கர்நாடகாவில் வாலிபர் ஒருவர் திருமணத்திற்கு மறுத்த பெண்ணைக் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துள்ளார்.

கர்நாடகா மாநிலம் பெலகாவி அருகில் உள்ள யெல்லூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் பிரசாந்த். 29 வயதாகும் பிரசாந்த் பெயிண்டிங் வேலை செய்து வந்தார்.

அவர் அதே பகுதியைச் சேர்ந்த ஐஸ்வர்யா என்ற பெண்ணைக் காதலித்து வந்தார். ஐஸ்வர்யாவைத் திருமணம் செய்து கொள்ளப் பல வழிகளில் முயற்சி செய்தார். இதற்காக அப்பெண்ணின் தாயாரிடம் சென்று தனக்கு ஐஸ்வர்யாவைத் திருமணம் செய்து கொடுக்கும்படி பிரசாந்த் கேட்டார்.

முதலில் பொருளாதார ரீதியாக முன்னேறும்படி அப்பெண்ணின் தாயார் சொல்லி அனுப்பி வைத்தார்.

மீண்டும் ஐஸ்வர்யாவைச் சந்தித்து திருமணம் குறித்துப் பேச ஐஸ்வர்யாவின் சித்தி வீட்டிற்கு வந்தார். ஐஸ்வர்யாவும் அங்கு இருந்தார். பிரசாந்த் ஏற்கனவே விஷமும், கத்தியும் எடுத்துச் சென்று இருந்தார்.

ஐஸ்வர்யாவிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டார். ஆனால் அவர் தனது பெற்றோர் சம்மதம் இல்லாமல் திருமணம் செய்ய முடியாது என்று பிடிவாதமாகத் தெரிவித்துவிட்டார்.

இதனால் கோபத்தில் தன்னிடமிருந்த விஷத்தை ஐஸ்வர்யாவிற்குக் கட்டாயப்படுத்திக் கொடுக்க முயன்றார். அதனை ஐஸ்வர்யா குடிக்க மறுத்துத் தட்டிவிட்டார்.

இதனால் கோபத்தில் தன்னிடம் இருந்த கத்தியை எடுத்து ஐஸ்வர்யா கழுத்தை அறுத்து விட்டார்.

இதில் அதிகப்படியான ரத்தம் வெளியேறி சம்பவ இடத்திலேயே ஐஸ்வர்யா இறந்து போனார். உடனே பிரசாந்த்தும் தன்னிடம் இருந்த அதே கத்தியைப் பயன்படுத்தி தனது கழுத்தை அறுத்துக்கொண்டார்.

இதில் அவரும் ரத்தவெள்ளத்தில் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே இறந்து போனார். இது குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version