டொமினிக் மற்றும் கிசெல் பெலிகாட் மகளான கேரோலின் டரியன், தனது தந்தை தனக்கு போதை மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக அதிகாரப்பூர்வமாக குற்றச்சாட்டை பதிவு செய்துள்ளார். இந்த குற்றச்சாட்டை அவர் தந்தை மறுத்துள்ளார்.
தனது முன்னாள் மனைவி கிசெலுக்கு பத்தாண்டுகளுக்கு மேலாக போதை மருந்து கொடுத்து அவரை பாலியல் வன்கொடுமை செய்ததுடன் பல டஜன் ஆண்களை வரவழைத்து அவரை வன்கொடுமை செய்ய வைத்ததற்காக டொமினிக் பெலிகாட்டிற்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
தனது மனைவி வன்கொடுமை செய்யப்படுவதை படம்பிடித்து, நூற்றுக்கணக்கான வீடியோக்களை பட்டியலிட்டு ஹார்டு டிஸ்கில் சேமித்து வைத்தார். அதில் அவரது மகளின் இரண்டு புகைப்படங்களும் இருந்தன. அந்த புகைப்படங்களில் தற்போது 46 வயதான டரியன் நினைவில்லாமல், தனக்கு அடையாளம் தெரியாத உள்ளாடைகளை அணிந்துகொண்டு மயங்கிய நிலையில் இருந்ததாக கூறுகிறார்.
இந்த புகைப்படங்களுக்கு டொமினிக் பெலிகாட் முன்னுக்கு பின் முரணான விளக்கங்களை அளித்துள்ளார். ஆனால் தனது மகளை பாலியல் ரீதியதாக துன்புறுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டை எப்போதும் மறுத்து வந்திருக்கிறார்.
தனது தந்தை தனக்கு போதை மருந்து அளித்து பாலியல் வன்கொடுமை செய்ததற்கு இந்த புகைப்படங்களே ஆதாரம் என டரியன் நீண்ட காலமாக கூறி வந்திருக்கிறார்.
“அவர் எனக்கு போதை மருத்து அளித்தார் என்பது தெரியும். இது ஒருவேளை பாலியல் வன்கொடுமை செய்வதற்காக இருக்கலாம். ஆனால் என்னிடம் எந்த ஆதாரமும் இல்லை,” என அவர் பிபிசியிடம் ஜனவரியில் தெரிவித்தார். காவல்துறையினர் அந்த புகைப்படங்களை தனக்கு முதல்முறை காட்டியபோது ஏற்பட்ட அதிர்ச்சியை பற்றியும் அவர் பேசியிருந்தார்.
இப்போது காவல்துறையினர் விசாரணை நடத்துவர், அதன் பின்னர் வழக்கு தொடருவது குறித்து அரசு தரப்பு முடிவு செய்யும்.
டாமினி பெலிகாட்டின் வழக்கறிஞரான பியாட்ரிஸ் ஜவாரோ, புகாரை முன்வைக்கும் டரியனின் முடிவு “ஆச்சரியமளிக்கவில்லை,” என பிரான்ஸ் ஊடகங்களிடம் தெரிவித்தார்.
ஆனால், தனது மகள் மீது ரசாயன போதைப்பொருட்களை பயன்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக டொமினிக் பெலிகாட் மீது குற்றம்சாட்ட போதிய “பக்கசார்பற்ற கூறுகள்” இல்லை என அரசு தரப்பு வழக்கறிஞர்கள் இதற்கு முந்தைய வழக்கு விசாரணையில் கூறியதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
விசாரணையின் போது “நான் உன்னை தொட்டதில்லை, எப்போதுமில்லை,” என டொமினிக் பெலிகாட் தனது மகளிடம் கெஞ்சினார், “நீங்கள் பொய் சொல்கிறீர்கள்!” என டரியன் கூச்சலிட்டார்.
தம் தாயின் வழக்குப் போல் அல்லாமல், தன்மீது நிகழ்த்தப்பட்டதாக அவர் நம்பும் வன்கொடுமைக்கு ஆதாரம் இல்லாததால், அந்த வழக்கில் “மறக்கப்பட்ட பாதிக்கப்பட்டவராக” உணர்வதாக டரியன் முன்னர் தெரிவித்திருந்தார்.
இவ்வாரத்தில் முன்னதாக தனது தந்தை மீது தாம் சுமத்தும் குற்றச்சாட்டுகள் “ஒரு குறியீடு”, ஆனால் “நான் ராசயன வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட பாதிக்கப்பட்டவள், ஆனால் அவ்வாறு ஏற்றுக்கொள்ளப்படவில்லை.” என்று ஆரம்பம் முதலே தாம் முன் வைத்துவரும் குற்றச்சாட்டை ஒட்டியே இருப்பதாக எல்லே பிரான்ஸ் இதழிடம் அவர் கூறினார்.
தம் சார்பில் வாதிட வழக்கறிஞர் ஃபிளாரன்ஸ் ரால்ட்டை அவர் நியமித்துள்ளார்.
1990-களில் வன்முறையான துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட இரண்டு பெண்களுக்கு நீதி கிடைப்பதற்காக ரால்ட் பல ஆண்டுகளாக போராடிக்கொண்டிருப்பவர். அவர்களில் ஒருவர் மேரியான் என்ற புனைப்பெயரால் அறியப்படும் இளம் சொத்து முகவர். இவர் 1999-ல் நிகழ்ந்த ஒரு பாலியல் வன்கொடுமை முயற்சியில் பாதிக்கப்பட்டவர். இந்த குற்றச்சாட்டை டொமினிக் பெலிகாட் ஒப்புக்கொண்டுள்ளார்.
மற்றொருவரும் தனது 20-களில் இருந்த ஒரு எஸ்டேட் முகவர். அவர் 1991-ல் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக டொமினிக் பெலிகாட் மீது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் தனக்கு இதில் தொடர்பில்லை என அவர் எப்போதும் கூறிவந்துள்ளார்.
வழக்கறிஞருடன் டொமினிக் பெலிகாட் (வலது)
தனக்கும் மேரியனுக்கு ஒற்றுமைகள் இருப்பதாக டரியன் கூறினார். “நாங்கள் இருவரும் பார்க்க ஒரே மாதிரி இருக்கிறோம். அவருக்கும் பொன்னிற கேசம். பாப் கட் செய்யப்பட்டுள்ளது, நாங்கள் இருவரும் ஒரே வருடத்தில் பிறந்தோம்… அவருடைய வழக்கறிஞரை சந்தித்து அனைத்து விவரங்களையும் கேட்டறிய விரும்பினேன்,” என எல்லே பிரான்ஸிடம் கூறினார் டரியன்
காவல்துறையிடம் வழக்கறிஞர் ரால்ட் அளித்த புகாரில், டரியனை பெண் மருத்துவரின் சோதனைக்குட்படுத்த அதிகாரிகள் முன்வரவில்லை என்றும் டொமினிக் பெலிகாட் தன் மனைவி மீது பயன்படுத்திய போதை மருந்துகளுக்கு இவரும் உட்படுத்தப்பட்டாரா என சோதிக்கப்படவுமில்லை என்றும் கூறியிருந்தார். இந்தப் புகார் பிரான்ஸ் ஊடகங்களால் மேற்கோள் காட்டப்பட்டது.
நடந்து முடிந்த வழக்கு கிசெல் பெலிகாட் மீது மட்டும் கவனம் செலுத்தியதாகவும், தனது கட்சிக்காரர் விளிம்பு நிலையில் பாதிக்கப்பட்டவராகவே நடத்தப்பட்டதாக ரால்ட் தெரிவித்தார். ஒரு புதிய தீவிரமான விரிவான விசாரணையை நடத்தவேண்டும் என அதிகாரிகளை அவர் வலியுறுத்தினார்.
டிசம்பரில் டொமினிக் பெலிகாட்டுடன் 49 நபர்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அனைவர் மீதும் குறைந்தது ஒரு குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது. அது கிசெல் பெலிகாட்டை பாலியல் வன்கொடுமை செய்தது.
தங்கள் மீதான குற்றச்சாட்டுக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்போவதாக பதினேழு பேர் முதலில் தெரிவித்தனர். ஆனால் அதன் பின்னர் ஏழு பேர் தங்கள் மனதை மாற்றிக்கொண்டிருக்கின்றனர்.
மேல்முறையீட்டை தொடருவது என முடிவு செய்பவர்கள் இந்த வருட இறுதியில் தெற்கு பிரான்ஸில் உள்ளா நைம்ஸில் வழக்கு விசாரணையை எதிர்கொள்வார்கள்,
2024 செப்டம்பர் முதல் டிசம்பவர் வரை நீடித்த முதல் வழக்கு, கிசெல் பெலிகாட் தனது அநாமதேய உரிமையை விட்டுக்கொடுத்து வழக்கு விசாரணையை பொதுமக்களும் ஊடகங்களும் பார்க்க அனுமதித்ததால் உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்தது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு