140 கோடி கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான போப் பிரான்சிஸ் இன்று (ஏப்ரல் 21) வாடிகனில் உள்ள தனது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 88.

தற்போது ரோமன் கத்தோலிக்க திருச்சபை ஒரு புதிய தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும்.

பல நூறாண்டு காலமாக அமலில் இருக்கும் மிகவும் ரகசியமான தேர்தல் நடைமுறையின் கீழ், கார்டினல்கள் என்று அழைக்கப்படும் மூத்த மதகுருமார்கள், புதிய போப்பை தேர்வு செய்வார்கள்.

போப்பின் பணி என்ன?

போப் கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் ஆவார். ரோமன் கத்தோலிக்கர்கள் அவரை இயேசு கிறிஸ்துவின் நேரடி வாரிசாகக் கருதுகின்றனர்.

கிறிஸ்துவின் ஆரம்பகால சீடர்களான அப்போஸ்தலர்களில் முதன்மையானவராக இருந்த செயிண்ட் பீட்டரின் உயிருள்ள வாரிசாக அவர் கருதப்படுகிறார்.

இது அவருக்கு முழு கத்தோலிக்க திருச்சபையின் மீதும் முழுமையான மற்றும் தடையற்ற அதிகாரத்தை அளிக்கிறது மற்றும் உலகின் சுமார் 1.4 பில்லியன் கத்தோலிக்க கிறிஸ்தவர்களுக்கு அவரை ஒரு முக்கிய அதிகார மையமாக்குகிறது.

பல கத்தோலிக்கர்கள் வழிகாட்டுதலுக்காக பைபிளை அடிக்கடி நாடுகிறார்கள், ஆனால் அவர்கள் திருச்சபையின் நம்பிக்கைகள் மற்றும் நடைமுறைகளை நிர்வகிக்கும் போப்பின் போதனைகளையும் நாடலாம்.

உலகெங்கிலும் உள்ள மொத்த கிறிஸ்தவர்களில் பாதி பேர் ரோமன் கத்தோலிக்கர்கள். புராட்டஸ்டன்ட்டுகள் மற்றும் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்கள் உள்பட பிற பிரிவுகள் போப்பின் அதிகாரத்தை அங்கீகரிக்கவில்லை.

போப் உலகின் மிகச்சிறிய நாடான வாடிகனில் வசிக்கிறார். இந்நாடு இத்தாலிக்கு அருகில் இருக்கின்றது.

போப்புக்கு ஊதியம் எதுவும் இல்லை. ஆனால் அவரது பயணச் செலவுகள் மற்றும் வாழ்க்கைச் செலவுகள் அனைத்தையும் வாடிகன் செய்கின்றது.

 


போப் இறந்த பிறகு என்ன நடக்கும்?

பாரம்பரியமாக போப்பின் இறுதிச் சடங்கு மிகப்பெரிய ஒரு நிகழ்வாக நடக்கும், ஆனால் போப் பிரான்சிஸ் சமீபத்தில் இந்த முழு நடைமுறையையும் எளிமையாக மாற்றும் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்தார்.

இதற்கு முன்பு போப் பதவி வகித்தவர்கள், சைப்ரஸ், ஈயம் மற்றும் ஓக் மரத்தால் செய்யப்பட்ட மூன்று அடுக்கு சவப்பெட்டிகளில் அடக்கம் செய்யப்பட்டனர். ஆனால் போப் பிரான்சிஸ், தன்னை புதைக்க துத்தநாகம் பூசப்பட்ட எளிய மர சவப்பெட்டியைத் தேர்ந்தெடுத்துள்ளார்.

கட்டஃபால்க் என்று அழைக்கப்படும் செயிண்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவில் உள்ள ஒரு உயரமான மேடையில் பொதுமக்கள் பார்வைக்காக போப்பின் உடலை வைக்கும் பாரம்பரியத்தையும் அவர் ரத்து செய்தார்.

அதற்கு பதிலாக, அவரது உடல் சவப்பெட்டியிலேயே வைக்கப்பட்டு மூடி திறக்கப்பட்ட நிலையில் துக்கம் அனுசரிப்பவர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக அழைக்கப்படுவார்கள்.

