மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,600-ஐ தாண்டியுள்ளது.
இந்த எண்ணிக்கை பத்தாயிரத்தை தாண்டக்கூடிய ஆபத்து உள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மத்திய மியன்மாரில் சமீபத்தில் ரிக்டர் அளவுகோலில் 7.7 என்ற சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது.
அதன் மையப்பகுதி நாட்டின் வடகிழக்கு சகைங் நகரத்திலிருந்து 16 கிலோமீட்டர் வடக்கே பதிவாகியுள்ளது.
முதன்மை நிலநடுக்கத்திற்கு பிறகும் 6 சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் அந்நாட்டை தாக்கியுள்ளன.
ஒரு நூற்றாண்டுக்கு பின்னர் மியன்மாரை தாக்கிய மிக சக்திவாய்ந்த நிலநடுக்கமாக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
ஏற்கனவே இராணுவ ஆட்சியால் நெருக்கடியை எதிர்கொண்டிருக்கும் மியன்மார் மக்கள், இந்த நிலநடுக்கத்தால் மேலும் கடுமையான அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
மியன்மாரின் இரண்டாவது பெரிய நகரமான மண்டலே இந்த நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது, அங்கு பல கட்டிடங்கள் தரைமட்டமாகியுள்ளன.
நிலநடுக்கத்தால் அதிக சேதம் ஏற்பட்டது மண்டலே நகரத்திற்கே ஆகும், அங்கு 1,500-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
நிலநடுக்கத்தின் போது மண்டலேயில் உள்ள ஆரம்ப பாடசாலை ஒன்று இடிந்து விழுந்துள்ள நிலையில், அதில் இருந்த 12 குழந்தைகள் மற்றும் ஆசிரியரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாகவும் மீட்பு பணியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
மியன்மாரின் மண்டலே நகரத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் குவிந்துள்ளதாக BBC ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களால் வைத்தியசாலைகளில் நிரம்பி வழிகின்றன, மேலும் நிலநடுக்க ஆபத்து காரணமாக சிலருக்கு வைத்தியசாலைக்கு வெளியே சிகிச்சை அளிக்கப்படுகிறது.
மீட்பு பணிகளுக்கு உதவுவதற்காக சீன பேரிடர் நிவாரண குழு ஒன்று மியன்மாரை அடைந்துள்ளது.
மேலும் பல நாடுகள் மியன்மாருக்கு உதவ முன்வந்துள்ளன, அவற்றில் இந்தியா, இந்தோனேசியா, மலேசியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் வியட்நாம் ஆகியவை அடங்கும்.