உலக அரசியல் விசித்திரமானது. எதிர்வுகூர முடியாதது.

இன்று பகைவர்களாக இருப்பவர்கள், நாளை நண்பர்களாகலாம். இது மாறியும் நடக்கலாம். ஒவ்வொன்றிற்கும் காரணம் இருக்கும். காரணம் சில சமயங்களில் வெளிப்படையானது. அதுவே சூசகமானதாகவும் இருக்கலாம்.

அமெரிக்கா, ரஷ்யா, உக்ரேன். இந்த நாடுகளுக்கு இடையிலான உறவுகளும் அப்படிப்பட்டவை தான்.

அமெரிக்காவும், உக்ரேனும் நண்பர்கள். இந்த நண்பர்களின் பொது எதிரி ரஷ்யா. இப்படித்தான் நம்பிக் கொண்டிருந்தோம்.

கடந்த வாரம் கூட்டணி மாறியிருக்கிறது. அமெரிக்காவிற்கும், ரஷ்யாவுக்கும் இடையில் புதிய காதல். உக்ரேன் எதிரியாகி இருப்பது போன்றதொரு தோற்றம்.

டொனால்ட் ட்ரம்ப், உக்ரேனிய ஜனாதிபதியை சர்வாதிகாரி என்கிறார். உக்ரேன் மீதான தாக்குதலை ரஷ்யா தான் தொடங்கியது என்றாலும், போருக்கு காரணம் உக்ரேனிய ஜனாதிபதி தான் குற்றம் சுமத்துகிறார்.

வொலொடிமிர் ஸென்ஸ்கியோ, ரஷ்யா உருவாக்கிய பொய்களின் வெளியில் அமெரிக்க ஜனாதிபதி வாழ்கிறார் என சாடுகிறார்.

இத்தனைக்கும் ரஷ்யாவிற்கு எதிராக சண்டையிட உக்ரேனுக்கு உதவியது அமெரிக்கா தான். மூன்று வருடங்களுக்கு மேலாக அமெரிக்கா 183 பில்லியன் டொலருக்கு மேலான தொகையை உக்ரேனுக்கு வழங்கியது.

எனில், ஏனிந்த திடீர் மாற்றம்? இந்த மாற்றத்தின் ஆரம்பப் புள்ளி எது?

டொனால்ட் ட்ரம்ப், ரஷ்ய ஜனாதிபதியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நேரடியாக பேசியதை மாற்றத்தின் தொடக்கம் எனலாம். கடந்த 12ஆம் திகதி சம்பாஷணை நிகழ்ந்தது.

அடுத்ததாக, சவூதி அரேபியாவின் முயற்சியில் ரியாத் நகரில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை.

உக்ரேனிய யுத்தத்திற்கு எவ்வாறு முடிவு கட்டுவது என்பதை ஆராய்வதற்காக பேசுகிறோம் என்று அமெரிக்காவும், ரஷ்யாவும் அறிவித்தன.

உக்ரேனுக்கு அழைப்பு விடப்பட்டிருக்கவும் இல்லை. ஐரோப்பிய நாடுகளும் பங்கேற்கவில்லை.

பேச்சுவார்த்தையின் முடிவில் இனிப்புத் தடவிய வார்த்தைகள் உச்சரிக்கப்பட்டன. உலகம் ஆச்சர்யப்பட்டது.

ரஷ்யாவில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தையும், அமெரிக்காவில் உள்ள ரஷ்ய தூதரகத்தையும் மீண்டும் திறக்க இணங்கியதாக இரு தரப்பும் அறிவித்தன.

ஸெலென்ஸ்க்கி

ஸெலென்ஸ்க்கியின் இராஜதந்திரிகள் இல்லாமல், ரஷ்ய – உக்ரேனிய யுத்தத்தை முடிவுகட்டுவது பற்றி எப்படிப் பேசுவது என்ற கேள்வி எழுந்தது.

இதற்கு அமெரிக்க இராஜாங்க செயலாளர் பதில் அளித்தார். எப்படி சமாதானப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பது என்பதைப் பற்றித் தான் பேசுகிறோம் என்றார்.

அடுத்தடுத்த கட்டங்களில் உக்ரேனும், ஐரோப்பிய நாடுகளும் இணைத்துக் கொள்ளப்படுமெனவும் இராஜாங்க செயலாளர் கூறினார்.

ரஷ்யாவிற்கு எதிரான போரில் அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் நேட்டோ அமைப்பின் ஊடாக கைகோர்த்து உக்ரேனை ஆதரித்தன.

