யாழ்பாணம் – கண்டி ஏ9 பிரதான வீதியில் கெக்கிராவ, மடாடுகம பகுதியில் கார் ஒன்று மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் படுகாயமடைந்துள்ளதாக மடாடுகம பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (09) இடம்பெற்றுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த மூவரும் சிகிச்சைக்காக தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
படுகாயமடைந்தவர்களில் காரின் சாரதியும் இரு பெண்களும் உள்ளடக்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கம்பளை ,எத்கால வடக்கு பகுதியை வசிப்பிடமாக கொண்ட 67 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த பெண்ணின் சடலம் தம்புள்ளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மடாடுகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.