– இயலாமைக்கும் சாதனைக்கும் உள்ள தூரத்தை நீந்தி கடப்பு
இயலாமைக்கும் சாதனைக்கும் உள்ள தூரத்தை நீந்தி கடந்து சாதனை படைக்க வேண்டும் என்ற இலட்சியத்துடன் ஒரு காலை இழந்த மாற்றுத்திறனாளி நீச்சல் வீராங்கனை இலங்கை தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரையிலான பாக்கு நீரிணையை 11 மணித்தியாலங்கள் 5 நிமிடத்தில் நீந்தி கடந்து சாதனை படைத்துள்ளார்.
பாக்கு நீரிணை கடல் பகுதி தமிழகத்தையும் இலங்கையையும் பிரிக்கும் நீரிணை ஆகும். ராமேஸ்வரம் தீவும், அதை தொடர்ந்துள்ள 13 மணல் தீடைகளும், பாக்கு நீரிணை கடற்பகுதியை மன்னார் வளைகுடாவில் இருந்தும் பிரிக்கிறது. தமிழகத்திலேயே மிகவும் ஆழம் குறைந்த அதே சமயம் பாறைகளும் ஆபத்தான ஜெலி மீன்கள் நிறைந்த கடல் பகுதியாகும் .
இதுவரை 30 இற்கும் மேற்பட்டோர் பாக்கு நீரிணையை தனியாக நீந்தி கடந்து சாதனை புரிந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் இலங்கையின் தலைமன்னாரிலிருந்து இந்தியாவின் தனுஷ் கோடிக்கோ அல்லது தனுஷ்கோடியில் இருந்து தலைமன்னாருக்கு நீந்திச் சென்றவர்கள். இது தவிர மேலும் சிலர் குழுவாக ரிலே மற்றும் மாரத்தான் முறையில் பாக்கு நீரிணை கடலை நீந்தி கடந்துள்ளனர்.
இந்நிலையில் தலைமன்னார் இருந்து தனுஷ்கோடிக்கு நீந்தி கடப்பதற்காக கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட வட மாநிலத்தை சேர்ந்த 10 பேர் கொண்ட நீச்சல் வீரர்கள் குழு இந்திய-இலங்கை இரு நாட்டு அரசிடமும் அனுமதி கோரி விண்ணப்பித்திருந்தார்.
அனுமதி கிடைத்த நிலையில், நேற்று (18) ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஆழ்கடல் படகில் இலங்கை தலைமன்னார் நோக்கி சென்றனர்.
இந்த குழுவில் 8 பேர் ரிலே முறையில் நீந்தினர். இவர்கள் இலங்கை தலைமன்னாரில் இருந்து அதிகாலை 5.50க்கு கடலில் குதித்து நீந்த தொடங்கி மதியம் 2.20 மணி அளவில் தனுஷ்கோடி வந்தடைந்தனர்.இவர்கள் ரிலே முறையில் தலைமன்னார் முதல் தனுஷ்கோடி வரை 8 மணி நேரம் 30 நிமிடத்தில் நீந்தி கடந்தனர்.
மேலும் இருவர் தனியாக (SOLO) நீந்தி கடந்தனர். இவர்கள் இருவரும் மாற்றுத்திறனாளிகள். இதில் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த சஷ்ருதி நக்காது என்ற நீச்சல் வீராங்கனைக்கு வலது காலில் பிறவி குறைபாடு காரணமாக மேல் மூட்டு துண்டிக்கப்பட்டு, செயற்கையாக வடிவமைக்கப்பட்ட காலை கொண்டு நடக்கும் மாற்றுத்திறனாளி.
அதே போல மற்றொருவரான மாற்றுத்திறனாளி பல்கா கணேஷ் தலைமன்னார் முதல் தனுஷ்கோடி அரிச்சல்முனை வரை 10 மணி 30 நிமிடத்தில் நீந்தி கடந்தார்.
மாற்றுத்திறனாளியான பாரா நீச்சல் வீராங்கனை தலைமன்னாரில் இருந்து இன்று (19) அதிகாலை கடலில் குதித்து நீந்த தொடங்கிய போது ஜெல்லி மீன் மற்றும் கடல் நீரோட்டம் காரணமாக தொடர்ந்து நீந்துவதில் கடும் சிரமம் ஏற்பட்டது.
இருப்பினும் கடும் சிரமத்தை எதிர் கொண்டு தனுஷ்கோடி அரிச்சல்முனை கரையை அடைந்து சஷ்ருதி நக்காது சாதனை படைத்துள்ளார்.