இன்று அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளை மறந்து, உக்ரேனையும் சேர்க்காமல், ரஷ்யாவுடன் பேசுவதன் தாற்பரியத்தை அறியாமல் சர்வதேச சமூகம் புருவத்தை உயர்த்தியது.

டொனால்ட் ட்ரம்ப் வித்தியாசமானவர். அமெரிக்காவுக்கு அனுகூலம் கிடைக்காத எதையும் அவர் செய்ய மாட்டார்.

இந்த உறவுகளின் கடந்த காலத்தைத் திரும்பிப் பார்க்கலாம். டொனால்ட் டரம்ப் 2019இல் உக்ரேனுக்கு கவச வாகனங்களை ஒழிக்கும் ஏவுகணைகளை விற்க ஒப்புதல் அளித்தார்.

ஒரு வருடம் கழிவதற்குள், ரஷ்யாவுடனான அணுசக்தி ஏவுகணை உடன்படிக்கையில் இருந்து விலகினார். இது எந்தெந்த ஆயுதங்களை ஒவ்வொரு நாடும் வாங்கலாம் என்பதை மட்டுப்படுத்தக்கூடிய உடன்படிக்கையாகும்.

ஒரு ரஷ்யக் கப்பலை மையப்படுத்தி, ட்ரம்ப் விதித்த பொருளாதார தடைகளையும் நினைவுகூர வேண்டும். ரஷ்யா குழாய் அமைத்து நேரடியாக ஜேர்மனிக்கு எரிவாயுவை ஏற்றுமதி செய்ய திட்டமிட்டது. அதனை முடக்குவது ட்ரம்பின் நோக்கம்.

இங்குள்ள அரசியலைப் புரிந்து கொள்ள வேண்டும். ரஷ்யா – ஜேர்மன் எரிவாயு விநியோகக் குழாய் அமைக்கப்பட்டால், உக்ரேன் நஷ்டம் அடையலாமென ட்ரம்ப் கருதினார்.

இன்று லெலென்ஸ்க்கியை புறந்தள்ளிவிட்டு, புட்டினின் தோள்களில் கரம் போடுவதை எவ்வாறு புரிந்து கொள்வது?

இராஜதந்திர உறவுகளில், ஒருவரை நண்பன் என ட்ரம்ப் கூறினால், அதனை அப்படியே நம்பி விட முடியாது. அதில் சூசகமான தந்திரம் இருக்கும்.

வட கொரிய ஜனாதிபதியை ஒரு சமயம் பயங்கரவாதியாக வர்ணித்து, இன்னொரு சமயத்தில் கிம் ஜோங் உன்னின் மண்ணில் அவருக்கு கைலாகு கொடுத்து, ‘நாம் காதல் கடிதம் பரிமாறிக் கொண்டோம்’ என்று கூறியவர் தானே!

இன்று புட்டினோடு கைகோர்ப்பதில் அமெரிக்க ஜனாதிபதிக்கு கூடுதலான அனுகூலம் கிடைக்கிறது என்பதாலேயே அவர் உக்ரேனை தள்ளி வைப்பது போன்றதொரு தோற்றத்தை ஏற்படுத்தப் பார்க்கிறார்.

உக்ரேனைத் தள்ளி வைப்பது ரஷ்யாவையும், சீனாவையும் சந்தோஷப்படுத்தும். ரஷ்யா உக்ரேனை ஆக்கிரமித்தபோது, அதனை சீனா ஆதரித்தது.

இன்றைய காலகட்டத்தில் அரசியலைத் தாண்டி தொழில்நுட்ப உலகிலும் சீனாவைப் பரம எதிரியாக கருதுவதால், புட்டினுடன் தோளோடு தோள் சேர்த்து தம் பக்கம் அணைத்துக் கொண்டு சீனாவை சற்று ஓரங்கட்ட முடியுமென ட்ரம்ப் கருதியிருக்கலாம்.

ஒரு அடாவடித்தனமான அரசியல்வாதியைத் தாண்டி, கொடுக்கல் வாங்கல்களில் இலாபம் பெற நினைக்கும் கெட்டிக்கார வியாபாரியும் ட்ரம்பிற்குள் மறைந்திருக்கிறார்.

உக்ரேனிய மண்ணில் இருக்கும் அபூர்வமான தாதுக் கனிமத்தை விலை கொடுத்து வாங்கும் திட்டமொன்றை இம்மாதம் ட்ரம்ப் முன்மொழிந்தார்.

