தாய் மற்றும் தந்தையிடமிருந்து பிரிந்து தனது பாட்டியுடன் வசித்து வந்த சிறுமி ஒருவரை போலி பிறப்புச் சான்றிதழ் மற்றும் தேசிய அடையாள அட்டையை தயாரித்து, ஜோர்தானில் உள்ள ஒரு வீட்டிற்கு பணிப்பெண்ணாக அனுப்பியதாகக் கூறப்படும் பிரதிவாதிக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று 12 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளது.

அத்துடன் பிரதிவாதிக்கு 25,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

அதேநேரம் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணுக்கு மூன்று லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், அபராதம் செலுத்தப்படாவிட்டால், ஒன்றரை ஆண்டுகள் தளர்த்தப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றும் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரட்ண மாரசிங்க உத்தரவிட்டார்.

கல்முனைப் பகுதியைச் சேர்ந்த 59 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான அப்துல் காதர் சரீப் என்பவருக்கே இந்த தண்டனை விதிக்கப்பட்டது.

சிறார்களை அடிமைப்படுத்துவதும் அவர்களின் உழைப்பைச் சுரண்டுவதும் கடுமையான குற்றம் என்றும் மனிதகுலத்திற்குப் பொருந்தாத செயல் என்றும் நீதிபதி தீர்ப்பளித்தார்.

தங்களின் சொந்த குழந்தைகளுடன் ஏனைய குழந்தைகளின் பாதுகாப்பையும் நலனையும் உறுதி செய்வது பெரியவர்களின் பொறுப்பு என்று சுட்டிக்காட்டிய நீதிபதி பிரதிவாதி அந்தப் பொறுப்பை புறக்கணித்ததாக குற்றம் சாட்டினார்.

பாதிக்கப்பட்ட சிறுமி வெளிநாடு சென்ற இரண்டு மாதங்களுக்குள் அவர் பணிபுரிந்த வீட்டுக்காரர்களால் சித்திரவதைக்கு ஆளானதாகவும், பின்னர் அவர் தாய் நாட்டிற்கு திரும்பியதாகவும் சுட்டிக்காட்டிய நீதிபதி, அவர் இந்த நாட்டிற்கு திரும்பவில்லை என்றால், மத்திய கிழக்கில் உயிரிழந்த ரிசானாவைப் போன்ற கதியை அந்தப் பெண்ணும் சந்தித்திருக்கலாம் என்றும் குறிப்பிட்டார்.

2008 ஆம் ஆண்டு நாட்டுக்கு திரும்பிய இந்த சிறுமி தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகே குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிரான இந்தக் குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது என்றும், இந்தத் தீர்ப்பை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவருக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் மேலும் உத்தரவிட்டார்.

Share.
Leave A Reply

Exit mobile version