இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கான தனது மூன்று நாள் விஐயத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பியிருக்கின்றார்.

அநுர அரசாங்கம் இந்தியப் பிரதமருக்கு சிறப்பான வரவேற்பை வழங்கியதோடு ஒருபடி மேலே சென்று இலங்கையின் அதிஉயர் விருதான ‘ஸ்ரீலங்கா மித்ர விபூஷண’விருதையும் வழங்கி கௌரவித்திருக்கின்றது.

இந்தியா அனுராவிற்கு வழங்கிய வரவேற்பை விட உயர்ந்த வரவேற்பை வழங்க வேண்டும் என்று கருதியமையினாலும், அமெரிக்க வரிவிதிப்பின் நிர்ப்பந்தமும் விருது வழங்கலுக்கு காரணமாக இருந்திருக்கலாம்.

பிரதமர் மோடியும் மகிழ்ச்சியின் உச்சத்திலேயே நாடு திரும்பியிருக்கின்றார். இந்த உச்சத்தில் இந்தியாவிற்கு வழங்க வேண்டிய கடன்களில் 100 மில்லியனை நன்கொடையாக மாற்றியிருக்கின்றார். கடன் மறுசீரமைப்புக்கும் உடன்பட்டிருக்கின்றார்.

அமெரிக்க வரிவிதிப்புக்கு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பை தாஜா பண்ண ஒரு பக்கத்தில் முயற்சிகள் நடந்தாலும் மாற்று வழிகளையும் தேட வேண்டிய கட்டாயம் அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளது. அமெரிக்க தூதுவர் ஜூலி சங்குடனான சந்திப்பும் பெரிய நம்பிக்கையைக் கொடுக்கவில்லை.

இலங்கையே மாற்றங்களைச் செய்ய வேண்டும் என அவர் பந்தை மீள இலங்கை மீது வீசியுள்ளார். மறுபக்கத்தில் ஐரோப்பிய யூனியன் ஜி.எஸ்.பி பிளஸ் சலுகை தொடர்பாக கழுத்தைப் பிடிக்கத் தொடங்கியிருக்கின்றது. நிபந்தனைகளை தளர்த்த முடியாது என ஐரோப்பிய யூனியன் தூதுவர் கார்மென் மொரினோ திட்டவட்டமாக தெரிவித்திருக்கின்றார்.

இந்த நிலையில் இந்தியாவின் காலடியில் விழுவதைதத் தவிர வேறு எந்தத் தெரிவும் அநுர அரசாங்கத்திற்கு இருக்கவில்லை. அநுர அரசாங்கத்தின் இந்த அவஸ்தையை இந்தியப் பிரதமர் மோடியும் நன்கு புரிந்து கொண்டு இலங்கைப் பயணத்தை பயன்படுத்தியிருக்கின்றார்.

இந்தியாவுக்கு சார்பான ஏழு ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஒப்பந்தங்களுக்கு எதிர்ப்புக்கள் வந்துவிடக்கூடாது. என்பதற்காக ஒப்பந்தத்தின் உள்ளடக்கம் இரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. ஒப்பந்தத்தின் தலைப்புகள் வெளிவந்திருக்கின்றனவே தவிர ஒப்பந்தத்தின் உள்ளடக்கம் இதுவரை பகிரங்கப்படுத்தப்படவில்லை.

அமைச்சரவையுடன் கூட கலந்தாலோசிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. வெறுமனவே தகவல் மட்டும் அமைச்சரவைக்கு அறிவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த அரசாங்கத்தில் அமைச்சரவைக்கு சுயாதீனம் இருப்பதாகவும் கூற முடியாது என்றும் ஜே.வி.பி. அரசியல் குழுவின் தீர்மானமே அமைச்சரவையின் தீர்மானமாக உள்ளது என்றும் ஒரு விமர்சனம் உண்டு. இதன்படி பார்த்தால் அமைச்சரவை ஒரு நாம நிர்வாகம் தான். உண்மை நிர்வாகம் ஜே.வி.பி.யின் அரசியல் குழுவேயாகும்.

