நான் மோகித்தை முதல் முறையாகப் பார்த்தபோது அவரது சட்டையின் முன்பகுதியைத் தனது கைகளால் பிடித்துக்கொண்டிருந்தார். இதைத்தான் அவர் கடந்த 17 ஆண்டுகளாகச் செய்து வந்துள்ளார். இது அவருக்குப் பழகியும் போனது. ஆனால் அவர் இனி அதைச் செய்ய வேண்டியதில்லை.
ஏனென்றால் அவ்வாறு அவர் செய்வதற்குக் காரணமாக இருந்த, அவரின் உடலில் கூடுதலாக இருந்த இரண்டு கால்கள் கடந்த மாதம் அறுவை சிகிச்சையின் மூலம் நீக்கப்பட்டன. மிகவும் அரிதான இந்த அறுவை சிகிச்சையை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள் செய்து முடித்தனர்.
உத்தர பிரதேச மாநிலம், உன்னாவ் பகுதியைச் சேர்ந்த மோகித்தால் தனது வயிற்றுப் பகுதியில் இருந்த இரண்டு கூடுதல் கால்கள் நீக்கப்பட்டு விட்டதை இன்னமும்கூட நம்ப முடியவில்லை.
“எனக்கு நான்கு கால்கள் இருந்தது. அதை நீக்க முடியும் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. ஆனால் மருத்துவர்கள் அதைச் செய்து காட்டினார்கள். நான் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மிகுந்த அச்சத்தோடுதான் வந்தேன்,” என்று மகிழ்ச்சியோடு மோகித் கூறினார்.
“எனக்கு இப்போதுதான் நிம்மதியாக இருக்கிறது. எனது வயிற்றில் இருந்த கூடுதல் சுமையை இறக்கி வைத்ததைப் போல் இருக்கிறது.”
மருத்துவத் துறையில் இந்த நிலையை ஒட்டுண்ணி இரட்டையர்கள் (Parasitic Twins) என்று அழைப்பர்.
மோகித்தின் உடலில் கூடுதலாக இருந்த இரண்டு கால்கள் இருந்தன. அவரது பிட்டம், வெளிப்புறத்தில் இருக்கும் பிறப்புறுப்பு ஆகியவை அவருடைய நெஞ்சுப் பகுதியுடன் இணைந்திருந்தது. இதன் எடை 15 கிலோவாக இருந்தது.
மருத்துவர் அசுரி கிருஷ்ணா தலைமையில் நடந்த இந்த அறுவை சிகிச்சை, பிப்ரவரி 8 ஆம் தேதி கிட்டத்தட்ட இரண்டு மணிநேரத்திற்கும் மேலாக நடைபெற்றது.
“கருமுட்டையும், விந்தணுவும் இணையும்போது கருவணு ஒன்று உருவாகும். இதுதான் குழந்தையாக வளர்ச்சியடையும். சில நேரங்களில் தொடக்கத்தில் இது இரண்டு பகுதிகளாகப் பிரியலாம். இதன் விளைவாக இரட்டைக் குழந்தைகள் உருவாகின்றனர். ஆனால் சில நேரங்களில் இவை இரண்டும் சரியாகப் பிரியாமல் ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொண்டிருக்கும்.”
“பின்னர் இது முழுமையான மனித உயிராக வளர்ச்சியடையும்போது பிறக்கும் குழந்தைகள்தான் ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள். மோகித்தை பொறுத்தவரை, கரு உருவானபோது இரண்டு குழந்தைகளும் பிரியவில்லை. அதே சமயம் ஒரு குழந்தை முழுமையாக வளர்ச்சியடைவும் இல்லை.”
“இதனால் ஒருவர் முழுமையாக வளர்ச்சியடைந்ததும், மற்றொரு குழந்தையின் பாகங்கள் இவரது உடலிலேயே ஒட்டுண்ணியைப் போல ஒட்டிக்கொண்டன. இது முழுமையாக வளர்ச்சியடைந்த மனிதனின் உடலில் இருக்கும் ரத்தம் மற்றும் சத்துகளை உறுஞ்சி வாழக்கூடியது.”
மோகித்தின் நிலை குறித்து விளக்கிய அவர், “இதில் நாம் கவனிக்க வேண்டிய ஒரு முக்கிய அம்சம் என்னவென்றால், ஒட்டிக்கொண்டிருக்கும் இந்தப் பாகங்களால் தொடுதல், வலி போன்ற அனைத்து விதமான உணர்ச்சிகளையும் உணர முடியும்,” என்றார்.
