக செயற்பட முடியாத சூழ்நிலையின் காவல் கைதிகளாக இருந்தார்கள். தாங்கள் மிக நீண்ட காலமாக கோரிவந்த சமஷ்டி முறையான அரசியல் தீர்வு தொடர்பாக அவர்களின் செயற்பாடுகள் நீறுபூத்த நெருப்பு நிலையிலேயே காணப்பட்டன.
தமிழ்க் கட்சிகள் போராட்ட காலத்தில் ஒதுங்கிக் கொண்டாலும் 2001 ஆம் ஆண்டுக்குப்பின் நான்கு கட்சிக் கூட்டாக உருவாக்கப்பட்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டபோதும், அவர்கள் ஆயுதப்போருக்கான இன்னொரு ஆதரவுத் தளத்தை உருவாக்க செயற்பட வேண்டியிருந்ததே தவிர தாம் முன்னெடுத்து வந்த சமஷ்டிக் கோரிக்கைகளை தொடர்ந்து முன்னெடுக்க முடியாத சூழ் நிலையே காணப்பட்டது. இன்னொரு வகையில் கூறுவதானால் 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு வரும்வரை அவர்களின் செயற்பாடுகளும் நடவடிக்கைகளும் மட்டுப்படுத்தப்பட்டதாகவே இருந்தன.
ஜனாதிபதி பிரேமதாசவின் அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகள் தமிழ் மக்களின் அரசியல் போக்கில் புதிய திருப்பு முனைகளை உண்டாக்கியது. 1994 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் சந்திரிக்கா பண்டாரநாயக்கா நாட்டின் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் புதிய அரசியல் மாற்றமொன்று ஏற்படலாம் என்ற நம்பிக்கை விதைக்கப்பட்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கொள்ளப்பட்டன.
ஏலவே பிரேமதாசவுக்கும் புலிகளுக்கும் இடையிலான ஒப்பந்தம் முறிவு கண்டதுபோலவே அம்மையார் கால ஒப்பந்தம் முறிவடைந்தபோதும் சந்திரிக்கா அம்மையார் தமிழ் மக்களின் நீண்ட கால அரசியல் பிரச்சினக்கு தீர்வொன்றைக்காணும் முயற்சியாக தீர்வுப் பொதியொன்றை முன்வைத்தார்.
மூன்றாவது ஈழப்போர் 1995 ஏப்ரலில் ஆரம்பமானது. இதனால் புலிகளுடனான அரசாங்கத்தின் பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வந்தன என்பதைவிட முறிவடைந்தது. எனினும், சமாதான முயற்சிகளில் தாம் தொடர்ந்தும் அக்கறையுடையவர்களாக இருக்கிறோம் என்பதைக் காட்டுவதற்காகவும் சர்வதேச ரீதியில் தம்பக்கத்தை நியாப்படுத்துவதற்காகவும் அரசியல் தீர்வு யோசனைகளை சந்திரிக்கா அரசு முன்வைத்தது. ஏலவே இந்திய அரசின் அழுத்தம் காரணமாக கொண்டு வரப்பட்ட மாகாணசபை முறைகளைவிட சற்றும் வித்தியாசமான அதிகாரப்பகர்வுக்கு இவர் உடன்பட்டதுபோல் காணப்பட்டது.
1995 ஆகஸ்ட் மாதமளவில் தீர்வு யோசனைகளை கொண்ட முதலாவது வரைபு முன்வைக்கப்பட்டது. இந்த தீர்வு விடயத்தை சிங்கள தீவரவாதிகளும் பௌத்த குருமாரும் கடுமையாக எதிர்த்தார்கள். ஏலவே இவருடைய தந்தையார் தமிழ் மக்களுக்கு செய்த தீங்கின் பரிகாரமாகவும் தாயார் ஸ்ரீமாவோ அம்மையாரின் அரசியல் சர்வாதிகார கெடுதிகளுக்கு விமோசனம் காணும் விதத்திலும் பிராந்திய சபைகள் என்ற தீர்வுப் பொதியை முன்வைத்தார்.
எதிர்ப்பின் காரணமாக பிராந்திய சபைகள் என்ற உள்ளடக்கம் கொண்ட தீர்வுப் பொதியிலுள்ள அதிகாரங்கள் குறைக்கப்பட்டு இரண்டாவது முறையாக 1996 ஆம் ஆண்டு ஜனவரியில் இரண்டாவது தீர்வுப் பொதி முன்வைக்கப்பட்டது. இவ்வரைபு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையினை மாற்றுதல் போன்ற ஏனைய யாப்பு சீர்த்திருத்தங்களும், உள்ளடக்கப்பட்டு 1997 அக்டோபரில் அரசியல் அமைப்பு சீர்திருத்தத்துக்கான அரசாங்க ஆலோசனைகள் எனும் தலைப்பில் கொண்டு வரப்பட்டது. இதை ஆராய்வதற்கு அமைக்கப்பட்ட கட்சிகளின் தெரிவுக்குழு எதிர்த்தது.
