பனாமா கால்வாயை அமெரிக்கா தனது முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதற்கான வழிவகைகள் குறித்து அமெரிக்க இராணுவத்திடம் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஆலோசனை கோரியுள்ளார் என இரண்டு அதிகாரிகள் ரொய்ட்டரிடம் தெரிவித்துள்ளனர்.
எனினும் அதனை இராணுவழிமுறை ஊடாக செய்யப்போகின்றாரா அல்லது வேறு வழிமுறையிலா என்பதை அவர் தெரிவிக்கவில்லை.
டொனால்ட் டிரம்பின் புதிய நிர்வாகத்தின் தேசிய பாதுகாப்பு வழிகாட்டுதல் என்ற இரகசிய ஆவணம் பனாமா கால்வாயை தடையின்றி அமெரிக்கா பயன்படுத்துவதை உறுதி செய்வதற்கான வழிமுறைகளை இராணுவத்திடமிருந்து கோரியுள்ளது என பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
பனாமா இராணுவத்துடன் இணைந்து செயற்படுவது உட்பட அமெரிக்க இராணுவத்திடம் பலவகையான சாத்தியப்பாடுகள் உள்ளன என மற்றுமொரு இராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார்.
இது குறித்த கேள்விக்கு பென்டகன் உடனடியாக பதிலளிக்கவில்லை என கார்டியன் தெரிவித்துள்ளது.
இந்த இடைக்கால ஆவணம் குறித்த தகவலை முதன்முதலில் சிஎன்என் வெளியிட்டுள்ளது.
பனாமா கால்வாயிற்கான சாத்தியப்பாடுகளை உருவாக்குமாறு அமெரிக்க இராணுவத்தை டிரம்ப்நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது என என்பிசி தெரிவித்துள்ளது.
பனாமா கால்வாயை சீனா தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்து அமெரிக்காவிற்கு எதிராக செயற்படக்கூடும் எனஆதாரமில்லாமல் தெரிவித்துவரும் டிரம்ப் அமெரிக்கா பனாமா கால்வாயை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரவேண்டும் என வாதிட்டுவருகின்றார்