யாழ்ப்பாணத்தில் 69 வயதான மூதாட்டி ஒருவர் பொல்லினால் தாக்கி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

பருத்தித்துறை பகுதியில் உள்ள வீடொன்றினுள் திருடும் நோக்குடன் சென்ற இளைஞனே மூதாட்டியை தாக்கி படுகொலை செய்துள்ளார் எனும் குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

குறித்த வீட்டில் இரண்டு மூதாட்டிகள் வசித்து வருகின்றனர். அதில் ஒருவர் 20ஆம் திகதி காலை உயிர்த்த ஞாயிறு பிரார்த்தனைக்காக தேவாலயத்திற்கு சென்றுள்ளார். மற்றையவர் வீட்டில் தனிமையில் இருந்துள்ளார்.

அந்நிலையில் இரு மூதாட்டிகளும் தேவாலயத்திற்கு சென்றுள்ளார்கள் என நினைத்து , இளைஞன் வீட்டினுள் களவுக்கு சென்றுள்ளார்.

அவ்வேளை வீட்டில் இருந்த மூதாட்டி இளைஞன் களவில் ஈடுபடுவதனை அவதானித்ததை அடுத்து இளைஞன் பொல்லினால் மூதாட்டியை தலையில் பலமாக தாக்கி விட்டு தப்பி சென்றுள்ளார்.

இரத்த வெள்ளத்தில் வீழ்ந்த மூதாட்டி உயிரிழந்துள்ளார்.

அந்நிலையில், தேவாலயத்திற்கு சென்ற மற்றைய மூதாட்டி வீட்டிற்கு வந்த போது மூதாட்டி இரத்த வெள்ளத்தில் சடலமாக காணப்பட்டதனை அவதானித்து அயலவர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

அதனை அடுத்து அயலவர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்ததுடன், சடலத்தை மீட்டு உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த தடயவியல் பொலிஸார் அயல் வீட்டு இளைஞனை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இளைஞனிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version