வாடிகனுக்கு வெளியே அடக்கம் செய்யப்படும் முதல் போப், தற்போது உயிரிழந்துள்ள போப் பிரான்சிஸ் ஆவார். (இது கடந்த நூறு ஆண்டுகளில் நிகழ்ந்ததில்லை).

அவர் ரோம் நகரில் உள்ள நான்கு பெரிய போப் பசிலிக்காக்களில் ஒன்றான செயிண்ட் மேரி மேஜர் பசிலிக்காவில் நல்லடக்கம் செய்யப்படுவார்.

பசிலிக்கா என்பது வாடிகனால் சிறப்பு முக்கியத்துவமும் சலுகைகளும் வழங்கப்பட்ட ஒரு தேவாலயமாகும். முக்கிய பசிலிக்காக்கள் போப்புடன் ஒரு குறிப்பிட்ட தொடர்பைக் கொண்டுள்ளன.

போப்பை தேர்வு செய்வதற்கு முன்பு செயிண்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவில் கார்டினல்கள் பிரார்த்தனை செய்வார்கள்.

யார் போப் ஆக முடியும்? அவரை யார் தேர்ந்தெடுப்பார்கள்?

போப் பதவியில் இருப்பவர் இறந்த பிறகு அல்லது அல்லது அவர் ராஜினாமா செய்த பிறகு (2013 ஆம் ஆண்டு போப் பெனடிக்ட் XVI செய்தது போல) ஒரு புதிய போப் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

அவர் ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் உச்சத் தலைவராகிறார் (the Supreme Pontiff).

ஞானஸ்நானம் பெற்ற கத்தோலிக்க பிரிவை சேர்ந்த எந்த ஒரு ஆண் வேண்டுமானாலும் போப்பாக தேர்வு செய்யப்படலாம்.

இருப்பினும், கத்தோலிக்க திருச்சபையின் கார்டினல் பொறுப்பில் உள்ளவர்களே இந்த பதவியை வகித்துள்ளனர். புதிய போப்பையும் கார்டினல்களே தேர்ந்தெடுக்கின்றனர்.

2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாத தரவுகளின்படி, உலகெங்கிலும் 252 கார்டினல்கள் உள்ளனர். அவர்கள் பொதுவாக பிஷப்புகளாகவும் உள்ளனர். 80 வயதுக்குட்பட்டவர்கள் மட்டுமே புதிய போப்பைத் தேர்ந்தெடுக்க வாக்களிப்பதற்கு தகுதியுடையவர்கள் ஆவார்கள்.

இந்த “கார்டினல் வாக்காளர்களின்” எண்ணிக்கை பொதுவாக 120 ஆக மட்டுமே இருக்கும், ஆனால் தற்போது புதிய போப்பை தேர்ந்தெடுக்கத் தகுதியுடையவர்கள் 138 பேர் உள்ளனர். (2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் போப் பிரான்சிஸ் 21 புதிய கார்டினல்களை நியமித்தார்)

படக்குறிப்பு, புதிய போப்பைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்களிப்பு சிஸ்டைன் தேவாலயத்தில் நடைபெறும்போது எடுக்கப்பட்ட புகைப்படம்

கார்டினல்கள் புதிய போப்பை எவ்வாறு தேர்ந்தெடுக்கிறார்கள்?

ஒரு புதிய போப்பைத் தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கும் போது, ​​அனைத்து கார்டினல்களும் ரோமில் உள்ள வாடிகனுக்கு போப்பை தேர்ந்தெடுக்கும் ஒரு மாநாட்டிற்காக வரவழைக்கப்படுகிறார்கள். இது சுமார் 800 ஆண்டுகளாகப் பின்பற்றப்படும் ஒரு நடைமுறை ஆகும்.

இந்த மாநாட்டின் முதல் நாளில், அவர்கள் செயிண்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவில் ஒரு திருப்பலி (ஒரு கிறிஸ்தவ வழிபாட்டுச் செயல்) நடத்துகிறார்கள். பின்னர் அவர்கள் வாடிகனின் சிஸ்டைன் தேவாலயத்தில் கூடுகிறார்கள். அங்கு, “எக்ஸ்ட்ரா ஓம்னெஸ்” (extra omnes) என்ற கட்டளை பிறப்பிக்கப்படுகிறது. இதன் லத்தீன் பொருள் “அனைவரும் வெளியே” என்பதாகும்.