மின்சார இறக்குமதி – ஏற்றுமதி, டிஜிட்டல் பரிமாற்றம் திருகோணமலையை வலுச்சக்தி மையமாக மேம்படுத்தல், பாதுகாப்பு ஒத்துழைப்பு, சுகாதார மருத்துவ துறையில் புரிந்துணர்வு, மருத்துவ விதிமுறைகள் ஒத்துழைப்பு, கிழக்கு அபிவிருத்தி என்பவை தொடர்பாகவே ஏழு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.

வழக்கம் போலவே ஒப்பந்தங்கள் தொடர்பாக சாதக பாதக கருத்துக்கள் வந்திருக்கின்றன. ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக்கட்சி என்பன வரவேற்றிருக்கின்றன. இவற்றிடம் இந்த ஒப்பந்தங்களை விட இன்னும் மேலே செல்ல வேண்டும் என்ற கருத்தும் உண்டு.

ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னிலைக்கும் பொருளாதார நிபுணர் என்று கருதப்படுபவருமான ஹர்ஷ டி.சில்வா ‘சுவரை உடைத்து பாலங்கள் அமைக்க வேண்டும்’எனக் கூறியதுடன் இந்த ஒப்பந்தங்களுக்கு மேலாக எட்கா உடன்படிக்கை பற்றியும் பேசியிருக்க வேண்டும் எனக் கூறியிருக்கின்றார்.

அமெரிக்காவின் வரி விதிப்பு வந்தவுடனேயே இந்தியாவுடன் உறவை மேம்படுத்துவதே இதற்கு மாற்று வழியாக இருக்கும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆலோசனை கூறியிருக்கின்றார்.

ஜே.வி.பி.யின் முன்னாள் சகாக்களைக் கொண்ட முன்னிலை சோஷலிஸக் கட்சி, அரசாங்கம் இலங்கையை இந்தியாவிடம் காட்டிக் கொடுத்துள்ளது. எனக் குற்றம் சாட்டியிருக்கின்றது. இதுவரை காலமும் தனியார் நிறுவனங்களின் முதலீடுகள், அரசின் முதலீடுகள் பெற்றுக் கொள்ளப்பட்டதே தவிர இந்திய அரச நிறுவனங்களுடன் பங்காண்மைச் செயற்பாட்டிற்கு செல்லவில்லை.

தற்போது தான் முதல் தடவையாக அரச பொது நிறுவனங்களுடன் பங்காண்மைச் செயற்பாட்டிற்கு சென்றுள்ளது. இது இந்திய அரச நிர்வாகமே இலங்கையில் தலையிடுகின்ற சூழலை உருவாக்கியுள்ளது என முன்னிலை சோஷலிஸக் கட்சியினர் குற்றம் சாட்டப் பார்க்கின்றனர்.

இலங்கையின் மின்சாரக்கட்டமைப்பு இந்திய மின்சாரக்கட்டமைப்புடன் இணக்கப்பட்டுள்ளமை இலங்கையின் சுயாதீனத் தன்மையை இல்லாமல் செய்துள்ளது என்றும், மருந்து ஒழுங்குபடுத்தல் ஒப்பந்தம் இந்திய மருந்து ஒழுங்குபடுத்தல் நிறுவனமான ‘பாமாகோடிய’வுடன் இலங்கையின் மருந்து ஒழுங்குபடுத்தல் நிறுவனமான ‘தேசிய மருந்து ஒழுங்குபடுத்தல் அதிகார சபை’யை இணைத்துள்ளமை மருத்துவத்துறையிலும் இலங்கையின் சுயாதீனத் தன்மையை இல்லாமல் செய்துள்ளது என்றும் முன்னிலை சோஷலிஸக் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

ஏற்கனவே இந்தியாவின் மின்சாரக்கட்டமைப்பு பங்களாதேஷ், நேபாளம் என்பவற்றுடன் இணக்கப்பட்டுள்ளமையினால் அந்நாடுகள் பெரும் சிக்கலுக்குள் மாட்டுப்பட்டுள்ளன. இந்நிலை இலங்கைக்கும் வரப் போகின்றது என்றும் அது கூறியிருக்கின்றது.

