பட்டலந்த விவகாரம் அதனை மையப்படுத்திய ஊடகவியலாளர் சந்திப்புகளும் அறிக்கைகளும் தென்னிலங்கை செய்திகளும் இலங்கை அரசியல் கலாசாரத்தின் வன்போக்கு தன்மையை சிங்கள பௌத்த தேசியவாத உள்ளக முரண்பாட்டுக்குள்ளாலேயே அடையாளப்படுத்துவதாக அமைகின்றது.

ஈழத்தமிழர்களின் நீதிப்போராட்டத்தில், சிங்கள-பௌத்த தேசியவாதத்தின் வன்முறை கலாசாரத்தை தோலுரிக்கும் சந்தர்ப்பங்களிலெல்லாம், இனவாத கருத்தியலாக சாயம் பூசும் நிலைமைகளே காணப்பட்டது.

மேலும், சிங்கள – பௌத்த தேசியவாதத்தின் அரச இயந்திரம், ஈழத்தமிழர் நியாயாதிக்கத்தை இருட்டடிப்பு செய்திருந்தது. எனினும் சிங்கள-பௌத்த தேசியவாதம் தனக்குள் மோதிக்கொள்கையில் அரசியல் கலாசாரம் மறைப்பின்றி புலப்படுகின்றது. எனினும் இதன் செல்தூரம் சந்தேகத்திற்குரியதாகவே அமைகின்றது.

சிங்கள-பௌத்த தேசியவாதத்தின் வன்போக்கு தன்மை அம்பலப்படுவது, இலங்கை அரசின் சிங்கள-பௌத்த தேசியவாத இருப்பை கேள்விக்குட்படுத்தக்கூடியதாகும். இலங்கை ஆட்சியாளர்கள் இதனை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. இக்கட்டுரை பட்டலந்தவை மையப்படுத்தி எழும் அரசியல் உரையாடல்களால் கட்டவிழும் இலங்கையின் வன்முறை அரசியல் கலாசாரப் போக்கை அடையாளப்படுத்துவதாக உருவாக்கப்பட்டுள்ளது.

25 வருடங்களுக்கு பிறகு, ‘பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை’ மார்ச்-14 அன்று இலங்கை பாராளுமன்றத்தில் சபைத் தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவால் சமர்ப்பிக்கப்பட்டது. மேலும், தேவையான நடவடிக்கை குறித்த ஆலோசனைக்காக அறிக்கை சட்டமா அதிபருக்கு அனுப்பப்படும் என்றார். அத்துடன் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அறிக்கையை ஆய்வு செய்து பரிந்துரைகளை வழங்க ஒரு சிறப்புக் குழுவை நியமிப்பார் என்றும் தெரிவித்திருந்தார்.

பாராளுமன்ற விவகாரக் குழு, பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை மீதான விவாதத்தை ஏப்ரல் மற்றும் மே மாதம் பாராளுமன்றத்தில் நடத்த முடிவு செய்துள்ளது. பாராளுமன்ற அறிக்கையின்படி, விவாதத்தின் முதல் நாள் ஏப்ரல் 10, 2025 அன்று நடைபெறும். இரண்டாவது நாள் மே மாதத்தில் திட்டமிடப்படும். சரியான திகதி இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட்டலந்த விவகாரம் முழுமையாக ரணில் விக்கிரமசிங்கவின் ஆரம்பகால அரசியல் வன்முறை செயற்பாட்டை குறிப்பதாகும். பட்டலந்த ஆணைக்குழுவின் விசாரணைகளின் போது, ரணிலின் பராமரிப்பாளராக விளங்கிய வின்சென்ட் பெர்னாண்டோ உள்ளிட்டவர்களின் சாட்சியங்களை வைத்துப் பார்க்கும் போது பட்டலந்த வதை முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகள் குறித்து ரணிலுக்கு நன்கு தெரிந்திருக்கின்றன.

இந்த நடவடிக்கைகள் அவரது வீட்டிற்கு அருகாமையில் இருப்பதால், அவர் சித்திரவதை அறைகள் பற்றி நிச்சயம் அறிந்திருக்கவே வேண்டும் என்ற முடிவுக்கு ஆணைக்குழு வந்தது. 90களின் இறுதியில் ‘பட்டலந்த’ என்ற அடைமொழியில் ரணில் கேலிக்கைக்கு உட்படுத்தப்பட்ட பதிவுகளும் காணப்படுகிறது. தற்போது பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை தொடர்பான பொதுவெளி உரையாடலும் அல்ஜசீராவில் ரணிலின் நேர்காணலைத் தொடர்ந்தே உருவாகியது.

இப்பின்னணியிலேயே பாராளுமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதை தொடர்ந்து, மார்ச் -16அன்று ரணில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். இக்காணொளியில் ரணில், தன் மீதான குற்றச்சாட்டை நிராகரித்ததுடன், ஜே.வி.பி தொடர்பிலான குற்றச்சாட்டுக்களை விழித்திருந்தார்.

“அறிக்கையின் தீர்மானங்களில் என்னைப்பற்றி கூறப்பட்டுள்ள விடயம் என்னவெனில் அமைச்சர் என்ற வகையில் பொலிஸ் அத்தியட்சகர் ஊடாக பொலிஸ் அதிகாரிகளுக்கு வீடுகளை வழங்கியமை சரியில்லை என்பதாகும். ஆணைக்குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள வேறு எந்தவொரு விடயத்திலும் நான் தொடர்புபடவில்லை” என குறிப்பிட்டிருந்தார்.

மேலும் தெரிவிக்கையில், “1987 இலங்கை- இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திட்ட பின்னர், மக்கள் விடுதலை முன்னணி, நாடு முழுவதும் வன்முறைகளில் ஈடுபட்டிருந்தது. அந்த நேரத்தில் நாட்டில் உள்ள கேந்திர நிலையங்களைப் பாதுகாப்பதற்கான அதிகாரம் ஜே. ஆர்.ஜெயவர்தன ஜனாதிபதியால் அமைச்சரவை அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டது.

பியகம பகுதியில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், டீசல் மின் உற்பத்தி நிலையம், மஹாவெலியில் இருந்து கொழும்புக்கு மின்சாரத்தை விநியோகித்த மத்திய நிலையங்கள், வர்த்தக வலயங்கள், பொருளாதார மத்திய நிலையங்கள் ஆகியவற்றைப் பாதுகாப்பதற்காக இராணுவம் அழைக்கப்பட்டது.

மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) 1988 -90 காலத்தில் செய்த பயங்கரவாத செயல்பாடுகள் பல தொடர்பில் முடிவுரை அவதானிப்புகளில் காட்டப்பட்டுள்ளன. அதன் பின்னணியும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆணைக்குழு அறிக்கையின் மூன்றாவது அத்தியாயம் ஜே.வி.பி. செய்த கொடூரமான பயங்கரவாத செயல்களைப் பற்றி விரிவாகக் குறிப்பிடுகிறது. முழு வரலாறும் அதில் சேர்க்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.

பட்டலந்த விசாரணைக் குழுவின் அறிக்கை தொடர்பான ரணில் அளித்துள்ள மறுப்புரை காணொளியில் ‘கொலைக்கு பதில் கொலை’ தான் என்ற வன்முறை அர்த்தமே உள்பதிந்துள்ளது. அதாவது 1988 -1990 காலப்பகுதியில் மக்கள் ஜே.வி.பி.யினரால் மேற்கொள்ளப்பட்ட வன்முறை செயற்பாட்டிற்கு பதிலீடாகவே ஜே.ஆர்.ஜெயவர்த்தன தலைமையிலான அரசாங்கம் வன்முறையை பிரதியீடு செய்துள்ளது என்பதனையே வெளிப்படுத்துகின்றது. இது இலங்கையின் அரசியல் கலாசாரத்தில் ஆழமாக பொதிந்திருந்த வன்முறை போக்கையே உறுதி செய்கின்றது.

