சூரியவெவ, ரந்தியகம பகுதியில் மின்சாரம் தாக்கி ஒரு பெண்ணும் அவரது மகனும் உயிரிழந்துள்ளனர்.

சம்பவத்தில் மரணித்தவர்கள் 38 வயதான நான்கு குழந்தைகளின் தாயான எனோஷா ஹர்ஷனி மற்றும் அவரது 5 வயது மகன் கங்கன இந்துவர ஆவர்.

நேற்று (05) மாலை இந்த சிறுவன் பாலர் பாடசாலையில் இருந்து வீடு திரும்பிவிட்டு, வீட்டின் பின்புறமாக தனது சிறிய மிதிவண்டியில் விளையாடிக் கொண்டிருந்தான்.

அந்த நேரத்தில், வீட்டின் அருகே உள்ள ஒரு பேக்கரி மற்றும் அவ்விடத்தில் நிறுத்தப்பட்டிருந்த லொறியைப் பாதுகாக்க அங்கு சட்டவிரோதமாக பொருத்தப்பட்டிருந்த மின்சார கம்பியில் குறித்த சிறுவன் சிக்கிக் கொண்டான்.

முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த தனது மகனைப் பார்க்க சம்பவ இடத்திற்குச் சென்ற தாய், மின் கம்பியில் சிக்கியிருப்பதைக் கண்டு அலறி அடித்து, அவனை விடுவிக்க முயன்றார்.

இதன்போது, தாய் மீதும் மின்சாரம் தாக்கியதோடு, இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் தெரியவந்துள்ளது.

சம்பவத்தின் போது சட்டவிரோதமாக பொருத்தப்பட்ட பாதுகாப்பற்ற மின்சார கம்பியில் மின் விநியோகம் துண்டிக்கப்படாமல் இருந்துள்ளமை விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக சூரியவெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version