தவிர டிஜிட்டல் மயமாதல் மூலம் எமது மக்களின் உயிரியல் தரவுகள் இந்திய நிறுவனத்திற்கும் தெரிவரப் போகின்றது என்றும் கூறியிருக்கின்றது. பாதுகாப்பு ஒப்பந்தத்தையும் முன்னிலை சோஷலிஸக்கட்சி வரவேற்கவில்லை.

பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில ,பாதுகாப்பு ஒப்பந்தத்தை கடுமையாகக் கண்டித்தார். அதனை ஒரு ‘புலிவால்’ என வர்ணித்தார். தேசிய பாதுகாப்பு மற்றும் சர்வதேச மேம்பாடு தொடர்பில் சரியான புரிதல் அநுரவுக்கு இருக்கவில்லை என குற்றம் சாட்டினார்.

முன்னைய ஜனாதிபதிகள் இந்தியாவுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் எதற்கும் செல்லவில்லை. அநுர தான் விதிவிலக்காக சென்றிருக்கின்றார். 2,600 வருட வரலாற்றில் இலங்கை எதிர்கொண்ட 21 படையெடுப்புகளில் 17 படையெடுப்புகள் இந்தியாவிலிருந்தே வந்திருக்கின்றன என்றும் கூறியிருக்கின்றார்.

1987 ஆம் ஆண்டு ஜூலை 29ஆம் திகதி கைச்சாத்திடப்பட்ட இலங்கை – இந்தியா ஒப்பந்தமும் ஒரு வகையில் பாதுகாப்பு ஒப்பந்தம் தான் என்பதை உதய கம்மன்பில கணக்கெடுக்கவில்லை. வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் இதனைச் சமாளிக்கும் வகையில், பயிற்சிகள் தொடர்பாகத்தான் பாதுகாப்பு ஒப்பந்தம் உள்ளது, சிலர் இதனை மிகைப் படுத்துகின்றனர் என்று கூறிய போதும் ஒப்பந்தத்தின் உள்ளடக்கம் பற்றி தெளிவாக எதனையும் கூறவில்லை.

உண்மையில் உள்ளடக்கத்தை வெளியிட அநுர அரசாங்கம் அஞ்சுவது போலவே தெரிகின்றது. ‘இந்து’ பத்திரிகை இந்தியாவின் பாதுகாப்புக்கும் பிராந்திய உறுதிப்பாட்டிற்கும் எதிராக இலங்கையின் பிராந்தியம் பயன்படுத்துவதற்கு ஒருபோதும் அனுமதிக்கப்படுவதில்லை என்ற அநூவின் உறுதி மொழியைப் பாராட்டியிருக்கின்றது.

எனினும், இதனை நிரூபிப்பது அநுர அரசாங்கத்தின் கடமை, இது விடயத்தில் 1987 இன் உறுதிமொழி ஐயுறவுகளையே தந்தது என்ற சந்தேகத்தையும் வெளியிட்டிருக்கிறது. ‘மித்திர விபூஷண’ விருது வழங்கப்பட்டிருந்தமையும் ‘இந்து’ பத்திரிகை வரவேற்றிருக்கின்றது.

இந்து பத்திரிகை எழுப்பிய சந்தேகங்களைப் பார்க்கின்ற போது இந்திய சமூகம் இன்னமும் இலங்கை அரசாங்கத்தில் நம்பிக்கை வைக்கவில்லை போலவே தெரிகின்றது. அதிலும் உண்மைகள் உண்டு. நிர்பந்தங்கள் காரணமாக அரசாங்கங்கள் இந்தியாவுடன் இணங்கிப் போகின்றனவே தவிர சிங்கள சமூகம் இந்தியாவுடன் இல்லை. அதனிடம் இந்திய எதிர்ப்பு வேரோடிக் கிடக்கின்றது. இதற்கு ஐதீகம், வரலாற்றுக் காரணிகளும் உண்டு.

