பல்லடம் அருகேயுள்ள பருவாய் கிராமத்தில் 22 வயது கல்லுாரி மாணவியைக் கொலை செய்ததாக அவரது உடன் பிறந்த அண்ணன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது, இரு வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு இடையே இருந்த காதலின் காரணமாக நடந்த ஆணவக்கொலை என்று தகவல்கள் பரவியுள்ள நிலையில், இருவருமே மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்று காவல்துறையினர் கூறுகின்றனர்.

அதே நேரத்தில் ஆணவக்கொலைக்கு எதிரான சட்டம் நிறைவேற்றப்பட்டால் இத்தகைய கொலைகள் நிகழ்வது தடுக்கப்படும் என்று தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகேயுள்ள பருவாய் கிராமத்தைச் சேர்ந்த தண்டபாணி–தங்கமணி தம்பதியினரின் மகள் வித்யா (வயது 22). இவர் கோவை அரசு கலைக்கல்லுாரியில் தமிழ் முதுகலை பயின்று வந்துள்ளார்.

கடந்த ஞாயிறன்று அவர் வீட்டில் இருந்தபோது, பீரோ விழுந்து அவர் இறந்து விட்டதாகக் கூறி, அவரின் உடலை அருகிலுள்ள மயானத்தில் புதைத்துள்ளனர்.

ஆனால் அவருடைய மரணத்தில் மர்மம் இருப்பதாக, அவருடைய காதலர் வெண்மணி அளித்த தகவலின்பேரில், பருவாய் கிராம நிர்வாக அலுவலர் பூங்கொடி, காமநாயக்கன்பாளையம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அதன்பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, ஏப்ரல் முதல் தேதியன்று, வித்யாவின் உடல் தோண்டியெடுக்கப்பட்டு, அதே இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, மீண்டும் புதைக்கப்பட்டது.

அவசர அவசரமாக புதைக்கப்பட்ட வித்யாவின் உடல்!

பிரேத பரிசோதனை அறிக்கை வருவதற்கு முன்பே, தன் தங்கையை கொலை செய்ததை ஒப்புக் கொண்டு விட்டதன் அடிப்படையில் வித்யாவின் அண்ணன் சரவணகுமார் (வயது 24) கைது செய்யப்பட்டுள்ளதாக பிபிசி தமிழிடம் தெரிவித்தார் காமநாயக்கன்பாளையம் காவல் ஆய்வாளர் ராஜவேல்.

வித்யாவின் மீதிருந்த பாசத்தால்தான் திடீரென உணர்ச்சிவசப்பட்டு இந்த கொலையைச் செய்து விட்டதாக தங்களிடம் சரவணகுமார் வாக்குமூலம் அளித்துள்ளதாக அவர் மேலும் தகவல் பகிர்ந்தார்.

கொலைச்சம்பவம் குறித்து விளக்கிய காவல் ஆய்வாளர் ராஜவேல், ”வெண்மணி என்ற இளைஞரை வித்யா காதலித்துள்ளார்.

இருவரும் எம்பிசி பிரிவில் வேறுவேறு சாதிகளைச் சேர்ந்தவர்கள். இந்த காதல் பிரச்னையால், வித்யாவும், சரவணகுமாரும் கடந்த சில மாதங்களாக பேசிக்கொள்ளவில்லை. சம்பவம் நடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று காலையில், இவர்களின் பெற்றோர் தண்டபாணி–தங்கமணி இருவரும் சர்ச்சுக்குச் சென்றுள்ளனர்.

பெற்றோர் இருவரும் மட்டும் மதம் மாறியுள்ளனர். பிள்ளைகள் இருவரும் மாறாததால் வீட்டில் இருந்துள்ளனர். தாயும், தந்தையும் சென்ற பின்பு, அண்ணனுக்கும், தங்கைக்கும் இடையில் நீண்ட நேரம் வாக்குவாதம் நடந்துள்ளது.

அப்போது அரிவாளால் வித்யாவின் தலையில் சரவணகுமார் தாக்கியதில் அவர் இறந்துள்ளார். அதன்பின் பீரோவைத் தள்ளிவிட்டு அதில்தான் அவர் இறந்துவிட்டதாக மற்றவர்களிடம் கூறியுள்ளார்.” என்றார்.

வித்யாவின் குடும்பத்தினர்

அன்று காலையிலிருந்து காதலர் வெண்மணி, வித்யாவை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முடியவில்லை.

இதனால் தன்னுடைய நண்பர் ஒருவரை அனுப்பிப் பார்த்தபோது, வித்யா இறந்து, அவரை அடக்கம் செய்யப்போவதாகத் தகவல் கிடைத்ததாக பிபிசி தமிழிடம் தகவல் தெரிவித்தார் வெண்மணியின் வழக்கறிஞர் ஆர்தர் குமார்.

