1983-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், ஜெர்மன் பத்திரிகையான ஸ்டெர்ன் மற்றும் பிரிட்டிஷ் செய்தித்தாளான தி சண்டே டைம்ஸ், இந்த நூற்றாண்டின் மிக முக்கியமான வரலாற்று கண்டுபிடிப்புகளில் ஒன்றை உருவாக்கியதாகக் கூறின.
ஆனால், அந்த பரபரப்பான போலிச் செய்தி, இருபதாம் நூற்றாண்டின் தலையாய ஏமாற்று வேலைகளில் ஒன்றாக நிரூபிக்கப்பட்டது, இந்த ஏமாற்று ஊழல் மிகப் பெரிய பண நட்டத்தை ஏற்படுத்தியதோடு, பலரின் நற்பெயரையும் நாசமாக்கியது.
42 ஆண்டுகளுக்கு முன்பு 1983-ஆம் ஆண்டு ஏப்ரல் 25-ஆம் தேதி பிரபல ஜெர்மன் பத்திரிகை ஸ்டெர்ன், தங்களுக்குக் கிடைத்த தரவுகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் ‘மிகவும் அற்புதமான சரித்திர ஆவணம்’ ஒன்றை வெளியிடப் போவதாக அறிவித்தது.
ஜெர்மன் நாட்டின் சர்வாதிகாரி அடால்ஃப் ஹிட்லரின் தனிப்பட்ட டைரிகள் கிடைத்துள்ளதாகவும், அவை இதற்கு முன் வேறு யாருக்கும் கிடைக்காத அரிய வரலாற்று பொக்கிஷங்கள் என்றும் ஸ்டெர்ன் பத்திரிகை, செய்தி வெளியிட்டது. அதே நாளில் ஹம்பர்க்கில் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றுக்கும் ஸ்டெர்ன் ஏற்பாடு செய்தது.
இந்த அரிய ஆவணம் உலகளாவிய தலைப்புச் செய்திகளில் ஆதிக்கம் செலுத்தும் என்று ஸ்டெர்ன் பத்திரிகை எதிர்பார்த்தது உண்மையானது, ஆனால் அது பத்திரிகை எதிர்பார்த்த விதத்தில் இல்லாமல், எதிர்மறையாக அதாவது மோசடி என்ற விதத்தில் பிரபலமானது.
மூன்று நாட்களுக்கு முன்பு, ஸ்டெர்னின் லண்டன் ஆசிரியர் பீட்டர் விக்மேன் பிபிசி செய்தியிடம் பேசியபோது, தங்கள் கைகளில் ஹிட்லரின் அசல் டைரிகள் இருப்பதாக தாங்கள் “உறுதியாக” நம்பியதாகத் தெரிவித்தார்.
“ஆரம்பத்தில் நாங்கள் மிகவும் சந்தேகப்பட்டோம், ஆனால் அவற்றை சரிபார்க்க ஒரு வரைபடவியலாளரை (graphologist) நாங்கள் வைத்திருந்தோம், காகிதத்தை ஒப்பிட்டுப் பார்க்க ஒரு நிபுணர் எங்களிடம் இருந்தார். பேராசிரியர் ட்ரெவர்-ரோப்பர் போன்ற வரலாற்றாசிரியர்களும் அவை அசலானவை என்று நம்பினார்கள்.”
ஹிட்லர் உச்சத்தில் இருந்த 1932 முதல் 1945 வரையிலான காலகட்டத்தை சேர்ந்த டைரிகள் அவை. “60 டைரிகள் இருந்தன,
அவை பள்ளிகளில் பயன்படுத்தப்படும் நோட்டு-புத்தகங்களைப் போலவே இருந்தன. தடிமனான அட்டைகளைக் கொண்ட அவற்றின் வெளிப்புறத்தில் ஸ்வஸ்திகா முத்திரையும், உட்புறத்தில் கழுகு முத்திரையும் இருந்தன. அவற்றின் உள்ளடக்கத்தில் இருந்த கையெழுத்து சிலந்தி வலை போல் பின்னிப் பிணைத்து எழுதும் ஹிட்லரின் கையெழுத்தாகவே இருந்தது…” என்று விக்மேன் பிபிசியிடம் கூறினார்.
டைரியில் இருந்தது என்ன?
தங்கள் கண்டுபிடிப்பு, நாஜி தலைவரைப் பற்றி முன்னர் அறியப்பட்ட தகவல்களை மாற்றியமைக்கும் திறன் கொண்டது என ஸ்டெர்ன் பத்திரிக்கை நம்பியது.
மேலும், அந்த டைரிகளின் உள்ளடக்கம் ஹிட்லரின் அறியப்படாத தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றியும், அவரது உணர்வுகளையும், உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தும் என பத்திரிக்கை நம்பியது.
ஹிட்லருக்கு இருந்த வாய்வு பிரச்சனை மற்றும் வாய் துர்நாற்றம் தொடர்பான போராட்டங்கள், ஒலிம்பிக் டிக்கெட்டுகளைப் பெற அவரது காதலி ஈவா பிரவுன் கொடுத்த அழுத்தம், ஸ்டாலினை “கிழ நரி” (“the old fox”) என்று விளித்து பிறந்தநாள் வாழ்த்து அனுப்பியது தொடர்பான குறிப்புகள் என அனைத்தும் அந்த டைரியில் விரிவாகக் கூறப்பட்டிருந்தது.
ஆனால், தனது பெயரில் நடத்தப்பட்ட ஹோலோகாஸ்ட் பற்றி நாஜித் தலைவர் அறிந்திருக்கவில்லை என்பது, திகைப்பூட்டுவதாக இருந்ததாக, விக்மேன் பிபிசியிடம் தெரிவித்தார்.
கெர்ட் ஹைட்மேன் என்ற ஸ்டெர்ன் பத்திரிகையாளருக்கு ஹிட்லரின் டைரிகள் கிடைத்ததாகக் கூறப்படுகிறது. நாஜி நினைவுப் பொருட்கள் மீது அதிக ஈர்ப்புக் கொண்டவர் என்ற பெயரும் கெர்ட் ஹைட்மேனுக்கு உண்டு. 1973 ஆம் ஆண்டில், ஹிட்லரின் இரண்டாவது தளபதி கோயரிங்குக்குச் சொந்தமான ஒரு பாழடைந்த படகு பற்றிய செய்திகளை எழுதுவதற்கான வேலை கொடுக்கப்பட்டது.
ஹைட்மேன் அந்தப் படகை வாங்கி அதை புனரமைப்பதற்காக அதிக அளவில் செலவு செய்தார். கோயரிங்கின் மகள் எட்டாவுடன் நெருக்கமான தொடர்புகளையும் ஏற்படுத்திக் கொண்டார்.
எட்டா, முன்னாள் நாஜிக்கள் பலருக்கு கெர்ட் ஹைட்மேனை அறிமுகப்படுத்தினார். இந்த தொடர்புகள் மூலம்தான், ஹிட்லரின் டைரிகள், தனக்குக் கிடைத்ததாக ஹைட்மேன் கூறியது அனைவருக்கும் ஏற்புடையதாக இருந்தது.
டைரிகளை எடுத்துச் சென்ற விமானம் விபத்தில் இருந்து மீட்கப்பட்டதாகவும், அதிலிருந்து எடுக்கப்பட்ட டைரிகள், வைக்கோல் போரில் வைக்கப்பட்டிருந்ததாகவும் ஹைட்மேன் கூறினார்.
டைரிகளை பதுக்கி வைத்திருந்த கிழக்கு ஜெர்மனியை சேர்ந்த ஒருவர் அவற்றை விற்க முன்வந்தார். அரிதான டைரிகளை பாதுகாப்பாக வைத்திருந்தவருக்கும், ஸ்டெர்ன் பத்திரிகைக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தும் இடைத்தரகராக ஹைட்மேன் இருப்பார் என்று முடிவானது.
நாஜி சர்வாதிகாரியின் மனதில் இருந்தது என்ன என்பதை அறிந்துக் கொள்ள உலகமே ஆவலாக இருக்கும் என்பதால், இந்த டைரிகள் முக்கியத்துவம் பெற்றன.
ஆனால் இந்த டைரி விஷயத்தில் மிகவும் தீவிரமாக இருந்த ஸ்டெர்ன் பத்திரிகை, அதன் உண்மைத்தன்மையை கண்டறியவும், அங்கீகரிக்கவும் கையெழுத்து நிபுணர்களை நியமித்தது.
அடால்ஃப் ஹிட்லரின் “அசல்” ஆவணங்களை வழங்கும்போது, சில தேர்ந்தெடுக்கப்பட்ட பக்கங்களை மட்டுமே கொடுப்பதாக தீர்மானித்தது. டைரிகளுக்காக சுமார் 9.3 மில்லியன் டாய்ச்மார்க்குகளை (2.3 மில்லியன் பவுண்ட்) கொடுக்க முன்வந்த ஸ்டெர்ன் பத்திரிகை, மிகப் பெரும் தொகையை செலுத்தி சுவிஸ் பெட்டகத்தில் வைத்து டைரிகளை பாதுகாக்கவும் முடிவு செய்தது.
ஹிட்லரின் டைரிகளை ஆய்வு செய்த முதல் வரலாற்றாசிரியர் பேராசிரியர் ஹக் ட்ரெவர்-ரோப்பர் ஆவார், அவர் கிளாண்டனின் லார்ட் டாக்ரே என்றும் அழைக்கப்படுகிறார்.
