இஸ்ரேல் ஹமாஸ் இடையிலான போரில் பாலஸ்தீனத்தின் காசா மக்கள் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். இஸ்ரேல் நடத்தி வரும் தொடர் தாக்குதலில் காசாவில் உயிரிழப்பு எண்ணிக்கை 50,000த்தை கடந்துள்ளது.
கடந்த ஜனவரியில் ஏற்பட்ட போர் நிறுத்தம் மார்ச் உடன் முடிவடைந்தது. அதைத்தொடர்ந்து மேலும் 50 நாட்கள் போர் நிறுத்தத்துக்கு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அத்தியாவசாய உதவிகள் காசாவுக்குள் செல்லாமல் இஸ்ரேல் தடுத்து வருகிறது.
இதற்கிடையே கடந்த வாரம் ஹமாஸ் காசாவில் இருந்து வெளியேற வேண்டும் என ஆயிரக்கணக்கான பால்ஸ்தீனியர்கள் வடக்கு காசாவில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 2007 முதல் காசாவை ஹமாஸ் நிர்வகித்து வருகிறது. இந்நிலையில் தற்போது தங்களுக்கு எழுந்துள்ள எதிர்ப்பை ஒடுக்க ஹமாஸ் தீவிரமான அடக்குமுறையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்ட பலருக்கு பொதுவெளியில் வைத்து சாட்டையடி கொடுக்கப்பட்டதாகவும், 6 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் போரட்டம் நடத்தியவரலில் பலர் காணாமல் போயுள்ளதாக கூறப்படுகிறது.
கொல்லப்பட்ட ஆறு பேரில் 22 வயதான இளைஞர் நாசர் ல் ராபியாஸ் என்பவரும் ஒருவர். இவர் காசாவின் டெல் அவிவ் பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தவர். கொல்லப்பட்ட பின்னர் அவரது உடலை அவரின் வீட்டின் வெளியே ஹமாஸ் விட்டுச் சென்றதாக கூறப்படுகிறது.
இங்கிலாந்து இதழான டெலிகிராப் -க்கு ராமல்லாவை சேர்ந்த மூத்த காவல்த்துறை அதிகாரி ஒருவர் அளித்த பேட்டியின்படி, “ஹமாஸ் மக்களை கொடூரமான முறையில் ஒடுக்குகின்றனர். கழுத்தில் கயிறு கட்டப்பட்ட நாய்க்குட்டியைப் போல, அவர்கள் அவரை (கொல்லப்பட்டஇளைஞரை) அவரது வீட்டு வாசலுக்கு இழுத்துச் சென்று, ஹமாஸைப் எதிர்ப்பவர்களுக்கு இதுதான் தண்டனை என்று அவரது குடும்பத்தினரிடம் கூறினர்” என்று தெரிவித்துள்ளார்.
“எதிர்ப்பு தெரிவிக்கத் துணிந்த 22 வயது பாலஸ்தீனியர்” கொல்லப்பட்டதாக இஸ்ரேலின் அதிகாரப்பூர்வ X பக்கத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இஸ்ரேலிய செய்தி நிறுவனம் ஒன்று, அவர் (கொல்லப்பட்டஇளைஞரை) கழுத்தில் கயிறு கட்டி இழுத்துச் செல்லப்பட்டு, மக்கள் முன்னிலையில் தடிகளாலும், உலோகக் கம்பிகளாலும் தாக்கப்பட்டார் என்று பெயர் வெளியிட விரும்பாத காசாவைச் சேர்ந்த ஒருவர் கூறியதாக தெரிவித்துள்ளது.
2019 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளிலும் ஹமாஸை எதிர்த்து காசாவில் கிளர்ச்சிகள் நடந்தன. ஆனால் அவற்றை ஹமாஸ் கடுமையான அடக்குமுறையால் கட்டுப்படுத்தியாக நம்பப்படுகிறது.