கிழக்கு மாகாண முதலமைச்சராகவும் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டு இராஜாங்க அமைச்சராகவும் விளங்கிய தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) கைது செய்யப்பட்டதையடுத்து தென்னிலங்கை அரசியலில் கோலோச்சிய சில முன்னாள் அரசியல்வாதிகள் பீதியடைந்துள்ளமை வெளிப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க விசாரணைகளுக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ள பிள்ளையானிடம் தொலைபேசி மூலம் தொடர்புகொள்ள எடுத்த முயற்சி தோல்வியடைந்தாலும் அவர் என்ன காரணங்களுக்காக அவரை தொடர்புகொள்ள முயற்சித்தார் என்ற கேள்வி இன்று பலர் மனதில் எழுந்துள்ளது.
பிள்ளையானின் கைதால் பதற்றமடைந்த தரப்பினர் ரணில் விக்ரமசிங்க ஊடாக பிள்ளையானிடம் தொடர்பினை ஏற்படுத்தி ஏதாவதொரு தகவலை அவருக்கு கூற விரும்புகின்றார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இதற்கு அவர்கள் ரணிலை தெரிவு செய்தமைக்கு முக்கிய காரணங்கள் இருக்கின்றன. சட்ட நுணுக்கங்கள் அறிந்த அவர் சிறந்த இராஜதந்திரியும் அரசியல் முதிர்ச்சியும் கொண்டவராவார்.
அதே வேளை கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் பிள்ளையான் ரணிலுக்கே தனது ஆதரவை நல்கியிருந்தார் என்பதும் முக்கிய விடயம். ஆனால், அவரின் பின்னணி மிகவும் தீவிரமானதாகும்.
14 வயதில் சிறுவர் போராளியாக விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்த அவர் ஒரு கட்டத்தில் புலிகள் இயக்கத்திலிருந்து பிரிந்து அதற்கு எதிராக போராடியவர்.
இதன் காரணமாக அப்போதைய ஜனாதிபதி மகிந்தவின் ஆதரவைப் பெற்று ஜனநாயக வழிக்கு திரும்பி அரசியலில் இணைந்து கிழக்க மாகாண முதலமைச்சராக விளங்கி பின்பு பாராளுமன்ற உறுப்பினராகவும் விளங்கியவர்.
எனினும், நல்லாட்சி காலத்தில் அவர் முன்னாள் எம்.பி. ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலைச் சம்பவத்துக்காக கைது செய்யப்பட்டு சுமார் ஐந்து வருடங்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். அப்போது பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கவின் உத்தரவுகளின் படியே அவரின் கைது சம்பவம் இடம்பெற்றது.
அச்சந்தர்ப்பத்தில் பிள்ளையானின் கைது குறித்து மகிந்த தரப்பினர் எவரும் வாய் திறக்கவில்லை. உதய கம்மன்பில போன்ற எவரும் சட்டதரணியாக அவரது பிரச்சினைகள் குறித்து ஆராய முன்னிலையாகவில்லை.
ஆனால், இப்போது திடீரென இவர்களுக்கு எழுந்த அக்கறை என்னவென்பதே பிரதான கேள்வியாக உள்ளது.
ரணிலுக்கு அவரிடம் பேசுவதற்கான சந்தர்ப்பம் மறுக்கப்பட்டதையடுத்தே சட்டத்தரணி என்ற பெயரில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவருமான உதய கம்மன்பில அந்த முயற்சியை கையிலெடுத்தார்.
தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர் ஒருவரை அவரது சட்டத்தரணி சந்திக்கலாம் என்ற சட்ட ஏற்பாடுகளுக்கு ஏற்ப இது சாத்தியமானாலும், நாட்டில் தொழில்சார் சிரேஷ்ட சட்டத்தரணிகள் பலர் காணப்பட்டாலும் இதில் ஏன் உதய கம்மன்பில தலையிட்டார் என்பது அடுத்த கேள்வி.
சில அரசியல் பிரமுகர்கள் கெளரவத்துக்காக சட்டக்கல்லூரியின் மூலம் சட்டத்தரணியாகி பின்பு அரசியலையே பிரதான தொழிலாகக் கொள்கின்றனர்.
ரணில், மகிந்த, லஷ்மண் கிரியல்ல உள்ளிட்ட பல சிரேஷ்ட அரசியல்வாதிகளும் சட்டதரணிகள்தான். ஆனால், நீதிமன்றங்களுக்கு வாதாடச் செல்வதில்லை.
அதேபோன்று உதய கம்மன்பில ஒரு கணினி மென்பொருள் பொறியியல் பட்டதாரியாவார். பின்பே சட்டத்தரணியானார். அவர் நீதிமன்றங்களில் ஏதாவது சிவில் மற்றும் குற்றவியல் வழக்குகளில் முன்னிலையாகி வாதாடியிருக்கின்றாரா என்பது குறித்து அறிந்தவர் எவருமில்லை.
ரணில் மற்றும் உதய கம்மன்பிலவின் இந்த நடவடிக்கைகள், பிள்ளையானின் கைது பலரை பதற்றமடையச் செய்துள்ளது என்பதை அம்பலமாக்கியுள்ளது.
அதேவேளை யாருக்காக இவர்கள் இருவரும் பிள்ளையானை அணுக முயற்சிக்கின்றனர் என்ற சந்தேகங்களையும் தோற்றுவித்துள்ளது. மேலும், உதய கம்மன்பில வெளியிட்டுள்ள தகவல்கள் சிங்கள மக்களையும் எரிச்சலடையச் செய்துள்ளன என்றால் மிகையாகாது.
விடுதலைப் புலிகளை தோற்கடிப்பதற்கும் ஒழிப்பதற்கும் உதவி புரிந்த பிள்ளையானை அவர் தேசிய வீரர் என புகழாரம் சூட்டியிருந்தார்.
அவர் பாதுகாக்கப்பட வேண்டியவர் என்பதை அழுத்திக் கூறிய கம்மன்பில, 2015ஆம் ஆண்டிலிருந்து ஐந்து வருடங்கள் வரை தடுத்து வைக்கப்பட்டிருந்த பிள்ளையான் எவ்வாறு 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புபட்டிருக்க முடியும் என்ற கேள்வியையும் முன்வைத்துள்ளார்.
கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தராக இருந்த பேராசிரியர் ரவீந்திரநாத் 2006ஆம் ஆண்டு காணாமல் போனமை தொடர்பிலேயே பிள்ளையான் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டதாக ஆரம்பத்தில் கூறப்பட்டது.
பிரித்தானிய தொலைக்காட்சி அலைவரிசையான சனல் 4 வெளியிட்ட ஆவணப்படத்தில் தெரிவிக்கப்பட்டிருந்த விடயங்கள் தொடர்பிலும் அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டிருந்தன.
அவர் கைது செய்யப்பட்ட காரணம் வேறு தற்போது கூறப்படும் காரணங்கள் வேறு என்பதே உதய கம்மன்பிலவின் கூற்றாக உள்ளது.
ஆனால், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் சனல் 4 அலைவரிசைக்கு தகவல்களை வழங்கிய ஆசாத் மெளலானா என்று அழைக்கப்படும் முகம்மது மிஹிலார் முகம்மது அன்ஸீர் பிள்ளையானுக்கு மிக நெருக்கமான ஒருவராவார்.
பிள்ளையான் கிழக்கு மாகாண முதலமைச்சராக இருந்தபோது தன்னுடைய இணைப்பாளர்களில் ஒருவராக அவரை வைத்துக்கொண்டார்.
2004ஆம் ஆண்டு புலிகள் இயக்கமானது வடக்கு — கிழக்கு என்ற பிரிவினைக்கு முகங்கொடுத்தபோது, கருணா அம்மானும் பிள்ளையானும் கிழக்கில் தனியே இயங்கினர். அச்சந்தர்ப்பத்தில் கிழக்கில் மையங்கொண்டிருந்த வடக்கு பிரதேச புலி உறுப்பினர்களை அங்கிருந்து அகற்றும் பல பணிகளில் ஆசாத் மெளலானா பிள்ளையானுக்கு உறுதுணை புரிந்தவர்.
அந்த விசுவாசம் காரணமாகவே அவரை தன்னுடன் வைத்துக்கொண்டார் பிள்ளையான். ஆனால், இடையில் தனிப்பட்ட குடும்பத்தகராறு காரணமாக ஆசாத் மெளலானா நாட்டை விட்டு சென்று தஞ்சம் கோரும் நிலைமைக்கு தள்ளப்பட்டார்.
அச்சந்தர்ப்பத்திலேயே அவரை இனங்கண்டு கொண்ட புலம்பெயர் சிவில் சமூகத்தினர், சனல் 4 அலைவரிசை ஊடாக இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான பல தகவல்களை வெளிக்கொணர்ந்தனர்.
ஆட்சி மாற்றம் ஒன்றுக்காக ராஜபக்ஷவினர் இத்தாக்குதல்களை திட்டமிட்டனர் என்ற கதைகள் இலங்கை முழுவதுமின்றி சர்வதேசத்திலும் எதிரொலித்தது.
ஆனால், அதை எவரும் தனிப்பட்ட வாக்குமூலமாக தரவில்லை. அதற்கான வலுவான ஆதாரங்களும் இல்லை.
ஆனால், ஆசாத் மெளலானாவின் வாக்குமூலங்கள் ஒரு சர்வதேச ஊடகம் வாயிலாக வெளிப்பட்டதன் மூலம் அது மேற்குலகின் கவனத்தை ஈர்த்தது.
ஏற்கனவே போர்க்குற்றங்கள் தொடர்பில் பல குற்றச்சாட்டுகளை சுமந்து வந்த ராஜபக்ஷவினருக்கு குறித்த சம்பவம் மேலும் அழுத்தங்களை ஏற்படுத்தியது.
கோட்டாபய ஜனாதிபதியாக இருந்த காலத்திலும் கூட உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் குறித்த நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை.
குறித்த விசாரணை அறிக்கைகளை கோட்டாபய உள்ளிட்ட அவர் சார்ந்தோர் கிடப்பில் போட்டமையும் அவர்கள் மீதான சந்தேகங்களை பல மடங்கு அதிகரித்தது எனலாம்.
கோட்டாபயவுக்கு பின்னர் ராஜபக்ஷ குழுவினரால் ஜனாதிபதியாக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்கவும் இச்சம்பவம் தொடர்பில் எந்த வித அக்கறையும் செலுத்தவில்லை.
எனவே, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய உயர் மட்ட அரசியல்வாதிகள் சிலரே பிள்ளையானை அணுகுவதற்கு முயற்சி செய்திருக்கின்றனர் என்பது வெள்ளிடை மலை. அவர்களால் நேரடியாக பிள்ளையானை அணுக முடியாத காரணத்தினால் ரணில் மூலமாக காய் நகர்த்த திட்டமிட்டிருக்கலாம்.
அது சாத்தியமாகாது போன காரணத்தினாலேயே அவர்களுடைய கொள்கைகளுடன் ஒத்துப்போகும் உதய கம்மன்பிலவை அவர்கள் நாடியுள்ளனர்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழேயே பிள்ளையான் கைது செய்யப்பட்டுள்ளார். அச்சட்டம் இல்லாமலாக்கப்படும் என அரசாங்கம் கூறி வருகிறது.
சில நேரங்களில் பிள்ளையானிடம் மேற்கொள்ளப்படும் விசாரணைகளின் பின்னர் வெளிவரும் தகவல்கள் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிப்பதாக இருக்கும் பட்சத்தில் அரசாங்கம் இந்த கைதையும் பயங்கரவாத தடைச்சட்டத்தையும் நியாயப்படுத்தலாம் என்பது முக்கிய விடயம்.
சி.சி.என்