விண்வெளியில் வெறும் 8 நாட்கள் மட்டுமே தங்கும் திட்டத்துடன் புறப்பட்டுச் சென்ற சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோருக்கு 9 மாதங்களுக்குப் பின் பூமிக்கு திரும்பும் பயணம் மகிழ்ச்சி தரக்கூடியதாக இருக்கும்.
தற்போதிருக்கும் விண்வெளி வீரர்களில் ஸ்பேஸ் வாக் எனப்படும் விண்வெளி நடையில் அதிக அனுபவம் கொண்டவராக சுனிதா வில்லியம்ஸ் (9 முறை 62 மணி 6 நிமிடம் ) இருக்கிறார். விண்வெளி நடையில் அதிக அனுபவம் கொண்ட பெண்களில் இரண்டாவது இடத்தில் சுனிதா வில்லியம்ஸ் உள்ளார்.
“விண்வெளியில் இருந்து நாம் வாழும் இந்த பூமியை பார்க்கும் வாய்ப்பைப் பெற்றதற்காக நான் மிகவும் அதிர்ஷ்டசாலி என்று கருதுகிறேன்” – இது தனது விண்வெளி பயணங்கள் குறித்து சுனிதா வில்லியம்ஸ் தெரிவித்த வார்த்தைகள்.
தற்போது வெற்றிகரமாக மற்றுமொரு நீண்ட விண்வெளி பயணத்தை நிறைவு செய்து, பூமிக்கு திரும்பும் இவருக்கு உலகெங்கிலும் வாழ்த்துகளும், வரவேற்புகளும் குவிந்து வருகிறது.
ஆனால் சுனிதா வில்லியம்ஸின் வாழ்க்கை எப்படி இருந்தது? அவரின் இந்திய பூர்வீகம் என்ன?
ஜூலாசனுக்கு சுனிதா வில்லியம்ஸ் வந்திருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம்
சுனிதா வில்லியம்ஸின் பூர்வீகம் எது?
சுனிதா பிறந்து வளர்ந்தது என அனைத்தும் ஒரு அமெரிக்கராக இருந்தாலும், அவரது தந்தை ஒர் இந்தியர்.
குஜராத்தின் மெஹ்சானா மாவட்டத்தில் உள்ள ஜுலாசன் கிராமம்தான் சுனிதாவின் தந்தை தீபக் பாண்ட்யா பிறந்து வளர்ந்த இடம். மருத்துவரான தீபக் பாண்டியா, அகமதாபாத்தில் மருத்துவப் படிப்பை முடித்தார்.
அண்ணன் அமெரிக்காவில் இருந்ததால் தீபக்கும் அங்கு சென்றார். அங்கு அவர் உர்சுலின் போன்னி என்ற பெண்ணை திருமணம் செய்துக்கொண்டார். இந்த தம்பதிக்கு ஜெய், தினா, சுனிதா என மூன்று குழந்தைகள் பிறந்தனர். இதில் அமெரிக்காவின் ஓஹாயோ மாகாணத்தில் 1965-ஆம் ஆண்டில் சுனிதா வில்லியம்ஸ் பிறந்தார்.
சுனிதாவின் தந்தை ஒரு இந்து, அவரது தாயார் ஒரு கத்தோலிக்கர் என்பதால், அவரது வீட்டில் அனைத்து மதங்களையும் மதிக்க கற்பிக்கப்பட்டது.
சுனிதாவின் தந்தை தீபக், ஞாயிற்றுக்கிழமைகளில் தேவாலயத்திற்கு பகவத் கீதையை தன்னுடன் எடுத்துச் செல்வார். மேலும் அவர் குழந்தைகளுக்கு ராமாயணம் மற்றும் மகாபாரதக் கதைகளை கற்பித்தார். இந்திய கலாச்சாரத்துடன் ஒரு தொடர்பை ஏற்படுத்த முயன்றார்.
சுனிதா வில்லியம்ஸின் குடும்பத்தில் உடற்பயிற்சிக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது. இதனால் அவரும் அவரது உடன் பிறந்தவர்களும் நீச்சல் கற்றுக்கொண்டனர்.
காலையில் இரண்டு மணி நேரமும், மாலையில் பள்ளி முடிந்த பிறகு இரண்டு மணி நேரமும் அவர்கள் நீச்சல் பயிற்சி செய்தனர்.
சுனிதாவுக்கு நீச்சல் மிகவும் பிடிக்கும். ஆறு வயதிலிருந்தே, அவர் நீச்சல் போட்டிகளில் போட்டியிட்டு பல பதக்கங்களை வென்றார்.
சுனிதா ஒரு நீச்சல் வீராங்கனையாக வருவார் என்று அனைவரும் நம்பினர். ஆனால் அவருக்கோ மருத்துவக் கல்வியில் ஆர்வம் இருந்தது.
சுனிதாவுக்கு விலங்குகள் மீது மிகுந்த அன்பு இருந்ததே அவருக்கு மருத்துவக் கல்வியில் ஆர்வம் மிகுந்ததற்கான காரணம். இதன் காரணமாக அவர் விலங்கு மருத்துவராக விரும்பினார்.
ஆனால் காலம், சுனிதாவை வேறு திசை நோக்கி செல்ல வைத்தது. சுனிதா ஒரு கால்நடை மருத்துவராக மாற விண்ணப்பித்திருந்தார். ஆனால் அவரால் அவர் விரும்பிய கல்லூரியில் சேர முடியவில்லை. இதன் விளைவாக, அவர் தனது சகோதரர் ஜெய்யின் ஆலோசனைபடி அமெரிக்க கடற்படை அகாடமியில் சேர்ந்தார்.
கடற்படையில் தொடங்கிய சாகச வாழ்க்கை
சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி வீரராக துணிகர பயணங்களை மேற்கொண்டிருந்தாலும், அவரது தொழில்முறை வாழ்க்கை கடற்படையில்தான் தொடங்கியது.
1983 ஆம் ஆண்டு சுனிதா வில்லியம்ஸ் அமெரிக்க கடற்படை அகாடமியில் இணைந்தார். இங்கு பயிற்சி பெற்று முடிந்த பிறகு அவர், 1989 ஆம் ஆண்டு கடற்படையில் பயிற்சி விமானியாக இணைந்தார். கடற்படைப் பணியின் போது 30 வகையான வானூர்திகளை இயக்கியதோடு, 2,770 மணி நேரம் வான்வெளியில் பறந்து அனுபவம் பெற்றுள்ளார் சுனிதா வில்லியம்ஸ்.
1993 ஆம் ஆண்டில், அவர் மேரிலாந்தில் உள்ள கடற்படை டெஸ்ட் பைலட் பள்ளியில் பயின்றார். அப்போது அவர் ஹூஸ்டனில் உள்ள ஜான்சன் விண்வெளி மையத்தை பார்வையிட்டார். அங்கு அவர் விண்வெளி வீரர் ஜான் யங்குடன் சேர்ந்து பணியாற்றினார். ஜான் யங், நிலவுக்கு சென்றிருந்தார். சுனிதா, அவரால் ஈர்க்கப்பட்டார். இதன்பின்பு நாசாவில் சேர விண்ணப்பித்தார்.
இந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. ஆனால் சுனிதா பின்வாங்கவில்லை. 1995 ஆம் ஆண்டில் புளோரிடா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் பொறியியல் மேலாண்மையில் முதுகலை பட்டம் பெற்றார். 1997 ஆம் ஆண்டில், அவர் மீண்டும் நாசாவுக்கு விண்ணப்பித்தார்.
இந்த முயற்சியில் நாசா அவரது விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டது. அவர் ஒரு பயிற்சி விண்வெளி வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
விண்வெளி வீரர் ஆனது எப்படி?
2006ம் ஆண்டு டிசம்பர் 9ம் தேதி முதன்முறையாக டிஸ்கவரி விண்கலத்தின் மூலம் விண்வெளிக்கு பயணப்பட்டார். Expedition 14 குழுவுடன் பணிகளைத் தொடர்ந்த அவர் Expedition 15 விண்கலத்தில் பணிகளை முடித்துக் கொண்டு 2007ம் ஆண்டு ஜூன் 22ம் தேதி பூமிக்கு திரும்பினார்.
2012ம் ஆண்டு ஜூலை 15ம் தேதி இரண்டாவது விண்வெளிப் பயணத்தை ரஷ்யாவின் சோயுஸ் டிஎம்ஏ-05 எம் விண்கலத்தின் மூலம் மேற்கொண்டார் சுனிதா வில்லியம்ஸ். இந்த பயணத்தை முடித்துக் கொண்டு அதே ஆண்டில் நவம்பர் 19ம் தேதி பூமிக்கு திரும்பினார்.
2015ம் ஆண்டில் வணிகரீதியான விண்வெளி பயணங்களுக்கான முதல் விண்வெளி வீரராக சுனிதா வில்லியம்ஸ் அறிவிக்கப்பட்டார். இந்த திட்டத்தின் தொடர்ச்சியாக 2024ம் ஆண்டு ஜூன் 5ம் தேதி போயிங் நிறுவனத்தின் ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பயணம் செய்தார்.
ஸ்டார் லைனர் விண்கலத்தின் த்ரஸ்டர்களில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இக்குழு இன்றி விண்கலம் பூமிக்கு திரும்பியது. இதனால் வெறும் 8 நாட்கள் மட்டுமே திட்டமிடப்பட்டிருந்த இந்த பயணம், 9 மாதங்களைக் கடந்திருக்கிறது.
59 வயதான சுனிதா வில்லியம்ஸ் தனது விண்வெளிப் பயணத்தில் அனுபவத்தில் பல சாதனைகளைப் படைத்துள்ளார். எதிர்பாராத விதமாக கூடுதல் நாட்கள் தங்க நேர்ந்த போதிலும், அவர் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாக நாசா கூறியுள்ளது.
இது காதலாக மாறியது, இரண்டு ஆண்டுகள் டேட்டிங் செய்த பிறகு, 1987ம் ஆண்டில் இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.
சுனிதா வில்லியம்ஸ் உலகப் புகழ்பெற்ற விண்வெளி வீரராக அறியப்பட்ட போதிலும், தனது தனிப்பட்ட வாழ்க்கையை வெளிப்படுத்திக் கொள்ள எப்போதும் ஆர்வம் காட்டியது இல்லை.
கடந்த காலத்தில் சுனிதா விண்வெளிக்குச் செல்லும் போது சமோசா மற்றும் பகவத் கீதையை தன்னுடன் எடுத்துச் சென்றார். இது பல்வேறு விவாதங்களை எழுப்பியது.
இது குறித்து சுனிதா வில்லியம்ஸ் பேசுகையில், “இவை என மனதிற்கு மிகவும் நெருக்கமானவை. அது என் தந்தை எனக்குக் கொடுத்த பரிசு. நான் எல்லோரையும் போலவே விண்வெளியிலும் இருக்கிறேன் என்பதை எடுத்துக்காட்ட அது உதவுகின்றது”, என்றார்.
– இது, பிபிசி நியூஸ்ரூம் வெளியீடு.