அதன் பிறகு, புதிய போப் தேர்ந்தெடுக்கப்படும் வரை அனைத்து கார்டினல்களும் வாடிகனுக்கு உள்ளேயே தங்க வைக்கப்படுவார்கள்.

மாநாட்டின் முதல் நாளில் சிஸ்டைன் தேவாலயத்தில் ஆரம்ப வாக்கெடுப்பு நடத்த கார்டினல் வாக்காளர்களுக்கு தலா ஒரு வாக்கு உள்ளது.

இரண்டாவது நாளிலிருந்து, போப் பதவிக்கு ஒருவர் தேர்வு செய்யப்படும் வரை அவர்கள் , ஒவ்வொரு நாள் காலையில் இரண்டு வாக்குகளும், ஒவ்வொரு நாள் பிற்பகலில் இரண்டு வாக்குகளையும் தேவாலயத்தில் பதிவு செய்கின்றனர்.

வாக்கெடுப்பில், ஒவ்வொரு கார்டினல் வாக்காளரும் “Eligio in Summum Pontificem” என்ற சொற்களுக்குக் கீழே, தாம் விரும்பும் வேட்பாளரின் பெயரை வாக்குச் சீட்டுகளில் எழுதுகிறார்கள்.

இது லத்தீன் மொழிச் சொல்லாகும். இதற்கு “நான் போப், உச்சத் தலைவரை தேர்ந்தெடுக்கிறேன்” என்று பொருள். வாக்குச்சீட்டுகளை ரகசியமாக வைத்திருக்க, கார்டினல்கள் தங்கள் வழக்கமான கையெழுத்து பாணியைப் பயன்படுத்த வேண்டாம் என்று கூறப்படுகிறது.

இரண்டாம் நாள் முடிவிலும் தீர்க்கமான முடிவு எட்டப்படவில்லை என்றால், மூன்றாம் நாள் முழுவதும் பிரார்த்தனை மற்றும் தியானத்திற்காக ஒதுக்கப்படும்; அன்று வாக்குப்பதிவு எதுவும் நடைபெறாது. அதன் பிறகு வாக்குப்பதிவு வழக்கம் போல் தொடரும்.

ஒரு வேட்பாளர் போப்பாக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு கார்டினல் வாக்காளர்களின் மூன்றில் இரண்டு பங்கு வாக்குகள் தேவை.

புதிய போப்பை தேர்ந்தெடுக்கும் செயல்முறை பல நாட்கள் ஆகலாம், சில சமயங்களில் வாரங்கள் கூட ஆகலாம்.

இந்த மாநாட்டின் போது, ​​செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் மக்கள் கூட்டம் கூடி, முடிவை எதிர்பார்த்து காத்திருப்பார்கள்

போப்பை தேர்ந்து எடுக்கும் மாநாட்டில் என்ன நடக்கிறது?

இந்த மாநாடு மிகவும் ரகசியமாக நடத்தப்படுகிறது. கார்டினல்கள் வாடிகனை விட்டு வெளியேறக்கூடாது, வானொலியைக் கேட்கவோ, அவர்கள் தொலைக்காட்சி பார்க்கவோ, செய்தித்தாள்களைப் படிக்கவோ அல்லது வெளி உலகில் உள்ள எவரையும் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளவோ ​​கூடாது.

கார்டினல்களின் குடியிருப்புகளுக்குள் பராமரிப்பு ஊழியர்கள், மருத்துவர்கள் மற்றும் அவர்களின் பாவ மன்னிப்பை கேட்கும் பாதிரியார்கள் தவிர வேறு யாரும் அனுமதிக்கப்படுவதில்லை. அவர்கள் அனைவரும் ரகசியமாக இருக்க உறுதிமொழி எடுக்கின்றனர்.

வாக்களிப்புக்கு இடையில், கார்டினல்கள் (வாக்களிப்பவர்கள் மற்றும் 80 வயதுக்கும் மேற்பட்ட வாக்களிக்க முடியாதவர்கள்) வேட்பாளர்களின் ஒப்பீட்டுத் தகுதிகள் குறித்து விவாதிக்கின்றனர்.