பிபிசியிடம் பேசிய மருத்துவர் கிருஷ்ணா, உலகம் முழுவதும் இது போன்ற வழக்குகள் வெறும் 40 முதல் 50 வரை மட்டுமே பதிவாகியுள்ளதாகத் தெரிவித்தார். இதுபோன்ற வழக்குகளில் குழந்தைகள் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டதையும் தெரிவித்தார்.
அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்கள், வயிற்றுப் பகுதியில் இருந்து வெளியே வந்திருந்த இரண்டு கூடுதல் கால்கள் காரணமாக சிறுவனின் இயல்பான வளர்ச்சி தடைப்பட்டதாகத் தெரிவித்தனர்.
இந்தக் கால்களால் உடலிலுள்ள மற்ற பாகங்களுக்கும் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால் அறுவை சிகிச்சை இன்றியமையாத ஒன்றாக இருந்தது.
அவரது உடலில் இருந்த ஒட்டுண்ணி இரட்டையருக்கு, அவரின் மார்புப் பகுதியில் இருந்த நரம்பின் வழியாக ரத்தம் பாய்ந்து வந்தது அவருக்கு எடுக்கப்பட்ட சிடி ஸ்கேன் வாயிலாகத் தெரிய வந்தது.
அறுவை சிகிச்சையைப் பற்றிப் பேசிய மருத்துவர் கிருஷ்ணா, “உடலில் ஒட்டிக்கொண்டிருந்த கூடுதல் பாகங்களை நீக்கியவுடன், மோகித்தின் உடலில் இருந்த 30 முதல் 40 சதவீத ரத்தம் வெளியேறியது. இதனால் அவரின் ரத்த அழுத்தம் குறைந்தது.
இதுபோன்ற ஒரு நிலை ஏற்படலாம் என்பதால், நாங்கள் இதற்குத் தயாராக இருந்தோம். அவரது நிலையைச் சீர் படுத்தினோம். அறுவை சிகிச்சையின்போது மோகித்தின் எந்தவொரு பாகமும் பாதிப்படையாமல் இருப்பதை நாங்கள் உறுதி செய்தோம்,” என்றார்.
இதற்குப் பின்னர் அவரின் வயிற்றுப் பகுதியில் இருந்த கட்டியை மருத்துவர்கள் நீக்கினார்கள்.
நான்கு கால்கள் இருப்பதால், மோஹித் படிப்பைப் பாதியில் விட்டுவிட நேரிட்டதாக மோஹித்தின் தந்தை கூறினார்.
கதிரியக்க நிபுணர்கள், மயக்க மருந்து நிபுணர்கள் மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர்கள் இணைந்து இந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நான்கு நாட்களில் அவர் மீண்டும் வீட்டிற்குத் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார்.
மோகித் நான்கு மாத குழந்தையாக இருந்தபோதே அவரது அம்மாவை இழந்துவிட்டார். இவரது தந்தையான முகேஷ் குமார் கஷ்யப்தான் மோகித்தை குழந்தைப் பருவத்தில் இருந்து வளர்த்து வருகிறார்.
நான்கு கால்கள் இருந்த காரணத்தால் உடல் ரீதியாக மட்டுமின்றி சமூகத்திலும் பல சவால்களை மோகித் சந்திக்க நேரிட்டது.
அதுகுறித்து அவரது தந்தை முகேஷ் குமார் கூறுகையில், “மோகித்தை பள்ளிக்கு அனுப்பியபோது, அங்கிருக்கும் மற்ற மாணவர்கள் அவனை கிண்டல் செய்வார்கள். இதனால் மோகித் என்னிடம் வந்து, தன்னைத் துன்புறுத்துவதாகவும், ‘நாலு கால், நாலு கால்’ என்று கிண்டல் செய்வதாகவும் என்னிடம் கூறினான்,” என்றார்.
இதன் பின்னர் மோகித் தனது பள்ளிப் படிப்பை எட்டாம் வகுப்புடனே நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆனால் இப்போது அந்தப் பழைய கதைகளை மறந்து புது அத்தியாயத்தை தொடங்க மோகித் முயற்சி செய்யப் போவதாகத் தெரிவித்தார்.
“என்னிடம் இருந்த சுமையை இறக்கி வைத்துவிட்டேன். இனி நானும் மற்ற சிறுவர்களைப் போல இருப்பேன்,” என்றார் மோகித்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு