யுக்ரேன் விவகாரத்தில் எந்தவொரு அமைதி ஒப்பந்தமும் பாதுகாப்பு உத்தரவாதங்களுடன் இருக்க வேண்டும் என்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை சந்தித்த பின்னர் அவர் இதனை கூறினார்.

“இந்த அமைதி யுக்ரேனின் சரணாகதியாக இருக்கக் கூடாது. இது பாதுகாப்பு உத்தரவாதங்கள் இல்லாத போர் நிறுத்தமாக இருக்கக்கூடாது” என்று டிரம்புடனான சந்திப்புக்கு பின் திங்களன்று இரு தலைவர்களும் நடத்திய கூட்டு செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறினார்.

பாதுகாப்பு உத்தரவாதங்களைப் பற்றி குறிப்பிடாத டிரம்ப், யுக்ரேனில் அமைதியைப் பராமரிப்பதற்கான செலவு மற்றும் சுமையை அமெரிக்காவுடன் ஐரோப்பிய நாடுகளும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றார்.

“பாதுகாப்பு சுமையை மிகவும் நியாயமாக பகிர்ந்து கொள்ள வேண்டியதன் அவசியத்தை ஐரோப்பா புரிந்துகொண்டுள்ளது” என்று மக்ரோன் பதிலளித்தார். ரஷ்ய படையெடுப்பு நடந்து 3 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்ட நிலையில், பேச்சுவார்த்தை ஒரு முன்னேற்ற பாதையில் நகர்ந்து வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
விளம்பரம்

கூட்டம் முழுவதும் இருவரும் சுமூகமான வார்த்தைகளைப் பரிமாறிக் கொண்டாலும், ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய போது யுக்ரேனில் போரை முடிவுக்குக் கொண்டு வரும் பிரச்னையில் சில கருத்து வேறுபாடுகள் இருந்தது தெளிவாக வெளிப்பட்டது.

இந்நிலையில், யுக்ரேன் போர் தொடர்பாக ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில், திங்கள்கிழமை நடந்த வாக்கெடுப்புகளில் அமெரிக்கா இரண்டு முறை ரஷ்யாவுக்கு ஆதரவாக நின்றது.

இரு தலைவர்களுக்கும் இடையில் வேறுபாடுகள்

சமாதான உடன்பாட்டில் பாதுகாப்பு உத்தரவாதங்கள் இடம்பெறும் விஷயம் முக்கிய வேறுபாடாகும். அதேபோல், அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்தும் இரு தலைவர்களுக்கும் இடையில் வேறுபாடுகள் இருந்தன.

விரைவில் போர் நிறுத்தம் செய்ய விரும்புவதாகவும், உடன்பாடு ஏற்பட்டவுடன் ரஷ்யா சென்று அதிபர் புதினை சந்திக்க உள்ளதாகவும் டிரம்ப் கூறினார்.

எனினும், மக்ரோன் போர் நிறுத்தம் மற்றும் யுக்ரேனின் நீடித்த பாதுகாப்புக்கான தெளிவான உத்தரவாதங்களை கொண்ட ஒரு பரந்த சமாதான ஒப்பந்தத்தை உருவாக்க வேண்டும் என்றார்.

“நாங்கள் விரைவில் அமைதி வேண்டும் என்று விரும்புகிறோம், ஆனால் பலவீனமான ஒரு ஒப்பந்தத்தை விரும்பவில்லை,” என்று அவர் கூறினார்.

புதினை ‘சர்வாதிகாரி’ என்று அழைக்காத டிரம்ப்

ஆனால் இருவருமே, எந்தவொரு சமாதான உடன்பாடும் யுக்ரேனில் ஐரோப்பிய அமைதி காக்கும் படைகள் இருப்பதை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்பதில் உடன்பட்டனர்.

“அவர்கள் முன் களத்தில் இருக்க மாட்டார்கள். அவர்கள் எந்த மோதலிலும் ஈடுபட மாட்டார்கள். அமைதி நிலவுவதை உறுதி செய்ய அவர்கள் அங்கே நிலை கொண்டிருப்பார்கள்” என்று மக்ரோன் கூறினார்.

இதை ரஷ்ய அதிபர் புதின் ஏற்றுக் கொள்வார் என்று டிரம்ப் அப்போது கூறினார். “நான் குறிப்பாக இந்தக் கேள்வியை அவரிடம் கேட்டேன். அதில் அவருக்கு எந்தப் பிரச்னையும் இல்லை” என்றார் டிரம்ப்.

சமீபத்திய வாரங்களில் புதினுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான டிரம்பின் முயற்சிகளை பிரான்ஸ் அதிபர் பாராட்டினார். அவர் அவ்வாறு செய்வதற்கு “நியாயமான காரணம் இருக்கிறது” என்று அவர் கூறினார்.

யுக்ரேன் அதிபரை கடந்த வாரம் ‘சர்வாதிகாரி’ என்று குறிப்பிட்ட டிரம்ப், புதினை ‘சர்வாதிகாரி’ என்று குறிப்பிடவில்லை. கடந்த வாரம் ரஷ்ய அதிபருடன் தொலைபேசி மூலம் பேசியிருந்த டிரம்ப் அவரை நேரில் சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்.