போப் பதவிக்கான வேட்பாளர்கள் யாரும் வெளிப்படையாக பிரசாரம் செய்ய அனுமதிக்கப்படுவதில்லை. கார்டினல்கள் பரிசுத்த ஆவியால் (Holy Spirit) வழிநடத்தப்படுகிறார்கள் என்று வாடிகன் கூறுகிறது. ஒரு வேட்பாளருக்காக ஆதரவு திரட்டும் செயல்முறை மிகவும் அரசியல்ரீதியானது என்று கருதப்படுகிறது.

சிஸ்டைன் தேவாலயத்திலிருந்து வெள்ளை நிற புகை வெளியேறுவது புதிய போப் தேர்ந்தெடுக்கப்பட்டதைக் குறிக்கிறது.

இந்த மாநாட்டின்போது, தினமும் இருமுறை, பயன்படுத்தப்பட்ட வாக்குச் சீட்டுகள் எரிக்கப்படுகின்றன. வாடிகனுக்கு வெளியே இருப்பவர்கள் சிஸ்டைன் தேவாலயத்திலிருந்து வெளிவரும் புகையை காணலாம்.

கருப்புப் புகையை உருவாக்க, வாக்குச்சீட்டுகளை எரிக்கும் முன் அதில் பொட்டாசியம் பெர்க்ளோரேட் மற்றும் ஆந்திராசீன் தடவப்படுகிறது.

வெள்ளைப்புகையை உருவாக்க, வாக்குச்சீட்டுகளை எரிக்கும் முன் பொட்டாசியம் க்ளோரேட், லேக்டோஸ் மற்றும் ரோஸின் தடவப்படுகிறது.

கருப்பு புகை என்பது புதிய போப் இன்னும் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பதை குறிக்கிறது; வெள்ளை புகை என்பது புதிய போப் தேர்ந்தெடுக்கப்பட்டதைக் குறிக்கிறது.

 தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, புதிய போப் பாரம்பரியமாக செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் உரையாற்றுவார்

ஒரு போப் தேர்ந்தெடுக்கப்பட்டால் என்ன நடக்கும்?

வாக்கெடுப்பில் வெற்றி பெற்றவுடன், புதிய போப்பிடம் “நீங்கள் போப்பாக தேர்ந்தெடுக்கப்பட்டதை ஏற்றுக்கொள்கிறீர்களா?” என்று கேட்கப்படும். ஆமோதித்த பின்னர் போப்பாக தனக்கு புதிய பெயர் ஒன்றை அவர் தேர்வு செய்வார்.

மேலும் அவருக்குரிய அதிகாரப்பூர்வ ஆடைகள் அணிவிக்கப்படுகின்றன.

கார்டினல்கள் அவருக்கு மரியாதை செலுத்தி, தங்கள் கீழ்ப்படிதலை உறுதி செய்கின்றனர்.

செயிண்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவுக்கு வெளியே கூடியிருக்கும் மக்களுக்காக ஒரு அறிவிப்பு வெளியிடப்படுகிறது. அதில் “habemus papam” என்ற சொற்கள் இடம்பெறும். இது லத்தீன் மொழிச் சொல், இதற்கு “நமக்கு ஒரு போப் இருக்கிறார்” என்று பொருள்.

புதிய போப்பின் பெயர் அறிவிக்கப்படுகிறது, மேலும் அவர் மூத்த கார்டினலால் பொது வெளியில் அறிமுகப்படுத்துகிறார். புதிய போப் சிறு உரையாற்றி மற்றும் பாரம்பரிய ஆசீர்வாதமான “urbi et orbi””-யை வழங்குகிறார். இதன் லத்தீன் பொருள் “நகரத்திற்கும் உலகிற்கும்” என்பதாகும்.

பின்னர், மாநாட்டில் ஒவ்வொரு சுற்று வாக்கெடுப்பின் முடிவுகளும் போப்பிற்குக் காட்டப்படும். பின்னர் அவை சீல் வைக்கப்பட்டு வாடிகன் ஆவணக் காப்பகத்தில் வைக்கப்படுகின்றன, இதனை போப்பின் உத்தரவின் பேரில் மட்டுமே திறக்க முடியும்.

 

Share.
Leave A Reply

Exit mobile version