இலங்கையில் முன்னாள் போலீஸ் மாஅதிபர் தேசபந்து தென்னக்கோனை கைது செய்து, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள பின்னணியில், அவர் தலைமறைவாகியுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அத்துடன், தேசபந்து தென்னக்கோன் வெளிநாடு செல்வதற்கும் நீதிமன்றம் தடையுத்தரவை பிறப்பித்துள்ளது.

கொலை வழக்கொன்று தொடர்பான விசாரணைகளை அடுத்தே, நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது

பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் போலீஸ் மாஅதிபர் தேசபந்து தென்னக்கோனை, கைது செய்வதற்காக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் அவரது ஓகந்தர மற்றும் கிரிவுல்ல ஆகிய வீடுகளுக்கு சென்ற போதிலும், அவரது வீட்டின் பிரதான நுழைவாயில் மூடப்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்ததாக போலீஸார் குறிப்பிடுகின்றனர்.

இந்த நிலையில், முன்னாள் போலீஸ் மாஅதிபர் தேசபந்து தென்னக்கோனை கைது செய்வதற்கு போலீஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சகர் புத்திக்க மனதுங்க தெரிவித்தார்.

முன்னாள் போலீஸ் மாஅதிபர் தேசபந்து தென்னக்கோன் தலைமறைவாகியுள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது

”2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் தேதி வெலிகம பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றிற்கு முன்பாக கொழும்பு குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குழுவொன்றின் மீது வெலிகம போலீஸ் அதிகாரிகள் குழுவொன்றினால் நடத்தப்பட்ட துப்பாக்கி சூடொன்றில் கொழும்பு குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் கடமையாற்றிய போலீஸ் அதிகாரியொருவர் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் தீர்ப்பை மாத்தறை நீதவான் நீதிமன்றம் 2025ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 27ம் தேதி வெளியிட்டது. இதன்படி, வெலிகம போலீஸ் அதிகாரிகளினால் நடத்தப்பட்ட துப்பாக்கி சூடானது தனிப்பட்ட பாதுகாப்பை கருத்திற் கொண்டு நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு எனவும், அதன்பிரகாரம், அவர்களுக்கு எதிராக எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட கூடாது எனவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

எவ்வாறாயினும், கொழும்பு குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் அந்த இடத்திற்கு அனுப்பப்பட்டமையானது, சட்டத்திற்கு புறம்பாக இடம்பெற்றுள்ளதாகவும், அந்த இடத்திற்கு சென்ற அதிகாரிகள் மற்றும் அப்போதைய போலீஸ் மாஅதிபர் தேசபந்து தென்னக்கோன் உள்ளிட்ட 8 அதிகாரிகளை கைது செய்து இந்த வழக்கில் சந்தேக நபர்களாக பெயரிடுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த உத்தரவின்படி, குற்றப் புலனாய்வு திணைக்களம் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றது” என போலீஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சகர் புத்திக்க மனதுங்க தெரிவித்தார்.

முன்னாள் போலீஸ் மாஅதிபர் தேசபந்து தென்னக்கோன் தலைமறைவாகியுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற நடவடிக்கை பிரதி அமைச்சர் சுனில் வட்டகல, நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் குறிப்பிட்டார்.

தேசபந்து தென்னக்கோனை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது ஏன்?

புத்திக்க மனதுங்க

இலங்கை தென் மாகாணத்தின் மாத்தறை மாவட்டத்திலுள்ள வெலிகம பகுதியில் 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் தேதி இரண்டு குழுக்களுக்கு இடையில் பரஸ்பர துப்பாக்கி சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றது.

வெலிகம பகுதியிலுள்ள தனியார் ஹோட்டல் ஒன்றின் மீது, வெள்ளை நிற வேன் ஒன்றின் வருகைத் தந்த குழுவொன்று துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டது.

இந்த சம்பவம் தொடர்பில் கேள்வியுற்ற வெலிகம போலீஸ் நிலைய அதிகாரிகள் அந்த இடத்திற்கு விரைந்து, துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட குழு மீது பதில் துப்பாக்கி பிரயோகத்தை நடத்தியுள்ளனர்.

இந்த துப்பாக்கி பிரயோகத்தில் வெள்ளை நிற வேனில் வருகைத் தந்த ஒருவர் உயிரிழந்திருந்தார்.

இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணைகளில், ஹோட்டல் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்திய தரப்பினர், கொழும்பு குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் கடமையாற்றும் அதிகாரிகள் என தெரியவந்தது.

சம்பவத்தில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் கடமையாற்றிய இருவர் காயமடைந்த நிலையில், அவர்களில் ஒருவர் கராபிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் அப்போதைய போலீஸ் மாஅதிபராக கடமையாற்றிய தேசபந்து தென்னக்கோன் உள்ளிட்ட 8 பேரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

வெலிகம ஹோட்டல் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்துவதற்காக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளை ஈடுபடுத்தியமை சட்டத்திற்கு புறம்பானது என நீதிமன்ற தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரியின் உயிரிழப்பானது குற்றச் செயல் என்ற அடிப்படையில் தீர்மானத்தை எட்டிய மாத்தறை நீதவான் நீதிமன்றம், முன்னாள் போலீஸ் மாஅதிபர் தேசபந்து தென்னக்கோன் உள்ளிட்ட 8 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவை பிறப்பித்துள்ளது.

தேசபந்து தென்னக்கோன் 1998ம் ஆண்டு போலீஸ் சேவையில் இணைந்துக்கொண்ட நிலையில், அவர் இலங்கையின் 36வது போலீஸ் மாஅதிபராக கடமையாற்றியிருந்தார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

Share.
Leave A Reply

Exit mobile version