இது தொடர்பில் அனைத்து கட்சிகள் அடங்கிய தெரிவுக்குழுவில் ஒரு இணக்கமான உடன்பாட்டுக்கு வரமுடியாத காரணத்தினால் தன்னிச்சையாக பாராளுமன்றத்தில் இதனை சமர்ப்பிப்பதாக சந்திரிக்கா அரசு அறிவித்தது.
கொண்டு வரப்பட்ட தீர்வு யோசனையில் உள்ளடக்கப்பட்ட விடயங்கள்.
1. பிராந்திய சபைகளின் ஒன்றியம்
2. அதிகாரப்பங்கீடு
3. பிராந்திய சட்டத்துறை
4. பிராந்திய நீதித்துறை
என வரையறுக்கப்பட்டு பிராந்தியங்களுக்கு பகர்ந்தளிக்கப்பட்ட முக்கிய விடயங்கள் தொகுத்து தரப்பட்டிருந்தன. இதில் கலைக்கப்படாத பிராந்தியங்களின் ஒன்றியம் என கூறப்பட்டிருப்பதன் மூலம் ஒற்றையாட்சி தன்மை நீக்கப்பட்டு சமஷ்டி முறையிலான பங்கீடு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்தது. அதன்பிரகாரம் கிழக்கில் வாழும் பல்வேறு இனங்களையும் கருத்திற் கொண்டு தென் கிழக்குப்பிராந்தியம், அம்பாறை பிராந்தியம் என உருவாக்கப்படுவதற்கு வழி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த தீர்வு யோசனையானது அதிகாரப்பங்கீட்டு விடயத்தில் முன்னைய தீர்வுப் பொதிகளைவிட சற்றும் முன்னேற்றம் கொண்டதாக காணப்படுகிறது என தெரிவிக்கப்பட்டபோதும் தமிழ் மக்களின் நீண்ட கால அபிலாஷைகளை தீர்க்கும் வண்ணம் அமையவில்லை என்றும், தீர்வு யோசனை முழுவதிலும் பிராந்திய நிர்வாகம் என்ற பதம் பயன்படுத்தப்பட்டுள்ளதே தவிர பிராந்திய அரசு என்ற பதம் பயன்படுத்தப்படவில்லை இது சமஷ்டி ஆட்சி முறை என்ற செயற்பாட்டுக்கு முரணானது எனவும் கூறப்பட்டது.
அத்துடன், தமிழ் மக்களுடைய நீண்ட கால கோரிக்கையான வடக்கு கிழக்கு இணைப்பு என்பது நிபந்தனையில்லாமல் இணைக்கப்படவில்லை. அது ஒரு சர்வஜன வாக்கெடுப்பின் மூலமே மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்கள் வடக்குடன் இணைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. சிங்கள குடியேற்றங்கள் வலுப்படுத்தப்பட்ட நிலையிலும் ஆயிரக்கணக்கான கிழக்கு தமிழ் மக்கள் இடம்பெயர்ந்த நிலையிலும் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படுவதை தமிழ் மக்கள் விரும்பவில்லை.
அதிகாரப்பங்கீடு என்பது இனங்களுக்கிடையே ஒழிய பிரதேசங்களுக்கு அல்ல என்ற அடிப்படையில், வாக்கெடுப்பு நடத்தப்படுவதாக இருந்தாலும் கிழக்கு மாகாண தமிழ் மக்கள் மத்தியில் மட்டும் நடைபெறுவதையே அவர்கள் விரும்புகிறார்கள் என தெரிவிக்கப்பட்டதுடன், இத்தீர்வு யோசனை நடை முறைக்கு கொண்டு வருவதை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சியின் ஆதரவும், தமிழ் மக்களின் பிரதான போராட்ட இயக்கமான விடுதலைப்புலிகளின் ஆதரவு இல்லாமல் கொண்டு வர முடியாது இரு அமைப்பும் நிராகரித்துள்ளது என தெரிவிக்கப்பட்டது.
அது மாத்திரமல்ல சந்திரிக்கா அம்மையாரின் இந்த தீர்வுப் பொதியை பின்னைய காலத்தில் ரணில் விக்கிரமசிங்கவின் ஐ.தே.க பாராளுமன்றத்தில் தீயிட்டு கொளுத்திய சம்பவமும் இடம் பெற்றது.
இதைத் தொடர்ந்து அடுத்த முயற்சியாக முன்னெடுக்கப்பட்ட விடயம் நல்லாட்சி அரசாங்க காலத்தில் புதிய அரசியல் சாசனத்துக்கான முயற்சியாகும். பாராளுமன்றம் அரசியல் நிர்ணசபையாக மாற்றப்பட்டு பொதுக்குழுக்கள் வழிப்படுத்தல் குழுக்கள் நியமிக்கப்பட்டு அதிகாரப்பகிர்வு தொடர்பில் தனித்தனியாக ஆராயப்பட்டது. ஆனால் இங்கும் ஒற்றையாட்சி சமஷ்டி என்ற வாதப்பிரதிவாதங்கள் தலை தூக்கியதே தவிர உருப்படியாக எந்தக்காரியமும் முன் னெடுக்கப்படவில்லை. இதன் பிரதிபலிப்பாகவே 2020 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலின்போது தமிழரசுக்கட்சி தனது தேர்தல் அறிக்கையில் பின்வரும் விடயங்களை முன்வைத்திருந்தது.
