யுக்ரேன் நேட்டோ உறுப்பினராகச் சேர்க்கப்பட்டாலோ அல்லது அமைதியை ஏற்படுத்தினாலோ தனது அதிபர் பதவியை விட்டுக்கொடுக்கத் தயாராக இருப்பதாக யுக்ரேன் அதிபர் வொலோதிமிர் ஸெலன்ஸ்கி செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
திங்கள் கிழமையன்று நடக்கவுள்ள ஐரோப்பிய தலைவர்கள் இடையிலான சந்திப்பு குறித்து முதலில் பேசிய ஸெலன்ஸ்கி, “யுக்ரேன் போர் தொடர்பாக இந்தச் சந்திப்பில் அடுத்த சில வாரங்களுக்கான உத்திகள் குறித்து ஆலோசிக்கப்படும். யுக்ரேனிய பாதுகாப்புக்கான உத்தரவாதங்கள் குறித்து விவாதிக்கப்படும்,” என்று கூறினார்.
யுக்ரேனுக்கு ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா என இரண்டுமே தேவை என்றும் அவர் தெரிவித்தார்.
யுக்ரேனில் நாளை நடைபெறும் சந்திப்பில் ஐரோப்பிய தலைவர்களின் எதிர்பார்ப்புகள் குறித்து ஸெலன்ஸ்கியிடம் ஒரு செய்தியாளார் எழுப்பிய கேள்விக்கு, “சில வலுவான முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக” தெரிவித்தார்.
இந்தச் சந்திப்பு யுக்ரேன் போர் விவகாரத்தில் ஒரு திருப்புமுனையாக இருக்க வாய்ப்புள்ளது என தான் நம்புவதாகவும் ஸெலன்ஸ்கி தெரிவித்தார்.
ஸெலன்ஸ்கி செய்தியாளர் சந்திப்பின் 5 முக்கிய அம்சங்கள்
- யுக்ரேன் நேட்டோ உறுப்பினராகச் சேர்க்கப்பட்டால் அல்லது அமைதியைக் கொண்டுவர முடியும் என்றால், தனது பதவியை விட்டுக்கொடுக்கத் தயாராக இருப்பதாக ஸெலன்ஸ்கி அறிவித்துள்ளார்.
- அமெரிக்காவுக்கும் யுக்ரேனுக்கும் இடையிலான சாத்தியமான கனிம ஒப்பந்தம் குறித்துப் பேசிய அவர், ஒப்பந்த முன்மொழிவுகள் இதுவரை தாங்கள் விரும்பும் வகையில் இல்லை எனவும், பேச்சுவார்த்தைகள் முன்னேறி வருவதாகவும் குறிப்பிட்டார். அதன் அடிப்படையில், தனது வளங்களைப் பகிர்ந்துகொள்ள யுக்ரேன் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
- அவரை சர்வாதிகாரி என்று முத்திரை குத்தும் வகையிலான டிரம்பின் கருத்து குறித்துப் பேசியபோது, “நான் ஒரு சர்வாதிகாரி அல்ல. ஆனால், புதின் மீண்டும் படையெடுக்க மாட்டார் என்பதை உறுதிப்படுத்த அமெரிக்க அதிபர் உத்தரவாதம் அளிக்க வேண்டும்,” என்று குறிப்பிட்டார்.
- இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவரக்கூடிய பாதுகாப்பு உத்தரவாங்களைப் பற்றி ஆலோசிக்க ஐரோப்பிய தலைவர்கள் யுக்ரேனுக்கு வருகை தர உள்ளார்கள். இந்தச் சந்திப்பு, ஒரு திருப்புமுனையாக இருக்கும் என்று தான் நம்புவதாக அவர் கூறினார்.
- யுக்ரேன், ரஷ்யா இடையிலான மோதலை முடிவுக்குக் கொண்டு வருவது தொடர்பான எந்தவொரு பேச்சுவார்த்தையாக இருந்தாலும், அதில் யுக்ரேன் இருக்க வேண்டும் என்ற
டிரம்பின் ‘சர்வாதிகாரி’ விமர்சனம் குறித்து என்ன கூறினார்?
அதற்குப் பதிலளித்த ஸெலன்ஸ்கி, “ஆம், யுக்ரேன் அமைதிக்காக அதிபர் நாற்காலியை விட்டு நான் விலக வேண்டுமென்று விரும்பினால், அதைச் செய்யத் தயாராக இருக்கிறேன். அதற்குப் பதிலாக யுக்ரேனை நேட்டோ உறுப்பினராக சேர்க்க வேண்டும்,” என்று அவர் குறிப்பிட்டார்.
ஜோ பைடன், டிரம்ப் என இருவரின் நிர்வாகத்தின் கீழும் கிடைக்கும் ஆதரவுக்குத் தான் கடமைப்பட்டுள்ளதாகக் கூறிய ஸெலன்ஸ்கி, அதிபர் டிரம்பிடம் இருந்து பாதுகாப்பு உத்தரவாதம் வேண்டுமென்றும் தெரிவித்தார்.
