விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் தளபதிகளான கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் மற்றும் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் ஆகியோர் 21 வருடங்களின் பின்னர் அரசியல் ரீதியில் இணைந்துள்ளனர்.
மட்டக்களப்பில் இன்று (22) இடம்பெற்ற சந்திப்பின் போது, இருவருக்கும் இடையில் கனவான் என்ற பெயரிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
கிழக்கு மாகாண தமிழர்களின் இருப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் தாம் மீண்டும் இணைந்துக்கொண்டதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.
கிழக்கு தமிழர் கூட்டமைப்பு உதயம்
கிழக்கு தமிழர் கூட்டமைப்பானது, கடந்த 15ம் தேதி உருவாக்கப்பட்டது
கிழக்கு மாகாணத்தில் வாழும் தமிழ் மக்களின் இருப்பை உறுதிப்படுத்தி, கிழக்கு தமிழர்களின் வளர்ச்சியையும், சுபீட்சத்தையும் கருத்திற் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள கூட்டணியாக கிழக்கு தமிழர் கூட்டமைப்பு தங்களை அடையாளப்படுத்திக் கொள்கிறது.
கிழக்கு தமிழர் கூட்டமைப்பானது, கடந்த 15ம் தேதி உருவாக்கப்பட்டது.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியும், முன்னாள் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தலைமையிலான முற்போக்கு தமிழர் கழகமும் இணைந்து இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையில் கடந்த 15ம் தேதி கைச்சாத்திட்டிருந்தனர்.
எதிர்வரும் மே மாதம் 06ம் தேதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ் மக்களின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் இந்த கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில், கிழக்கு தமிழர் கூட்டமைப்பின் இரண்டாம் கட்டமாக விநாயகமூர்த்தி முரளிதரன் என அழைக்கப்படும் கருணா அம்மான் தலைமையிலான தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியும் இன்று (22) இணைந்துக்கொண்டுள்ளது.
21 வருடங்களுக்கு முன்னர் பிரிந்த கருணா அம்மான் – பிள்ளையான்
21 வருடங்களுக்கு முன் புலிகள் அமைப்பிலிருந்து வெளியேறினர்
விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கிய தளபதிகளாக விளங்கிய விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) மற்றும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) ஆகியோர் 21 வருடங்களுக்கு முன்னர் விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்துள்ளனர்.
விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பிரிவதாக 21 வருடங்களுக்கு முன்னர் மார்ச் மாதம் 04ம் தேதி கருணா அம்மான் அறிவிப்பை வெளியிட்டதாக சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தெரிவித்தார்.
தமிழீழ போராட்டத்தில் வடக்கு மாகாண தமிழர்களினால், கிழக்கு மாகாண தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டு வந்ததை எதிர்த்து, அப்போதைய தளபதியாக விளங்கிய கருணா அம்மான் குரல் எழுப்பியதாக அவர் குறிப்பிட்டார்.
”கிழக்கு மாகாண போராளிகள் மீது விடுதலைப் புலிகள் படையெடுத்து தாக்குதல் நடத்தியதை அடுத்து, சகோதர படுகொலைகளை ஊக்குவிக்க முடியாது என்ற அடிப்படையில் விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து வெளியேறுமாறு கருணா அம்மான் பணித்ததை தொடர்ந்து நானும் வெளியேறினேன்” என்கிறார் சிவநேசத்துரை சந்திரகாந்தன்.
”தமிழீழ போராட்டம் என்கின்ற போர்வையில் வடக்கு தலைமைகளினால் கிழக்கு மாகாணம் வஞ்சிக்கப்பட்டு வந்ததை எதிர்த்து கருணா அம்மான் குரல் எழுப்பினார். அவருடைய கருத்தை ஏற்று நாமும், எம்மை போன்ற போராளிகளும் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து வெளியேறினோம். ஆயுத இயக்கமாக ஒன்றும் சாதிக்க முடியாது என்பதால் ஒரு ஜனநாயக பாதையில் ஜனநாயக இயக்கமாக நாங்கள் ஒன்றுப்பட்டு செயற்பட முயன்றோம்.” என சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.
”தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியை நான் உருவாக்கியபோதிலும் நானும் கருணா அம்மானும் ஒன்றாக இணைந்து பயணிக்க முடியாத துரதிஷ்டவசமான சில சம்பவங்கள் நடந்தது. நாங்கள் இரண்டு பேரும் தூர விலக வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டது.
இருந்தாலும் நான் முதலமைச்சராக மக்களால் தெரிவு செய்யப்பட்டேன். கருணா அம்மான் நாடாளுமன்றத்தில் மீள்குடியேற்ற பிரதி அமைச்சராக வந்து மக்களுக்கு பணியாற்றினார்” என சிவநேசத்துரை சந்திரகாந்தன் கூறுகின்றார்.
