மட்டக்களப்பில் கடந்த 2024 ஆம் ஆண்டு 470 சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் வன்முறைகள் பதிவாகியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவு தெரிவித்துள்ளது.

அகில இலங்கை ரீதியாக சிறுவர்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு அரசாங்கத்தினால் பல்வேறு வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற போதிலும் நாட்டில் எங்கோ ஒரு பிரதேசத்தில் துஷ்பிரயோகங்கள் மற்றும் வன்முறைகளுக்கு சிறார்கள் முகம்கொடுத்து வருவதை அவ்வப்போது அறியக்கிடைக்கின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தை பொறுத்தவரையில், சிறுவர் துஷ்பிரயோகம் அதிகம் இடம்பெற்ற பிரதேசங்களாக வாகரை, மண்முனை வடக்கு மற்றும் கிரான் போன்ற பிரதேசங்கள் காணப்படுகின்றது.

மேலும், சிறுவர் உரிமைமீறல் துஷ்பிரயோகம் இடம்பெறும் போது எமது சமூகமானது பார்வையாளராக செயற்படாது உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியது எமது பொறுப்பாகும்.

சிறுவர் துஷ்பிரயோகங்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடுமையான தண்டனைகள் வழங்குவதற்கு சட்டத்தின் மூலம் புதிய ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டிய சூழல் தற்போது காணப்படுகின்றமை அவதானிக்க முடிகின்றது.

சிறுவர்களை பாதுகாப்பதற்கு பாடசாலை மட்டம் சமுதாய மட்டத்தில் பலமான கட்டமைப்புக்கள் உருவாக்கப்பட்டு இருந்தாலும் அதனை நடைமுறைப்படுத்தும் பங்குதாரர்களினால் 100 வீதம் பங்களிப்பை வழங்கி வினைத்திறனான செயற்பாட்டை வழங்குமிடத்து சிறார்களுக்கு ஏற்படும் பாதிப்புக்களை குறைக்க முடியும்.

மேலும் இக்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கு அரச மற்றும் அரச சார்பற்ற அனைத்து தரப்பினரினதும் ஒத்துழைப்பு அவசியமாகின்றது.

சமூகத்தில் சிறார்களுக்கு பிரச்சினைகள் ஏற்படுவதற்கான சூழ்நிலைகள் அவதானிக்கப்படுமிடத்து, உரிய நடவடிக்கை மேற்கொண்டு நிவர்த்தி செய்வதனால் பாதிப்பில் இருந்து சிறார்களை பாதுகாத்து கொள்ள முடியும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Share.
Leave A Reply

Exit mobile version