இஸ்ரேலிய படையினர் அம்புலன்ஸ்கள் மீது தாக்குதலை மேற்கொண்டு ஒரு வாரத்தின் பின்னர் 8 மருத்துவபணியாளர்களின் உடல்கள் உட்பட 14 உடல்கள் காசாவின் தென்பகுதியில் மீட்கப்பட்டுள்ளதாக சர்வதேச செம்பிறை குழுவும், செஞ்சிலுவை குழுவும் தெரிவித்துள்ளன.
சர்வதேச செம்பிறை மற்றும் செஞ்சிலுவை குழுக்களை சேர்ந்த மருத்துவபணியாளர்களின் உடல்களே மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அம்புலன்ஸ்கள் மீது இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்டு ஏழு நாட்கள் மௌனத்திற்கு பின்னர் இந்த உடல்கள் மீட்கப்பட்டுள்ளன என தெரிவித்துள்ள செம்பிறை குழுவும், செஞ்சிலுவை குழுவும் கடந்த ஒரு வாரகாலமாக தாக்குதல் இடம்பெற்ற ரபாவிற்கு தாங்கள் செல்வதற்கான அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளன.
ஒரு மருத்துவபணியாளரை காணவில்லை என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
சர்வதேச செஞ்சிலுவை சங்கம் மற்றும் செம்பிறை சங்கங்களின் கூட்டமைப்பு தங்கள் மருத்துவ சகாக்கள் சடலங்களாக மீட்கப்பட்டமை குறித்து கடும் சீற்றம் வெளியிட்டுள்ளதுடன் இது எப்போது முடிவிற்கு வரும் என கேள்வி எழுப்பியுள்ளது.