கனிமத்தை வாங்க முன்வந்த அமெரிக்கா, பிரதியுபகாரமாக எதையும் வழங்க முன்வரவில்லையெனக் கூறி லெலென்ஸ்க்கி அதனை நிராகரித்தார்.

உக்ரேனிய யுத்தத்தில் சம்பந்தப்பட்ட பெலாரஸ் ஜனாதிபதி அலெக்ஸாண்டர் லுக்கஷென்கோவுடனும் அமெரிக்க ஜனாதிபதி அரசியலுக்காக வியாபாரம் என்ற தந்திரத்தைப் பயன்படுத்தியுள்ளார்.

உர உற்பத்திக்குத் தேவையான பொட்டாசியம் ஏற்றுமதி மீதான தடைகளை தளர்த்துவதன் மூலம் அந்நாட்டை தம்பக்கம் ஈர்த்து, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளிடம் இருந்து தூர விலக்கி வைக்கும் தந்திரம்.

எந்தவொரு யுத்தமும் வியாபாரம் என்ற கோட்பாட்டுக்கு ஏற்ப, உக்ரேனிய போரின் பின்னணியில் உள்ள மாபெரும் வணிகத்தைத் தாண்டி, அமெரிக்க – ரஷ்ய உறவுகளில் ஏற்படும் மாற்றமும் வணிக நோக்கம் கொண்டது தான்.

இந்த உறவுகளில் பகைமையின் சாயல் தோய்ந்திருந்தாலும், தமக்கு பரஸ்பர நன்மை கிடைக்கும் சந்தர்ப்பத்தில் இரு நாடுகளும் அறிவுபூர்வமான ஒத்துழைப்பை பேணத் தவறுவது கிடையாது.

அது, ஆயுத பேரமாக, பயங்கரவாத ஒழிப்பு முயற்சியாக, விண்வெளியாக, ஏன் எதுவாகவும் இருக்கலாம்.

அமெரிக்காவின் சுயநலத்திற்கு உக்ரேனிய யுத்தத்தையே உதாரணம் காட்ட முடியும்.

2022ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் ரஷ்யா உக்ரேனை ஆக்கிரமித்த சமயத்தில், அந்நாட்டின் யுரேனிய, நிக்கல் கைத்தொழில்கள் மீது அமெரிக்கா தடை விதிக்கவில்லை. மாறாக, கடந்த வருடம் மே மாதம் தான் தடை விதித்தது.

யுரேனியத்தையும், நிக்கலையும் தடை செய்து விட்டால் சந்தைகளின் ஸ்திரத்தன்மை சீர்குலைந்து, தமக்கு நஷ்டம் ஏற்படலாமென்பதை அமெரிக்க நன்கு அறிந்து வைத்திருந்தது.

2014இல் ரஷ்யா கிரைமியாவை ஆக்கிரமித்த சமயம், அமெரிக்காவும் அதன் கூட்டணி நாடுகளும் ஒரு பாசாங்கிற்காக ரஷ்யாவை தண்டித்தனவே தவிர, முழு அளவிலான தடைகளை விதிக்கவில்லை என்பதை ஞாபகப்படுத்தலாம்.

தாம் 2ஆவது தடவையாக பதவியேற்றபோது உக்ரேனிய யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வராவிட்டால், ரஷ்யாவின் மீது தடை விதிக்கப் போவதாக டொனால்ட் ட்ரம்ப் உறுதியளித்திருந்தார்.

ஆனால், இதுவரை புதிய தடைகளை விதிக்கவும் இல்லை. உள்ள தடைகளை நீக்கவும் இல்லை.

இதே ட்ரம்ப் தான் இன்று புட்டினுடன் நட்பை வளர்ப்பது பற்றி பாசாங்கு காட்டுகிறார்.

இங்கிருப்பதும் வியாபாரம் தான். எதிர்காலத்தில் சமாதானப் பேச்சுகள் நடக்கலாம். இன்று புட்டினுடன் தோளோடு தோள் கோர்த்து நின்றால், ஸெலென்ஸ்க்கி இறங்க வருவதைத் தவிர்க்க முடியாது. இறங்கி வந்தால், பேச்சுவார்த்தைகளில் தாம் கேட்பதை ஸெலன்ஸ்க்கி கொடுத்தே ஆக வேண்டும் என்பது ட்ரம்பிற்கு தெரியும்.

இந்த அடிப்படையில் தான், நட்புகளும், பகைமைகளும் இடம் மாறுவதை நோக்க வேண்டியதாக இருக்கிறது.

-சதீஷ் கிருஷ்ணபிள்ளை-

Share.
Leave A Reply

Exit mobile version