நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது கொலை செய்ய திட்டமிட்டு இருந்த 9 பேர் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கம்பஹா – வத்துமுல்ல பகுதியில் வீடொன்றில் தங்கியிருந்து கொலை செய்ய திட்டமிட்டு இருந்த ஆறு சந்தேக நபர்களும், சந்தேகத்தின் பேரில் இரண்டு சந்தேக நபர்களும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்தவர்களுடன் தொடர்பில் இருந்த மற்றுமொரு சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர்

இந்த கைது நடவடிக்கை நேற்று சனிக்கிழமை (19) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் காலி, அனுக்கனே, உடுகம்பால, கம்பஹா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 22, 24, 25 மற்றும் 26 வயதுடையவர்களாவர்.

சந்தேகநபர்களிடமிருந்து 02 T-56 துப்பாக்கிகள் , T-56 துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் 118 தோட்டாக்கள், 03 T-56 மகசீன்கள், 01 வேன், 01 கார் மற்றும் முச்சக்கர வண்டி என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், மற்றுமொரு குற்றச் செயலில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் உடுகம்பலை பகுதியைச் சேர்ந்த 22 மற்றும் 57 வயதுடையவர்களாவர்.

மேலும், மேற்படி இரண்டு சந்தேக நபர்களையும் குற்றக் கும்பலுடன் தொடர்புபடுத்திய மற்றுமொரு சந்தேக நபரை குருநாகல் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் 04 கையடக்கத் தொலைபேசிகளுடன் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஹெட்டிபொல பிரதேசத்தை சேர்ந்த 25 வயதுடையவராவார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளில் இவர்கள் இருவரும் தற்போது வெளிநாட்டில் உள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த ஒருவரின் சகாக்கள் என தெரியவந்துள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version