இதனால் ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்த ஆட்சிக்கு வருகின்ற அரசாங்கங்கள் தயங்குகின்றன. முன்னர் ஒப்பந்த அழுத்தம் இந்திய தரப்பிலிருந்தே வந்தது அது அச்சுறுத்தி தான் இலங்கையை பணிய வைத்தது. அதற்கு எடுத்துக்காட்டு தான் 1987 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட இலங்கை – இந்திய ஒப்பந்தம்.

இந்திய அரசாங்கம் அத்துமீறி யாழ்ப்பாணத்தில் உணவுப் பொட்டலங்களை போட்டு அபாய சிக்னலைக் காட்டியதால் தான் ஜே.ஆர். ஜெயவர்தன பணிந்து வந்தார். ஒப்பந்தத்திற்கு சென்ற சூழலை ஜே.ஆர்.ஜெயவர்தன ‘இந்தியா வலது கரத்தை ஓங்கிக் கொண்டு வந்தது. நான் வலது கரத்தைப் பற்றிக் கொண்டேன். இடது கரத்தையும் ஓங்குமா? எனப் பயந்தேன். இரண்டு கரங்களையும் பற்றிக் கொண்டேன்’என வர்ணித்திருந்தார்.

இந்தத் தடவை இந்தியாவுக்கு பயமுறுத்த வேண்டிய தேவை எதுவும் ஏற்படவில்லை. பொருளாதார நிரப்பந்தம் காரணமாக இலங்கை தானாகவே இந்தியாவின் காலடியில் விழுந்துள்ளது.

இலங்கை – இந்திய ஒப்பந்தம் இலங்கையின் மனவிருப்பின்றி எழுதப்பட்டதால் அதனை நடைமுறையில் நிறைவேற்ற இலங்கை முன் வரவில்லை. ஒப்பந்தத்தின்படி உருவாக்கப்பட்ட 13ஆவது திருத்தத்திலும் பலவற்றை பிடுங்கி எடுத்தது.

அது போன்ற நிலை புதிய ஒப்பந்தங்களுக்கு வராது என்றே எதிர்பார்க்கப்படுகின்றது ஏனெனில் புதிய ஒப்பந்தங்கள் பங்காண்மை ஒப்பந்தங்கள். இவ்வளவு காலமும் இந்தியாவின் புலனாய்வுப் பிரிவே இலங்கையில் சுற்றித் திரிந்தது. இனிமேல் இந்திய அரச நிறுவனங்களும் சுற்றித் திரியப் போகின்றன.

பெருந்தேசிய வாத நிறுவனங்கள் தற்போது அணுங்கி அணுங்கியே இந்திய எதிர்ப்பைக் காட்ட முற்படுகின்றன.

இலங்கை சீனா பக்கம் சார்ந்து கொண்டு இந்தியாவை சமாளிக்க முற்பட்ட கடந்த காலம் மறைந்து போக, இந்தியா பக்கம் சார்ந்து நின்று கொண்டு சீனாவை சமாளிக்கும் புதிய காலம் வரப்போகின்றது. இது சீனாவுக்கு ஒருவகையில் ஏமாற்றம்தான். சீனாவும் மாற்று வழிகளை தேட முற்படலாம்.

தமிழக மீனவர்கள் தொடர்பான பிரச்சினையில் பந்தை மீனவர்களிடமே இந்தியப் பிரதமர் தட்டிவிட்டிருக்கின்றார். இது அரசாங்கங்கள் பற்றிய பிரச்சினையல்ல, இரு நாட்டு மீனவர்கள் பற்றிய பிரச்சினை எனக் கூறியிருக்கின்றார்.

அவர்களே இதனைப் பேசித் தீர்மானிக்க வேண்டும் என ஆலோசனை கூறியிருக்கின்றார். கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்குமாறும், கைப்பற்ற படகுகளை விடுவிக்குமாறும் வேண்டுகோள் விடுத்திருக்கின்றார்.