“நாங்கள் எப்போது பேசுவோம் என்று எனக்குத் தெரியாது,” என்று டிரம்ப் கூறினார். “ஒரு கட்டத்தில் நான் அதிபர் புதினை சந்திப்பேன்.”

மக்ரோனுக்கும் டிரம்புக்கும் இடையிலான சந்திப்பு யுக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பின் மூன்றாம் ஆண்டு நிறைவின் போது நடைபெற்றுள்ளது.

யுக்ரேனிய அதிபர் ஜெலன்ஸ்கி “இந்த ஆண்டு இந்த போரை முடிவுக்கு கொண்டு வர முடியும்” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்த மூன்று ஆண்டுகளை யுக்ரேன் அதிபர் ஜெலன்ஸ்கி, “யுக்ரேனியர்களின் முழுமையான வீரத்தின் மூன்று ஆண்டுகள்” என்று குறிப்பிட்டு செய்தி வெளியிட்டு அந்த நாளை தொடங்கினார்.

யுக்ரேன் தலைநகரில் உலகளாவிய பிரதிநிதிகளுடன் ஒரு நிகழ்வை அவர் நடத்தினார்.

“இந்த ஆண்டு இந்த போரை முடிவுக்கு கொண்டு வர முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று அவர் கூறினார்.

பிரிட்டன், ஜெர்மனி மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் ஆன்லைன் மூலம் இந்த நிகழ்வில் பேசினர். அமெரிக்கா சார்பில் இந்த நிகழ்வில் யாரும் பங்கேற்கவில்லை.

ஒரே நாளில் ரஷ்யாவுக்கு அமெரிக்கா இரு முறை ஆதரவு – ஐ.நா.வில் என்ன நடந்தது?


யுக்ரேன் போர் தொடர்பாக ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் திங்கள்கிழமை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

யுக்ரேன் போர் தொடர்பாக ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில், திங்கள்கிழமை நடந்த வாக்கெடுப்புகளில் அமெரிக்கா இரண்டு முறை ரஷ்யாவுக்கு ஆதரவாக நின்றது.

மாஸ்கோவின் நடவடிக்கைகளை கண்டிக்கும் மற்றும் யுக்ரேனின் பிராந்திய ஒருமைப்பாட்டை ஆதரிக்கும் ஐரோப்பிய வரைவு தீர்மானத்தை இரு நாடுகளும் முதலில் எதிர்த்தன. எனினும் இது இறுதியில் நியூயார்க்கில் உள்ள ஐ.நா பொதுச் சபையில் (யு.என்.ஜி.ஏ) நிறைவேற்றப்பட்டது.

ஐ.நா. பொதுச்சபையில் ஐரோப்பிய தீர்மானத்திற்கு 93 உறுப்பு நாடுகள் ஆதரவளித்தன. ரஷ்யா, இஸ்ரேல், வட கொரியா, சூடான், பெலாரஸ், ஹங்கேரி மற்றும் 11 நாடுகளுடன் சேர்ந்து அமெரிக்கா, இந்த தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தது.

மோதலை முடிவுக்குக் கொண்டுவர அழைப்பு விடுத்து ஐ.நா. பாதுகாப்பு சபையில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை அமெரிக்காவும் ரஷ்யாவும் ஆதரித்தன. அதில் ரஷ்யா மீது எந்த விமர்சனமும் இல்லை.

ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அமெரிக்காவின் 2 முக்கிய நட்பு நாடுகளான பிரிட்டனும் பிரான்சும் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. ஏனெனில் தீர்மானத்தில் சில திருத்தங்களை மேற்கொள்வதற்கான அவர்களின் முயற்சி ‘வீட்டோ’ அதிகாரத்தைக் கொண்டு ரத்து செய்யப்பட்டன.

இதற்கிடையில், ஐரோப்பிய ஒன்றியமும் பிரிட்டனும் திங்களன்று ரஷ்யா மீது புதிதாக பொருளாதாரத் தடைகளை விதித்தன. ரஷ்யாவின் படையெடுப்புக்குப் பின் அந்நாட்டின் மீது விதிக்கப்படும் 16வது சுற்று தடைகளாகும் இவை. ஐரோப்பிய ஒன்றிய தடைகள், ரஷ்யாவின் அலுமினிய ஏற்றுமதிகளையும், தடைகளைத் தவிர்ப்பதற்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் அதன் ‘நிழற்படை’ என்றழைக்கப்படும் கப்பல்களையும் இலக்காகக் கொண்டுள்ளன.

ரஷ்ய ராணுவம் பயன்படுத்தும் இயந்திர கருவிகள் மற்றும் மின்னணு சாதனங்களையும், போரில் ரஷ்யாவுக்கு உதவ 11,000-க்கும் மேற்பட்ட துருப்புகளை நிலைநிறுத்தியதாக கூறப்படும் வட கொரிய பாதுகாப்பு அமைச்சரையும் பிரிட்டனின் பொருளாதார தடைகள் இலக்காக கொண்டுள்ளன.

Share.
Leave A Reply

Exit mobile version