ஈரானின் அணு செறிவாக்கல் திட்டத்தை நிறுத்தும் வகையிலும், அணு ஆயுத ஏவுகனைகளை தயாரிக்கக்கூடிய தொழில்நுட்ப அறிவை வளர்த்து கொள்வதை தடுக்கும் வகையிலும், பேச்சுவார்த்தைக்கு வருமாறு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரானிய அதி உயர் தலைவர் ஆயதுல்லா அலி கமேனிக்கு அண்மையில் ஒரு கடிதம் எழுதினார்.

வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் ஊடகவியலாளர்களை ட்ரம்ப் சந்தித்தபோது போது, “ஈரான் இந்த பேச்சுகளில் கலந்து கொள்ள வேண்டும்.

ஏனெனில், இது ஈரானுக்கு பல நன்மைகளை கொண்டு வரும். அணு செறிவாக்கல் விவகாரத்தில் ஏதாவது செய்வதாக வேண்டும். ஏனெனில், ஈரான் அணு ஆயுதம் வைத்து கொள்ள முடியாது” என்று திடமாக கூறினார்.

இதற்கு பதில் கூறும் வகையில் ஈரானிய உயர் தலைவர் அலி கமேனி, “அணுசெறிவாக்கல் விவகாரத்தில் அமெரிக்கா எம்மை கொடுமைக்குள்ளாக்க முடியாது என்றதுடன், சில அரசாங்கங்கள் பேச்சுவார்த்தைகளை வலியுறுத்துவது பிரச்சினைகளை தீர்ப்பதற்கல்ல, மாறாக ஆதிக்கம் செலுத்துவதற்கும் தமது சொந்த எதிர்பார்ப்புகளை திணிப்பதற்கும் ஆகும்” என்று தெரிவித்திருந்தார்.

”விரிவான கூட்டு செயல் திட்டம்” என்ற பெயரில் கடந்த தசாப்த ஆரம்பத்தில் பராக் ஒபாமா அரசாங்கத்தால் கொண்டு வரப்பட்ட ஈரானின் அணுசெறிவாக்கல் திட்டத்தை கண்காணிக்கும் நடவடிக்கைகளுக்கான பன்னாட்டு ஒப்பந்தத்தை அதிபர் ட்ரம்ப் தனது முன்னைய பதவி காலத்தில் 2018ஆம் ஆண்டு மீளப் பெற்று கொண்டிருந்தார்.

ஈரானை அமெரிக்க சர்வதேச தலைமையின் கீழ் கொண்டு வருவதற்கு உரிய செயற்பாடுகள் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று அமெரிக்க ஆய்வாளர்களால் திட்டங்கள் முன்மொழியப்பட்டுள்ளன.

இந்த முன்மொழிவுகளை ஆய்வு செய்யும் பொழுது சுமார் ஆறு ஆண்டுகளின் பின்பு அதிபர் ட்ரம்ப் மீண்டும் அணு செறிவாக்கலை கட்டுப்படுத்தும் பேச்சுகளை ஆரம்பிக்குமாறு கேட்டு கொண்டுள்ளதன் தேவை குறித்து அறிந்துகொள்ள கூடியதாக இருக்கும்.

வெள்ளை மாளிகை ஓவல் அலுவலகத்தில் யார் பதவியில் இருப்பார் என்பதற்கு அப்பால், அமெரிக்காவின் ஈரானுக்கான வெளியுறவு கொள்கை எவ்வாறு இருக்க வேண்டும் என்பது இங்கே முக்கியமானதாகும்.

அதாவது, குடியரசு கட்சிக்காகவோ அல்லது ஜனநாயக கட்சிக்காகவோ என்று அல்லாமல் பொதுவாக ஈரானுக்கான மூலோபாய திட்டம் என்பதை மட்டும் கருத்தில் கொண்டு இந்த திட்டத்தை வரைவதற்கான ஆலோசனை குழு அமர்த்தப்பட்டது என்பது முக்கியமானதாகும்.

அடிப்படையில் சித்தாந்த ரீதியாக ஈரானுடன் உறவு வைத்து கொள்ளும் போது எந்த சித்தாந்தம் அமெரிக்க மேலாண்மைக்கு கூடுதலான சாதமாக இருக்கிறதோ அதை தெரிவு செய்து கொள்வதும், இருதரப்பு உறவில் எத்தகைய நகர்வுகள் அமெரிக்க அதிகாரத்தை பலப்படுத்த கூடியதோ அதை ஏற்றுக் கொள்வதும், வெறும் பேச்சுவார்த்தைக்கான உபாயமாக இல்லாது அடிப்படை உபாயமாக கொள்ளப்பட வேண்டும்.

கடந்த அமெரிக்க நிர்வாகங்கள் விட்டுக் கொடுப்புகளுக்கும் அழுத்தம் பிரயோகிப்பதற்கும் இடையில் மாறி மாறி கொள்கை மாற்றங்களை கொண்டு வந்ததன் காரணமாக, அந்த இடைவெளிகளில் ஈரான் மத்திய கிழக்கு பிராந்தியத்திலும் அதனை சூழ உள்ள பிராந்திய நாடுகளிலும் அமெரிக்காவுக்கு ஒவ்வாத செல்வாக்கை அதிகரித்த அளவில் பெருக்கி கொண்டுள்ளதுடன், அணு செறிவாக்கல் தொழில்நுட்பத்திலும் வெற்றிகளை கண்டு வருகிறது.

கடந்த தசாப்தங்களில் ஈரான் குறித்த அமெரிக்க கொள்கையானது ஊஞ்சல் போல் ஆடிக்கொண்டிருந்தது.

முன்னாள் அதிபர் பராக் ஒபாமா அணு செறி வாக்கல் தொடர்பில் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டார். ஆனால், அவரை தொடர்ந்து வந்த அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அதிகூடிய அழுத்தங்களை பிரயோகிக்கும் வகையில் ஒப்பந்தத்தை மறுத்தார்.

ஆனால், மீண்டும் அதிபர் ஜோ பைடன் அவா்களின் பதவிக்காலத்தில் ஈரானுடன் ஒரு வகை அணு செறிவாக்கல் பேச்சுகள் மூலம் பதட்ட தணிப்புக்கான முன்னெடுப்புகள் இடம்பெற்றன.

ஒரு தொடர்ச்சியற்ற கொள்கை மாற்றங்களின் காரணமாக வொஷிங்டனின் மீதிருந்த நம்பிக்கையை பல ஆசிய, ஐரோப்பிய பிராந்திய நாடுகள் இழந்துள்ளன. இதனால் நிரந்தரமாக அமெரிக்க கொள்கைகளில் நம்பிக்கை அற்ற நிலை எழுந்துள்ளது.

ஐக்கிய இராச்சியம், ஐரோப்பிய ஒன்றியம், ஆசியா, மத்திய கிழக்கு நாடுகளில் குறிப்பாக இஸ்ரேல் கூட அமெரிக்காவுடன் கூட்டாக இயங்குவதில் தயக்கம் காட்ட தொடங்கி விட்டன.

இதனால் ”விரிவான கூட்டு செயல் திட்டம்” என்பதாகவோ அதிகரித்த அழுத்தம் பிரயோகிக்கக்கூடிய புதிய நடைமுறை என்பதோ ஈரானை அணுகுவதற்கான சரியான கோட்பாடுகளாக அமையமாட்டா.

2024 ஆம் ஆண்டிலிருந்து பூகோள மூலோபாய நில அமைவு பரந்த அளவில் மாறி விட்டது.

ஈரானின் பிராந்தியங்களுடனான செல்வாக்கும், அணு செறிவாக்கல் திட்டமும் சம அளவான முக்கியத்துவத்துடன் சமாந்தரமாக பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த இரண்டும் அமெரிக்க நலன் களுக்கும் அந்த பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க கூட்டு நாடுகளுக்கும் பாரிய அச்சுறுத்தலாக எழுந்துள்ளது.

இவற்றில் முக்கியமாக அமெரிக்க அரச கொள்கை மாற்றங்களுக்கு இடையிலான இடைக்கால இடைவெளிகளை தனக்கு சாதகமாக பயன் படுத்திக் கொண்டு அணு செறிவாக்கலை ஊக்குவிப்பதற்கான உகந்த காலமாகவும், அணுஆயுத தொழில்நுட்பத்தை அடைவதற்கான தகுந்த நேரமாகவும் ஈரான் பயன்படுத்திக் கொண்டுள்ளது.

அது மட்டுமல்லாமல், நீண்ட தூர ஏவுகனைகளையும் ஆள் இல்லா விமான உருவாக்க தொழில்நுட்பத்திலும் வளர்ச்சி அடைவதற்குரிய தராதரத்தை அடைந்து கொண்டதுடன் திறனையும் ஈரான் வளர்த்துக்கொண்டுள்ளது.

கடந்த காலங்களில் ஈரான் ஒரே தடவையில் முந்நூறு வரையிலான ஆள் இல்லா விமான மூலம் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதல்கள் இந்த உண்மையை எடுத்துரைப்பனவாக உள்ளன.

இன்று ஈரானிய ஏவுகனைகள் மத்திய கிழக்கு நாடுகளில் எந்த நாட்டையும் தாக்க வல்ல சக்தி கொண்டவையாக உள்ளன.

அத்துடன் முன்பு இருந்ததைவிட இரு மடங்கு அதிகரித்த வகையில் ஈரான் தனது முகவர்களான சியா இஸ்லாத்தை தழுவிய சமூகத்தவரிடையே உள்ள ஆயுத குழுக்களுக்கு உதவிகளை செய்து வருகிறது.

ஹமாஸ் அமைப்பு ஒரு சுன்னி இஸ்லாம் சார்ந்த அமைப்பாக இருந்தபோதிலும் 2023 அக்டோபர் 7ஆம் திகதி யூதர்கள் மீது நடத்திய தாக்குதல்கள் இரண்டாம் உலக போர்க் கால யூத இனஅழிப்பின் பின்பு முதன் முறையாக இடம் பெற்ற மிக கடுமையான தாக்கதலாக கருதப்படுகிறது.

இவை அனைத்தையும் மனதில் கொண்டு ஈரானை கையாள்வதற்கான கொள்கை வடிவமைக்கப்பட வேண்டிய நிலை அமெரிக்க்காவுக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இஸ்ரேலுக்கு ஈரான் அச்சுறுத்தலான ஒரு நிலையை அடைந்துவிட்டது .

இந்த நிலையில் ஈரானை அமெரிக்க அதிகாரத்தின் கீழ் கொண்டு வந்து நீண்ட தூர ஏவுகணைகள், ஆள் இல்லா விமான தயாரிப்புகள், முகவர் யுத்தத்திற்கான உதவிச் செயற்பாடுகள் என அனைத்து விடயங்களுடன் அணு செறிவாக்கலையும் சமாந்தரமாக கட்டுப்படுத்தக் கூடிய அழுத்தத்திற்குள் ஈரானை கொண்டு வருவது அமெரிக்காவுக்கு இன்றைய அவசரமானதும் அவசியமானதுமான மூலோபாயமாக உள்ளது.

ஈரானிய வளர்ச்சியை நன்கு உணர்ந்துகொண்டுள்ள அமெரிக்க தரப்பு, தாம் சமாதான முன்னெடுப்புகளை தொடங்குவது போல மிரட்டல் தொனியிலான அழைப்பொன்றை விட்டிருக்கிறது. குறித்த அழைப்பு புனித ரமழான் காலத்தில் இடம்பெற்றிருப்பது முக்கியமானதாகும்.

இந்த காலத்தில் சமாதானத்திற்கு வராத ஈரான் ஒரு சர்வதேச தீய சக்தி என்று இதர இஸ்லாமிய நாடுகளுக்கும் எடுத்து கூறுவது இதன் பின்புல நிகழ்ச்சி நிரலாகும்.

-லோகன் பரமசாமி-

 

Share.
Leave A Reply

Exit mobile version