இந்திய எல்லையைக் கடந்து தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பது பற்றியோ, வடபுல மீனவர்களின் வலைகள் அறுத்தெறியப்படுவது பற்றியோ எதுவும் கூறப்படவில்லை.

குறைந்தபட்சம் வடபகுதி மீனவர்களின் இழப்புகளுக்கு கவலை கூட தெரிவிக்கவில்லை. இழுவை மடிப் படகுகளை தடை செய்வது பரிசீலிப்போம் என்றும் கூறியிருக்கின்றார். நீண்ட போரினால் நலிவடைந்துள்ள மக்களை மீண்டும் வதைப்பது பற்றி அனுதாபம் எதனையும் தெரிவிக்கவில்லை. இலங்கைத் தமிழ் மீனவர்கள் ஒரே நேரத்தில் தமிழக மீனவர்களின்

அத்துமீறலுக்கும் சிங்கள மீனவர்களின் அத்துமீறலுக்கும் முகம் கொடுக்கின்றனர். இந்த அத்துமீறலினால் மீனவர்கள் பலர் தொழிலைக் கைவிடுகின்ற நிலையும் உருவாகி வருகின்றது.

இந்தியப் பிரதமரின் பார்வையில் கடல் எல்லையை மீறுவது, இலங்கைத் தமிழ் மீனவர்களின் வலைகளை அழிப்பது தவறுகளாகத் தெரியவில்லை என்றே கூற வேண்டும். குறைந்தபட்சம் அரசாங்கங்களும்; மீனவர் அமைப்புகளும் இணைந்து தீர்வு காண்பது என்ற தீர்மானத்திற்கு கூட அவர் வரவில்லை.

வழக்கம் போலவே இலங்கைத் தமிழ் மீனவர்களிடமிருந்து கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. அரசாங்கம் வெட்கித் தலைகுனிய வேண்டும் என அவை சாடியிருக்கின்றன.

இது விடயத்தில் தமிழ்த் தலைவர்களையும் மீனவர் அமைப்புக்கள் விட்டு வைக்கவில்லை. தமிழ்த் தலைவர்கள் சோரம் போயிருக்கின்றனர் எனக் கூறியிருக்கின்றன. தேசிய மக்கள் சக்தியின் தமிழ் முகவர்களுக்குத்தான் இதனால் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. தமிழ்ப் பகுதிகளில் அவர்களின் முக்கிய தளம் மீனவர்கள் தான்.

பாராளுமன்றத் தேர்தலில் ‘இந்திய மீனவர்களின் அத்துமீறலை நிறுத்துவோம் ‘என வாக்குறுதி அளித்தே வாக்குகளை பெற்றிருந்தனர்.

மீனவர் விவகாரம் தமிழ்த் தேசிய அரசியலுக்கும் பெரிய பாதிப்பையே கொடுக்கப் போகின்றது. சமூகரீதியாக தமிழ்ச் சமூகத்தில் வலிமையான சமூகம் மீனவர் சமூகம் தான். விவசாயிகள் சமூகம் பெரியளவுக்கு வலிமையாக இல்லை. ஆயுதப் போராட்டத்தை பாதுகாத்ததிலும் மீனவர் சமூகத்திற்கு பெரிய பங்குண்டு. மீனவர் சமூகம் சிதைந்தால் தமிழ்த் தேசிய அரசியலும் சிதைகின்ற நிலையே உருவாகும்.

ஒரு வகையில் இந்திய அரசாங்கமும் இலங்கை அரசாங்கமும் இணைந்து தமிழ்த் தேசிய அரசியலின் இருப்பை சிதைக்க முற்படுகின்றன என்றே கூற வேண்டும்.

இந்தியப் பிரதமருடனான தமிழ்த் தலைவர்களின் சந்திப்பும் பெரிய நம்பிக்கையை கொடுக்கவில்லை. இந்தியப் பிரதமர் பழைய பல்லவியை தான் பாடியிருக்கின்றார். இலங்கையின் இறைமை, ஆள் புலம் பேணப்படுவதோடு தமிழரின் சமத்துவமும் உரிமையும் பேணப்பட வேண்டும் என்பது தமது கொள்கை என இந்தியா தொடர்ச்சியாகவே கூறி வருகின்றது.