இலங்கை வரலாறு முழுவதும் இத்தகைய வன்முறை போக்கே ஈழத்தமிழர்கள் மீது பிரயோகிக்கப்பட்டு வந்ததுடன், இலங்கை அரசாங்கங்களும் அதனை நியாயாதிக்கப்படுத்தியும் வந்துள்ளது. 1983 ஆம் ஆண்டு கறுப்பு ஜூலையின் ஆரம்பமாக வர்ணிக்கப்படும் ‘13 இராணுவத்தினர் விடுதலைப்புலிகளால் கொலை செய்யப்பட்டமையும்; அதனை கொழும்பில் கூட்டு இறுதிச்சடங்கு மூலம் ஜெயவர்த்தன அரசாங்கம் வன்முறையை தூண்டியமையும்’ கொலைக்கு கொலை தான் என்ற இலங்கை அரசியல் கலாசாரத்தின் பகுதியாகவே அமைந்திருந்தது.

அதேவேளை கறுப்பு ஜூலைக்கான ஆரம்பமாக வர்ணிக்கப்படும் கொலை கதை வெற்றியாளர்களால் எழுதப்பட்ட சதியாகவே அமைகின்றது. 1980 களிலேயே யாழ். நூலக எரிப்பு, திருகோணமலை படுகொலை என ஈழத்தமிழர் மீதான இலங்கை அரச இயந்திரத்தின் ஆதரவுடனான பேரினவாதத்தின் தொடர்ச்சியே கறுப்பு ஜூலை இனப்படுகொலையுமாகும்.

அதனை உறுதிப்படுத்தும் வகையிலேயே கறுப்பு ஜூலை இனவழிப்புக்கு ஒரு சில வாரங்களுக்கு முன்னர் ஜூலை -12அன்று லண்டன் டெய்லி டெலிகிராப் (Daily Telegraph) பத்திரிகைக்கு ஜே.ஆர். ஜெயவர்த்தன வழங்கிய நேர்காணலில், “யாழ்ப்பாண மக்களின் கருத்தைப் பற்றி இப்போது எனக்கு கவலை இல்லை. இப்போது நாம் அவர்களைப் பற்றி சிந்திக்க முடியாது. அவர்களின் வாழ்க்கையைப் பற்றியோ, அல்லது நம்மைப் பற்றிய அவர்களின் கருத்தைப் பற்றியோ எண்ணங்கள் இல்லை. பயங்கரவாதிகள் அழிக்கப்படும் வரை நமக்கு சாதகமாக எதுவும் நடக்காது. அவ்வளவுதான்.” என தமிழர்களுக்கு எதிராக வன்முறை கருத்தையே விதைத்திருந்தார்.

ஈழத்தமிழர்கள் மீதான இலங்கை அரச இயந்திரத்தின் வன்முறை அரசியலை வரவேற்றதன் பயன், 80களின் இறுதியிலேயே சிங்கள இளைஞர்கள் மீது திசை திருப்பப்பட்டது. பட்டலந்த அறிக்கையின் வதைமுகாம் தொடர்பான வன்முறை குறிப்புகளும் ரணிலின் காணொளி செய்தியும் அதனையே உறுதி செய்கின்றது.

ஜே.வி.பியினால் 1988 – 1990களில் மேற்கொள்ளப்பட்ட வன்முறைகளுக்கு பதிலீடான அரச இயந்திரத்தின் செயற்பாடாகவே பட்டலந்த வதைமுகாமை ரணில் நியாயப்படுத்த முயலுகின்றார். ‘கொலைக்கு பதில் கொலை’ என்ற இலங்கை அரசியல் கலாசாரத்துக்குள்ளேயே நியாயப்பாட்டை வழங்குகின்றார்.

ரணில் கடந்த காலங்களில் தன்னை ஒரு தாராளவாதியாகவே சித்தரித்து வந்திருந்தார். இந்நிலையில் பட்டலந்த தொடர்பிலான ரணிலின் காணொளியும் செய்தியிடலும் தென்னிலங்கையின் தாராளவாதிகள், இடதுசாரிகள், வலதுசாரிகள் யாவும் அடிப்படையில் இலங்கையின் வன்முறை அரசியல் கலாசாரத்தில் ஒரே நேர்கோட்டில் இணையும் போக்கையே உறுதி செய்கின்றது.