அதன்பின் வெண்மணி அளித்த தகவலின்பேரில்தான், பருவாய் கிராம நிர்வாக அலுவலர், வித்யாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக புகார் அளித்து, உடல் தோண்டியெடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

“வித்யா இறந்ததை அறிந்து கொண்ட அவரின் தோழிகள் வீட்டுக்குச் சென்று வித்யாவை பார்ப்பதற்குள் வித்யாவின் உடல் புதைக்கப்பட்டுவிட்டது. இதனால் ஏற்பட்ட சந்தேகத்தின் காரணமாகவே நான் காவல்துறையில் புகார் அளித்தேன்,” என்று பிபிசி தமிழிடம் தெரிவித்தார் வெண்மணி.

முதலில் சந்தேக மரணம் என்று பதிவு செய்யப்பட்ட வழக்கை, கொலை வழக்காக மாற்றம் செய்து இருப்பதாக காமநாயக்கன்பாளையம் காவல் ஆய்வாளர் ராஜவேல் தெரிவித்தார்.

காதலுக்கு மறுப்பு தெரிவித்த பெண் வீட்டார்

வித்யாவை பெண் கேட்டு, வெண்மணியின் குடும்பத்தார் சென்றதால் ஏற்பட்ட கோபத்தில்தான் கொலை நடந்துள்ளதாகவும் ஊடகங்களில் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

காதலர் வெண்மணியிடம் பேசிய போது சொந்த சாதியில் திருமணம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்ததால் திருமணத்திற்கு மறுத்ததாகக் கூறினர்.

இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய வெண்மணி, ”ஊடகங்களில் தெரிவிப்பதைப் போன்று நான் பெண் கேட்டு செல்லவில்லை.

ஆனால் பிப்ரவரி மாதம் எங்களுடைய காதல் குறித்து வித்யாவின் அண்ணனிடம் போனில் பேசினேன். என்னுடைய அம்மாவும், அவருடைய அம்மாவிடம் பேசினார். ஆனால் அவர்கள், இது சரிப்பட்டு வராது என்று கூறி எங்களின் காதலுக்கு மறுப்பு தெரிவித்துவிட்டனர்.” என்று தெரிவித்தார்.

மேலும் தொடர்ந்த அவர், “ஆரம்ப காலம் தொட்டே வித்யாவின் அண்ணனுக்கு எங்களின் காதல் மீது எதிர்ப்பு இருந்தது. இருவரும் ஒரே (மிகவும் பிற்படுத்தப்பட்ட) வகுப்பைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் கூட, சொந்த சாதியில் திருமணம் செய்து தர வேண்டும் என்ற எண்ணமே அவரிடம் மேலோங்கி இருந்தது.

நாங்கள் காதல் குறித்து வீட்டில் தெரிவித்த பிறகும், படிப்பு முக்கியம் என்று வித்யாவை கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். ” என்றார். வித்யா உயிரிழந்த முந்தைய நாள் அதாவது சனிக்கிழமையன்றும் தான் தொலைபேசியில் பேசியதாக வெண்மணி கூறினார்.
வித்யா, பல்லடம் ஆணவக் கொலை

இருவருமே மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர்!

வித்யா, நாவிதர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். வெண்மணி மண்பானைகள் செய்யும் குலாளர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். இருவருமே மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இது சட்டப்படி தீண்டாமை குற்றமாகாது என்று பிபிசி தமிழிடம் தகவல் பகிர்ந்தனர் காமநாயக்கன்பாளையம் காவல் அதிகாரிகள்.

கோவை அரசு கலைக்கல்லுாரியில் வித்யா தமிழ் இளங்கலை படிக்கும்போது, அதே கல்லுாரியில் வெண்மணி தமிழ் எம்.பில் படித்து வந்துள்ளார். அப்போதே இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, 3 ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளனர். வித்யா தற்போது முதுகலை படித்து வந்துள்ளார்.

இதுபற்றி பிபிசி தமிழிடம் விளக்கிய வெண்மணியின் வழக்கறிஞர் ஆர்தர் குமார், ”வெண்மணி தேசிய அளவிலான ஆசிரியர் தகுதித்தேர்விலும் (NET) தேர்ச்சி பெற்றுவிட்டார். அடுத்து JRF (Junior Research Fellowships) தேர்விலும் தேர்ச்சி பெற்று விட்டதால் தனக்கு உதவித்தொகையே ரூ.45 ஆயிரம் வருமென்று கூறி, தனக்குத் திருமணம் செய்து தருமாறு வித்யாவின் அண்ணன் சரவணகுமாரிடம் வெண்மணி பேசியுள்ளார்.

இருவருமே சமவகுப்பினராக இருந்தும் அதற்கு மறுத்து கொலை செய்துள்ளார் சரவணகுமார்.” என்று குற்றம் சாட்டினார்.

காமநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் சரவணகுமார் கைது செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்த நிலையில், பிபிசி தமிழ் அங்கு நேரில் சென்றது.

வித்யாவின் தாய் தங்கமணி, தந்தை தண்டபாணி, அவர்களின் உறவினர்கள் மற்றும் பருவாய் கிராமத்தைச் சேர்ந்த பலரும் அங்கு இருந்தனர். அவர்களில் யாரும் பேசுவதற்கு முன் வரவில்லை. பேச வந்தவர்களையும் மற்றவர்கள் அனுமதிக்கவில்லை.

பல்லடம் ஆணவக்கொலை

வித்யாவின் தாயார் தங்கமணியிடம் பிபிசி தமிழ் பேசியபோது, ”நான் என் மகளை இழந்து நிற்கிறேன். எதுவும் பேசுவதற்கில்லை.” என்றார்.

சற்று தயக்கத்துடன் பிபிசி தமிழிடம் பேசிய வித்யாவின் தந்தை தண்டபாணி, ”அவர்கள் குடும்பத்திலிருந்து யாரும் எங்களிடம் பெண் கேட்டு வரவில்லை.

நாங்கள் அந்தப் பையனைப் பார்த்ததே இல்லை. ஆனால் எங்கள் மகள் எங்களிடம் இதைப் பற்றிச் சொன்னாள். படித்து முடித்தபின், பதிவுத்திருமணம் செய்து வைப்பதாகக் கூறியிருந்தோம். அதற்குள் இப்படி நிகழ்ந்துவிட்டது. வேறு எதுவும் பேசக்கூடாது என்று போலீசார் கூறியுள்ளனர்.” என்றார்.

பிபிசி தமிழிடம் பேசிய பருவாய் முன்னாள் கிராம ஊராட்சித் தலைவர் ரவிச்சந்திரன், ”எங்களுக்கும் இந்த கொலைக்கும் எந்த தொடர்புமில்லை.

ஆனால் ஊருக்குள் திடீரென ஒரு பெண் அசாதாரணமான முறையில் இறந்தது பற்றி போலீசுக்கு ஏன் தகவல் சொல்லவில்லை என்றே எங்களிடம் விசாரித்தனர். இவர்கள் இருவருமே எம்பிசி வகுப்பைச் சேர்ந்தவர்கள். இதை ஆணவக்கொலை என்று ஊடகங்கள் சொல்வது மிகத்தவறு.” என்றார்.

ஆணவக்கொலைக்கு எதிரான சட்டத்துக்கு வலுக்கும் கோரிக்கை!

இந்த வழக்கில் குற்றவாளியாக சரவணகுமார் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவருடன் வேறு யாரும் சேர்ந்து இந்தக் கொலையைச் செய்தார்களா என்றும் சமூக ஊடகங்களில் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்தக் கொலையில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா என்று பல்லடம் துணை காவல் கண்காணிப்பாளர் சுரேஷிடம் பிபிசி தமிழ் கேட்டபோது, ”இப்போதைக்கு சரவணகுமார் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அவரை கைது செய்துள்ளோம். மேல் விசாரணை நடந்து வருகிறது. அதற்குப் பின்பே எதையும் உறுதியாகச் சொல்ல முடியும்.” என்றார்.

இருவரும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்பதன் அடிப்படையில், இது ஆணவக்கொலை இல்லை என்று பலரும் வாதிட்டு வரும் நிலையில், வெவ்வேறு சமுதாயம் என்பதற்காக நடக்கும் அனைத்துக் கொலைகளுமே ஆணவக்கொலையாகத்தான் கருதப்படவேண்டும் என்று பல்வேறு அமைப்பினரும் வலியுறுத்துகின்றனர்.

இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் கனகராஜ், ”ஆணவக் கொலைகளுக்கு எதிராக சட்டமியற்ற வேண்டும் என்று தொடர்ச்சியாக பல இடங்களில் சமூக செயற்பாட்டாளர்கள் குரல் எழுப்பி வருகின்ற சூழலில், இத்தகைய கொலைகள் வெறும் கொலை வழக்கின் கீழ் பதிவு செய்யப்பட்டு அதற்கான தண்டனை மட்டுமே வழங்கப்படும். இது ஒரு ஆணவக் கொலை என்பதே கருத்தில் கொள்ளப்படாது. அரசு இது போன்ற கொலைகள் நடப்பதை தடுக்க, முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்,” என்றார்.

ஆனால் இதை முற்றிலும் மறுத்து செய்தியாளர்களிடம் பேசிய திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரிஷ் யாதவ், ”தங்கையை கொன்றதை அண்ணனே ஒப்புக் கொண்டு விட்டார் என்பதால் இந்த வழக்கில் வேறு எந்தக் குழப்பங்களும் இல்லை. குற்றவாளியைக் கைது செய்து விட்டோம்.” என்றார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

Share.
Leave A Reply

Exit mobile version