ரஷ்யாவுடனான போரின்போது யுக்ரேனுக்கு அமெரிக்கா வழங்கிய உதவிக்குப் பிரதிபலனாக, யுக்ரேனின் வளங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டுமென்ற அமெரிக்காவின் கோரிக்கை குறித்தும் அவர் தனது கருத்தைத் தெரிவித்தார்.
முன்பு இந்தக் கோரிக்கையை நிராகரித்த யுக்ரேன் அதிபர் தற்போது, “அமெரிக்காவுடன் அதுகுறித்துப் பேச நாங்கள் தயாராக இருக்கிறோம். எங்கள் வளங்களைப் பகிர்ந்துகொள்ளத் தயாராக இருக்கிறோம். ஆனால், அதற்கு முதலில் இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்கா புதினை கட்டாயப்படுத்த வேண்டும்,” என்று கூறினார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் தன்னை “தனது வேலையை மோசமாகச் செய்துகொண்டிருக்கும் ஒரு சர்வாதிகாரி” என்று குறிப்பிட்டது குறித்துக் கேட்கப்பட்டபோது, “டொனால்ட் டிரம்பின் வார்த்தைகள் என்னைக் காயப்படுத்தவில்லை. ஒரு சர்வாதிகாரிக்குத்தான் அதைக் கேட்டு கோபம் வரும்,” என்று புன்னகையுடன் யுக்ரேன் அதிபர் பதிலளித்தார்.
யுக்ரேனுக்கு ஐரோப்பிய தலைவர்களின் ஆதரவு
பாதுகாப்பு தொடர்பான தனது செலவினங்களை அதிகரிக்கவும், யுக்ரேனில் ஒரு சமாதான ஒப்பந்தத்தை எட்ட உதவவும் ஐரோப்பிய தலைவர்களுக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது.
இந்நிலையில், ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டேர் லேயன், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் மற்றும் பிரிட்டன் பிரதமர் கீயர் ஸ்டார்மருடன் இது தொடர்பாகப் பேசியதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த வாரத் தொடக்கத்தில், ஐரோப்பா முழுவதும் இருந்து பல தலைவர்களுடன் யுக்ரேன் தொடர்பான உச்சிமாநாட்டை பிரான்ஸ் அதிபர் நடத்தினார். அவரும் ஸ்டார்மரும் இந்த வாரம் அமெரிக்க அதிபர் டிரம்புடன் பேச்சுவார்த்தை நடத்த வாஷிங்டன் செல்கின்றனர்.
யுக்ரேன் போரின் மூன்றாவது ஆண்டு நிறைவடைவதை முன்னிட்டு, “நீதியுடன் கூடிய நிலையான, விரிவான அமைதிக்கான அவசரத் தேவை இருப்பதாக” ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் கூறியுள்ளார்.
மேலும், எந்தவொரு சமாதான ஒப்பந்தமும் “யுக்ரேனின் இறையாண்மை, சுதந்திரம், பிராந்திய ஒருமைப்பாட்டை” மதிக்க வேண்டும் என்று அன்டோனியோ குட்டெரெஸ் ஓர் அறிக்கையில் கூறியுள்ளார்.
யுக்ரேன் நேட்டோ உறுப்பினராக இல்லாதது ஏன்?
யுக்ரேன் தலைநகர் கீயவ் மீது வானில் ட்ரோன்களை தேட யுக்ரேனிய சேவைப் பணியாளர்கள் தேடல் விளக்குகளைப் பயன்படுத்துகின்றனர்.
யுக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கி, அந்நாடு நேட்டோவில் உறுப்பினராக வேண்டும் என்று நீண்ட காலமாகக் கூறி வருகிறார்.
கடந்த 1949ஆம் ஆண்டு 12 மேற்கத்திய நாடுகளால் ஒரு ராணுவக் கூட்டணி உருவாக்கப்பட்டது. அதில் ஒரு நாடு தாக்கப்பட்டால், மற்றவர்கள் அதைப் பாதுகாக்க உதவும் என்ற ஒப்பந்தத்துடன் அந்தக் கூட்டணி உருவாக்கப்பட்டது. அதுவே நேட்டோ என்றழைக்கப்படுகிறது. இன்று, ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவை சேர்ந்த 32 நாடுகள் அதில் உறுப்பினர்களாக உள்ளன.
நேட்டோ படைகளை ரஷ்ய எல்லைகளுக்கு மிக அருகில் கொண்டு வரும் என்ற கவலைகளைக் காரணம் காட்டி, யுக்ரேன் உறுப்பினராகும் யோசனையை ரஷ்யா தொடர்ந்து எதிர்த்து வருகிறது. சமீபத்தில், ஸெலன்ஸ்கி நேட்டோ உறுப்பினர் பதவியைத் தனது “வெற்றித் திட்டத்தின்” ஒரு பகுதியாகக் குறிப்பிட்டபோது, ரஷ்ய அதிபர் மாளிகை அவர் “அது நடைமுறைச் சாத்தியமில்லாததைப் பேசுவதாக” கூறியது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு