பாலஸ்தீனத்தின் மீதான சட்டவிரோதமான ஆக்கிரமிப்பை எதிர்த்து ஹமாஸ் அமைப்பினர் 2023 அக்டோபர் 7-ந்தேதி திடீரென இஸ்ரேல் நாட்டிற்குள் புகுந்து அதிரடி தாக்குதல் நடத்தினர்.

இதில் 1200-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகினர். 250-க்கும் மேற்பட்டோர் பணயக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக இஸ்ரேல் கடந்த 13 மாதகாலமாக நடத்திய தாக்குதலில் 56,000 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். காசா நகரம் முற்றிலுமாக சீர்குலைந்துள்ளது.

கடந்த மாதம் ஏற்பட்ட தற்காலிக போர் நிறுத்தத்தால் லட்சக்கணக்கான மக்கள் மீண்டும் காசாவுக்கு திரும்பினர். மேலும் பணையக்கைதிகள் பரிமாற்றம் பல கட்டங்களாக நடைபெற்றது.

இதற்கிடைய காசாவை விலைக்கு வாங்கி மக்களை அங்கிருந்து வெளியேற்றிவிட்டு அந்நகரத்தை மேற்கு நாடுகளுக்கான சுற்றுலா தளமாக மாற்ற அமெரிக்க அதிபர் டிரம்ப் கங்கணம் கட்டியுள்ளார். தனது தொலைநோக்கு பார்வை குறித்த ஏஐ வீடியோவையும் அவர் வெளியிட்டார்.

இந்நிலையில் ஸ்காட்லாந்து நாட்டில் டிரம்புக்கு சொந்தமான கோல்ஃப் மைதானத்துக்குள் புகுந்த சிலர், `காசா விற்பனைக்கு அல்ல’ என்று பெயின்டால் புல்தரையில் பிரம்மாண்டமாக எழுதியுள்ளனர்.

அதுமட்டுமின்றி, மைதானம் முழுதும் குழுக்கள் தோண்டியும், வீடு மற்றும் சுவர்களில் கிறுக்கியும் சேதப்படுத்திய அந்த பாலஸ்தீனிய குழுவினர், `காசாவைக் கைப்பற்ற நினைத்தால், டிரம்ப்பின் சொத்துக்கள் சூறையாடப்படும்’ என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version