இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நாசா விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் பத்திரமாக பூமிக்குத் திரும்பியுள்ளார்.
2024 ஜூன் 5 ஆம் திகதி போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) சென்ற அவர், திட்டமிடப்பட்ட 8 நாள் பயணம் தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக 286 நாட்களாக நீடித்தது.
இதனால், அவர் தனது சக விண்வெளி வீரர் புட்ச் வில்மோருடன் (Butch Wilmore) சேர்ந்து ISS இல் தங்கியிருந்தார்.
போயிங் ஸ்டார்லைனரில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறுகள் (த்ரஸ்டர் பிரச்சினைகள் மற்றும் ஹீலியம் கசிவு) காரணமாக அவர்களை அந்த விண்கலத்தில் திருப்பி அனுப்ப முடியவில்லை.
அதனால், நாசா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) இணைந்து, ஸ்பேஸ்எக்ஸின் டிராகன் விண்கலத்தில் அவர்களை மீட்க திட்டமிட்டனர்.
இதற்காக, க்ரூ-9 (Crew-9) பயணத்தில் நிக் ஹேக் (Nick Hague) மற்றும் ரஷ்ய விண்வெளி வீரர் அலெக்ஸாண்டர் கோர்புனோவ் (Aleksandr Gorbunov) ஆகியோருடன் சேர்ந்து சுனிதா மற்றும் புட்ச் பூமிக்குத் திரும்பினர்.
2025 மார்ச் 18 ஆம் திகதி, ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலம் புளோரிடா கடற்கரையில் உள்ள கடலில் வெற்றிகரமாக தரையிறங்கியது.
இலங்கை நேரப்படி மார்ச் 19 அதிகாலை சுமார் 3:27 மணிக்கு தரையிறங்கிய அவர்கள், 17 மணி நேர பயணத்திற்குப் பிறகு பூமியை அடைந்தனர்.
After 286 days in space, @Astro_Suni is finally home. 👏 pic.twitter.com/4GjNSDVCKb
— Rapid Response 47 (@RapidResponse47) March 18, 2025
தரையிறங்கிய பின்னர், சுனிதா வில்லியம்ஸ் முதலில் விண்கலத்திலிருந்து வெளியேறி, புன்னகையுடன் கைகளை அசைத்து வரவேற்பை ஏற்றார்.
பின்னர், வைத்திய பரிசோதனைகளுக்காக அவர்கள் ஹூஸ்டனில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இந்த நீண்ட பயணத்தில், சுனிதா மற்றும் புட்ச் சுமார் 900 மணி நேர ஆராய்ச்சி மற்றும் 150 அறிவியல் பரிசோதனைகளை ISS இல் மேற்கொண்டனர்.
286 நாட்களில், அவர்கள் பூமியை 4,576 முறை சுற்றி, 121 மில்லியன் மைல்களுக்கு மேல் பயணித்தனர்.
சுனிதாவின் இந்த சாதனை, விண்வெளி ஆய்வில் அவரது மகத்தான பங்களிப்பை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.