அரசியல் ரீதியில் இணைய காரணம் என்ன?
”இந்த மாகாணத்தினுடைய பல்லின மக்கள் வாழ்கின்ற சூழ்நிலையில் தமிழ் மக்களின் எதிர்காலம் அவர்களுடைய அரசியல் அதிகாரத்தை தொடர்ந்து தக்க வைப்பது. கல்வி, பொருளாதார, சுகாதார, உட்கட்டமைப்பு மேம்பாடு, மாகாண சபையின் அதிகாரம் என்கின்ற போது நாங்கள் தொடர்ந்தும் பிரிந்து செயற்பட்டு கொண்டிருப்பது மக்களுக்கும் பின்னடைவை கொடுத்து, இந்த மாகாணத்திற்கும் பின்னடைவை ஏற்படுத்தும்.
நான் குறிப்பிட்டதை போன்று பல்லின மக்கள் வாழ்கின்ற அடிப்படையில் எமது சமூகம் தொடர்ந்தும் பின்தள்ளப்படக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதை நாங்கள் உணர்ந்துள்ளோம். அந்த அடிப்படையில் கடந்த காலங்களை மறந்து சரி செய்து, எதிர்காலத்தில் ஒரு உறுதியான கிழக்கு மாகாண அரசியல் இயக்கத்தை நிர்வ வேண்டும் என்ற பகிரங்க கோரிக்கை காரணமாக நாங்கள் இன்று பிரதான தளபதிகளாக இருந்தவர்கள் என்ற அடிப்படையில் கனவான் ஒப்பந்தத்தை செய்திருக்கின்றோம்.” என அவர் மேலும் குறிப்பிடுகின்றார்.
கருணா அம்மான் என்ன சொல்கின்றார்?
”தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை எதிர்த்து நின்று, வெற்றியடைந்தவர்கள் என்பது உண்மையில் நாங்கள் மட்டும்தான்” என விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) தெரிவிக்கின்றார்.
மட்டக்களப்பில் இன்று புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டதை தொடர்ந்து, நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
”இது இணைவு என்பதல்ல. நாங்கள் இணைந்து தான் தொடர்ந்தும் இருந்திருக்கின்றோம். இன்று தேவையை கருத்திற் கொண்டு கூடியிருக்கின்றோம். நான் மத்திய அரசாங்கத்தில் வேறொரு பாதையில் இருந்தபடியால், அதேபோன்று பிள்ளையான் அவர்கள் முதலமைச்சராக இருந்த அந்த அடிப்படையில் இருவரும் அந்த சந்தர்ப்பங்களை பயன்படுத்தி பாரிய அபிவிருத்திகளை ஏற்படுத்தி பல மாற்றங்களை உருவாக்கியிருந்தோம்.
நானும் பிள்ளையானும் பல துயரங்களை சந்தித்திருக்கின்றோம். ஏனென்றால், விடுதலைப் புலிகள் இயக்கத்தை எதிர்த்து நின்று, வெற்றியடைந்தவர்கள் என்பது உண்மையில் நாங்கள் மட்டும் தான். அந்த தலைமைத்துவத்தின் தவறான முடிவால்தான் நாங்கள் இன்று வெளியேறியிருந்தோம்.” என விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) தெரிவித்தார்.
”மீண்டும் நாங்கள் இணைந்துள்ளோம். எந்த நோக்கத்திற்காக நாங்கள் அன்று போராட்டத்திலிருந்து ஜனநாயக வழியில் வந்து கிழக்கு மாகாண மக்களையும், கிழக்கு மாகாண இளைஞர்களையும், கிழக்கு மாகாண தமிழ் பிரதேசங்களை தக்க வைக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக வந்தோமோ, அதேநோக்கத்திற்காக தற்போது மீண்டும் நாங்கள் இணைந்திருக்கின்றோம். எமது இணைவு என்பது முடிவற்ற வளர்ச்சி பாதையை நோக்கியதாக இருக்கும் என்பதை நான் இந்த இடத்தில் தெரிவித்துக்கொள்கின்றேன். ” என விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) குறிப்பிடுகின்றார்.
இதேவேளை, விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்ததன் பின்னர் தாம் அரசியல் ரீதியில் பேச்சுவார்த்தைகளை நடத்திய போதிலும், அரசியல் ரீதியான ஒருமைப்பாடு இருவருக்கும் இடையில் இருக்கவில்லை என சிவநேசத்துரை சந்திரகாந்தன், பிபிசி தமிழுக்கு குறிப்பிட்டார்.
எனினும், இன்று தானும், கருணா அம்மானும் இணைந்துக்கொண்டு அரசியல் ரீதியில் செயற்படும் வகையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.