‘தமிழ்ப்பேசும் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் பொருட்டு, பெருமளவு தன்னாட்சி அதிகாரத்தை வழங்கும் ஒரு மாற்று அரசியல் ஏற்பாட்டினை பெற காலங்காலமாக பல முயற்சிகளை எமது கட்சி செய்து வந்தது. அடுத்தடுத்து ஆட்சி செய்த அரசாங்கங்களுடன் பல முயற்சிகளை ஈடுபட்டிருந்தாலும் தேசிய இனப்பிரச்சனைக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை. 2002 பெப்ரவரி மாதம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் அன்றைய இலங்கை அரசாங்கத்துக்கும் போர் நிறுத்த ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டதோடு, 2002 டிசம்பரில் ஏற்பட்ட ஒஸ்லோ உடன்படிக்கையில் சில அடிப்படைக் கோட்பாடுகளின் மீது இணக்கம் காணப்பட்டது.
ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழ்ப்பேசும் மக்களின் வரலாற்று ரீதியான வாழ்விடப் பகுதிகளில் உள்ளக சுய நிர்ணய கொள்கையின் அடிப்படையில் சமஷ்டிக் கூட்டமைப்பின் அடிப்படையில் அமைந்த தீர்வொன்றை ஆராய்தல் என்பதாகும். சர்வதேச நியாயங்களின் படியும் சாசனங்களின் பிரகாரமும் தமிழராகிய நாங்கள் தனிச்சிறப்பு மிக்க மக்கள் குழாமாவோம், ஒரு சிறப்பு மிக்க குழாமான நாங்கள், பேரினவாதத்தின் பிடிக்குள் அகப்படாது, கௌரவத்துடனும் சுயமரியாதையுடனும் சுதந்திரமாகவும் அச்சமின்றியும் நாட்டின் ஏனைய மக்களுடன் சமத்துவமான சமூகமாக வாழ விரும்புகிறோம்.
ஒன்றுபட்ட இலங்கைக்குள் சமஷ்டிக் கொள்கைகளை உள்ளடக்கிய அரசியல் அமைப்பின் ஏற்பாட்டின் மூலம் மட்டுமே இலங்கை தமிழர்கள் மற்றும் தீவின் வடக்கு கிழக்குப்பகுதிகளில் வசிக்கும் ஏனைய தமிழ் பேசும் மக்களின் நியாயமான அபிலாஷைகளை பூர்த்தி செய்ய முடியும். கடந்த முப்பது வருடங்களில் வரையப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழுக்களின் பரிந்துரைகள் மற்றும் அவற்றை அடிப்படையாகக் கொண்ட அரசியல் அமைப்பு முன் மொழிவுகளை நோக்கும்போது அடுத்து அடுத்து வந்த அரசாங்கங்கள் ஓர் சமஷ்டிக்கட்டமைப்பை நோக்கி நகர்ந்தமை தெரிகிறது.
இத்தகைய முன் மொழிவுகளின் அடிப்படையிலையே அரசாங்கங்களுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. மேலும் எதிர்காலத்தில் வரவிருக்கும் எவ்வித சவால்களையும் பொருட்படுத்தாது நாங்கள் இம்முயற்சிகளை முன்னெடுப்போம்’ என தமது அறிக்கையில் ஆணித்தரமாக குறிப்பிட்டிருந்தார்கள்.
எனவே தொகுத்து நோக்கும்போது, இலங்கை சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து வடக்கு கிழக்கில் வாழும் தமிழ்ப்பேசும் மக்கள் ஓரே இலக்குக் கொண்ட அரசியல் இலட்சியத்துக்காகவே அவர்கள் தொடர்ந்து போராடி வந்திருக்கிறார்கள் என்பது பல வழிகளில் நிரூபணமாக்கப்பட்டிருக்கிறது.
தந்தை செல்வநாயகம் அதைத் தொடர்ந்து தளபதி அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் தலைவர் சிவசிதம்பரம் அதன்பின்னே இராஜவரோதயம் சம்பந்தன் என்ற மூத்ததலைவர்களின் தியாகமும் தீர்க்கம் கொண்ட போராட்டங்களும் தமிழ் மக்களின் அபிலாஷைகளையும் கனவுகளையும் பெற ஏற்படுத்தப்பட்ட போராட்டங்களே தவிர அது கனவுகளாக இருந்ததில்லை.
ஒரு இனத்தின் ஜனநாயகத்துக்கான விடுதலை என்பது அயிரம் வருடங்கள் நீட்சி பெற்றுச் சென்றாலும் அது அந்த இனத்தின் வரலாற்றுக்கான ஞாயத்தை சொல்லிக் கொண்டேயிருக்கும், எனவே எதுவும் கனவாகிவிட முடியாது.
திருமலை நவம் Virakesari
முற்றும்.
சமஷ்டிக் கோரிக்கை தமிழரசுக் கட்சியின் அஸ்தமித்துப்போன கனவா? பகுதி -6