இதில் இலங்கையின் இறைமை, ஆள் புல மேன்மைக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை தமிழர்களின் சமத்துவத்திற்கும் உரிமைக்கும் கொடுக்கின்றார்களா? என்றால் இல்லை என்று தான் கூற வேண்டும்.

அதற்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கின்றார்கள் என்றால் குறைந்தபட்சம் 13 ஆவது திருத்தத்தில் பிடுங்குவதையாவது தடுத்திருக்க வேண்டும். இந்தியா எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக்கொண்டேயிருந்தது. 13ஆவது திருத்தம் பற்றிய பொறுப்பு தமிழ் மக்களுக்கு இல்லை இந்தியாவுக்கு தான் இருக்கின்றது.

தமிழ்த் தலைவர்களும் வழக்கம் போலவே 13 ஆவது திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். மாகாண சபை தேர்தல் நடத்தப்பட வேண்டுமென்று கூறியிருக்கின்றன.

அதேவேளை, சமஷ்டித் தீர்வை பெறுவதற்கு இந்தியா ஒத்துழைக்க வேண்டும் என்றும் கேட்டிருக்கின்றன. சமஷ்டி தீர்வுக் கோரிக்கையை இந்தியப் பிரதமர் பெரிதாக ரசித்ததாக தெரியவில்லை.

கஜேந்திரகுமார் மட்டும் வித்தியாசமான கருத்தை முன் வைத்திருந்தார். 13 ஆவது திருத்தத்தை அரசியல் தீர்வாக ஒருபோதும் ஏற்க முடியாது. அது ஒற்றையாட்சிக்குட்பட்டது. பகிர்வு அதிகாரம் எதனையும் கொண்டிருக்காதது. பகிர்வு அதிகாரம் இல்லை என்பதை இலங்கை நீதிமன்றங்களே ஏற்றுக் கொண்டிருக்கின்றன எனக் கூறியிருக்கின்றார்.

இந்திய தேசியப் பாதுகாப்புக்கு எதிராக ஒருபோதும் நாம் செயல்பட மாட்டோம். தமிழர் தாயகத்தில் இந்திய முதலீடுகளை நாம் வரவேற்போம். ஆனால், இந்திய அபிவிருத்திகள் மாவட்ட சனத்தொகை விகிதாசாரத்தை மாற்றக்கூடாது என்றும் கூறியிருக்கின்றார். இலங்கை – இந்தியா ஒப்பந்தத்தை ஆதரிக்கின்றோம் 13வது திருத்தத்தை எதிர்க்கின்றோம் என்றும் கூறியிருக்கின்றார்.

உண்மையில் இந்தியா நோக்கிய தமிழ் அரசியலின் அணுகுமுறை இவ்வாறு தான் இருக்க வேண்டும்: அதாவது, ‘இந்திய நலன்களுக்கு எதிராக நாம் நிற்க மாட்டோம், அதேவேளை எமது சுயநிர்ணயத்தையும் கைவிடமாட்டோம்’ என்பதாக இருக்க வேண்டும்.

இந்தியாவைக் கையாளுதல் என்பது இதுதான். தமிழ்த் தரப்பு இந்தியாவை எதிரியாக்கவும் கூடாது எடுபிடியாகவும் கூடாது கையாளும் மார்க்கங்களை கண்டாக வேண்டும் மொத்தத்தில் தமிழ் மக்களைப் பொறுத்தவரை இந்திய பிரதமர் பயணத்தின் ஐந்தொகை கணக்கு கொஞ்சம் கம்மிதான் தமிழ்த் தலைமைகள் இதனை புரிந்து கொள்ளுமா?

– சி.அ.யோதிலிங்கம்

 

Share.
Leave A Reply

Exit mobile version