இலங்கையின் வன்முறை அரசியல் கலாசாரம், இலங்கையை பௌத்த நாடாக விழிக்கும் தென்னிலங்கை ஆட்சியாளர்களின் கருத்துக்கு முரணானதாகவே அமைகின்றது. அல்-ஜசீராவின் நேர்காணல் ஒளிபரப்பப்பட்ட போது, அது தன்னை தவறாக சித்தரித்துவிட்டதாக கூறி ஊடக சந்திப்பு நடத்தியிருந்த ரணில், “இலங்கையில் பெரும்பாலானவர்கள் பௌத்தர்கள் என்றும் நாம் அறிந்த பிரதான மதத்தலைவர் மல்வத்த பீட மகாநாயக்க தேரர் என்றும் குறிப்பிட்டிருந்தேன். ஏனைய அனைத்து மதத்தலைவர்களும் அதாவது பேராயர் கர்தினால் அல்லது ஏனைய ஆயர்கள் அதற்கு அடுத்த நிலையில் உள்ளவர்கள் என்றும் நான் தெரிவித்தேன்” என குறிப்பிட்டிருந்தார்.

ரணில் மற்றும் இலங்கையின் ஆட்சியாளர்கள் பௌத்தத்தை முன்னிறுத்தி வன்முறையை பிரயோகிப்பது, பௌத்த நெறிறையை இழிவுபடுத்தும் செயலாகவே அமைகின்றது. ஒரு முறை புத்தரிடம் ஒரு சீடர் கேட்டார், “நமது பயிற்சியின் ஒரு பகுதி அன்பு மற்றும் இரக்கத்தை வளர்ப்பதற்கானது என்று சொல்வது உண்மையா?”. புத்தர் பதிலளித்தார், “இல்லை, இதைச் சொல்வது உண்மையாக இருக்காது. நமது முழுப் பயிற்சியும் அன்பு மற்றும் இரக்கத்தை வளர்ப்பதற்கானது என்று சொல்வது உண்மையாக இருக்கும்.”பௌத்த மதம் முழுவதும் தீங்கு விளைவிக்காதது. இரக்கம் மற்றும் அன்பான கருணையை வளர்ப்பதை அடிப்படையாகக் கொண்டது. இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு புத்தர், “முடிந்தவரை நன்மை செய், தீங்கைத் தவிர்க்க, உங்கள் மனதைத் தூய்மைப்படுத்து” என்று போதித்தார்.

எனவே, இலங்கையின் அரசியல் கலாசாரத்தின் வன்முறை இயல்பு தென்னிலங்கையின் உள்ளக மோதலால் வெளிச்சத்தை பெறுகின்றது. இதனை ஊக்குவிப்பதிலும் வெளிச்சத்தை அதிகரிப்பதிலுமே ஈழத்தமிழர்களின் இராஜதந்திர பொறிமுறை தங்கியுள்ளது. சமீபகாலமாக தென்னிலங்கையின் இளையவர்களிடம் புதிய அரசியல் கலாசாரம் உருவாகுவதாக விளம்பரப்படுத்தப்படுகின்றது. குறிப்பாக அரகலய மற்றும் அதன் பின்னரான நிகழ்வுகளையும் தேசிய மக்கள் சக்தியின் வெற்றியையும் புதிய அரசியல் கலாசாரத்தின் பிரதிபலிப்பாகவே பிரசாரம் செய்கின்றனர். பழையன கழிவதும், பழையனவற்றுக்கு பரிகாரம் வழங்குவதனூடாக மாத்திரமே புதியனவற்றை நிலைப்படுத்த முடியும்.

இப்பின்னணியில் குறைந்தபட்சம் மாற்றத்தின் சமிக்ஞையாக உள்ளக வன்முறைக்காவது நீதியை பெற்றுக்கொடுக்கக்கூடிய திறன் புதியவர்களாக காட்டிக்கொள்பவரிடம் உண்டா என்பதை தோலுரிக்க வேண்டிய தேவை ஈழத்தமிழருக்கு காணப்படுகின்றது. பட்டலந்தவின் நகர்வும் முடக்கமும் ஈழத்தமிழர்களின் நீதிப் போராட்டத்தினை வலுச்சேர்க்கும் ஒரு பகுதியாகும். இதனை இறுகப்பற்றி விழிப்புடன் ஈழத்தமிழர்கள் கையாள வேண்டியுள்ளது.

-ஐ.வி.மகாசேனன்-Thinakkural

Share.
Leave A Reply

Exit mobile version