“கோவை கிணத்துக்கடவில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவி கடந்த 5-ந்தேதி பூப்படைந்துள்ளார். முழு ஆண்டு தேர்வு எழுதிய மாணவியை மாதவிலக்கை காரணம் காட்டி, வகுப்பறையை பூட்டி வெளியில் அமர வைத்து தேர்வு எழுத வைத்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மாணவி வெளியில் அமர வைத்து தேர்வெழுத வைக்கப்பட்டுள்ளதால் அவரது தாய் நேரில் சென்று பள்ளி நிர்வாகத்திடம் இது தொடர்பாக கேட்டுள்ளார்.
இதற்கு பள்ளி நிர்வாகம் அலட்சியமாக பதில் அளித்துள்ளது. எங்களது பள்ளியில் இப்படிதான் நடக்கும். முடியாது எனில் வேறு பள்ளியில் சேர்த்து கொள்ளுங்கள் என கூறி உள்ளது.
மாணவி வகுப்பறைக்கு வெளியில் அமர்ந்து தேர்வு எழுதும் வீடியோ வெளியான நிலையில், பள்ளி நிர்வாகத்தின் இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
இதையடுத்து பள்ளியின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவியின் பெற்றோர் புகார் அளித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவம் தொடர்பாக தனியார் பள்ளியில் பொள்ளாச்சி காவல் உதவி கண்காணிப்பாளர் நேரில் விசாரணை செய்தார்.
காவல் உதவி கண்காணிப்பாளர் சிருஷ்டி சிங், பள்ளி முதல்வர் ஆனந்தி, பள்ளி கண்காணிப்பாளர் சிவகாமி இருவரிடம் விசாரணை நடத்தினார்.
இந்த நிலையில், மாணவிக்கு நடந்த கொடுமை தொடர்பாக கல்வித்துறை சார்பில் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.பள்ளியிலும், மாணவியிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக முதன்மை கல்வி அலுவலர் தகவல் தெரிவித்துள்ளார்.
தவறு உறுதியானால் விசாரணையின் முடிவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதி அளித்தார்.”,