1947 ஆம் ஆண்டில், அவர் “தி லாஸ்ட் டேஸ் ஆஃப் ஹிட்லர்” என்ற புத்தகத்தை எழுதினார், இந்த புத்தகம், அவருக்கு பெருமை சேர்த்ததுடன், அவருக்கு சிறந்த கல்வியாளர் என்ற பெயரையும் பெற்றுத் தந்தது.
நாஜி சர்வாதிகாரி அடால்ஃப் ஹிட்லர் தொடர்பான தகவல்கள் அறிந்த நிபுணராகவும் கருதப்பட்ட அவர், தி டைம்ஸ் செய்தித்தாளின் சுயாதீன இயக்குநராகவும் இருந்தார். இந்தப் பத்திரிகை, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அதன் சகோதர பத்திரிகையான தி சண்டே டைம்ஸின் ரூபர்ட் முர்டோக்கால் வாங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஹிட்லரின் போலி டைரிகள்
‘போலி டைரி’
ஹிட்லர் எழுதியதாகக் கூறப்படும் டைரிகள் குறித்து தொடக்கத்தில் லார்ட் டாக்ரேவுக்கு சந்தேகம் எழுந்ததால், அவற்றைப் பார்க்க சுவிட்சர்லாந்துக்கு சென்றார்.
டைரிகள் கிடைத்த கதையைக் கேட்டதும் அவரது எண்ணம் மாறத் தொடங்கியது, டைரிகள் இரண்டாம் உலகப்போருக்கு முந்தையவை என்று கூறப்பட்டன (அவை தவறு என பிறகு தெரியவந்தது). இருந்த போதிலும், டைரியில் இருந்த பெரிய அளவிலான பல்வேறு தகவல்களே வரலாற்றாசிரியரின் மனதை மாற்றியது என்று கூறலாம்.
“டைரிகளின் அசல் உள்ளடக்கத்தின் அளவு, வரலாற்றாசிரியர் ட்ரெவர்-ரோப்பரை மட்டுமல்ல, வரலாற்று நிபுணராக இல்லாத எனக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது” என்று தி டைம்ஸ் ஆசிரியர் சார்லஸ் டக்ளஸ்-ஹோம் ஏப்ரல் 22, 1983 அன்று பிபிசியிடம் கூறினார்.
அந்த ஆவணங்கள் உண்மையானவை என்று லார்ட் டாக்ரே உறுதியாக நம்பினார், தி டைம்ஸுக்கு இது தொடர்பாக ஒரு கடிதம் எழுதிய அவர், அவற்றின் நம்பகத்தன்மையை உறுதிசெய்து,
வரலாற்று நிகழ்வுகளை மறு மதிப்பீடு செய்ய வேண்டியிருக்கலாம் என்றும் தெரிவித்துவிட்டார்.
ஹிட்லர் டைரிகள் பற்றிய தொடர் வெளியிடப்படும் செய்தி பரவியதும், அந்தத் தொடருக்கான உரிமைகளைக் கோரி பலர் போட்டியிட்டனர், ஏலப் போர் ஒன்று உருவானது என்றே சொல்லலாம். ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்த தி சண்டே டைம்ஸ் உரிமையாளர் முர்டோக், சூரிச் பறந்தார்.
தொடர் வெளியீட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தானவுடன், ஹிட்லரின் நாட்குறிப்புகளை வெளியிடுவதை உலகுக்கு அறிவிக்க ஸ்டெர்ன் பத்திரிகை நிர்வாகம் பத்திரிகையாளர் சந்திப்பை உடனடியாக நடத்தத் திட்டமிட்டது.
ஆனால், வரலாற்றில் முக்கியமானதாக கருதப்படும் இந்த ஆவணங்கள் வெளியிடப்படுவதற்கு முன்பே, அவற்றின் உண்மைத்தன்மை குறித்த சந்தேகங்களும் பலரால் எழுப்பப்பட்டன, அதிலும் குறிப்பாக தி சண்டே டைம்ஸ் ஊழியர்களே கேள்வி எழுப்பினார்கள். ஏனென்றால், பல ஆண்டுகளுக்கு முன் பத்திரிகைக்குக் கிடைத்த ஒரு படிப்பினைதான்.
1968 ஆம் ஆண்டில், இத்தாலிய பாசிசத் தலைவர் பெனிட்டோ முசோலினி எழுதியதாகக் கூறப்படும் டைரிகளுக்கு தி சண்டே டைம்ஸ் செய்தித்தாள் முன்பணம் செலுத்தியது.
“ஆனால் அவை மிலனுக்கு வெளியே வெர்செய்லியில் வசித்த இரு பெண்களால் உருவாக்கப்பட்ட போலியான டைரிகள்,” என்று தி சண்டே டைம்ஸின் புலனாய்வுக் குழுவில் பணியாற்றிய பத்திரிகையாளர் பிலிப் நைட்லி 2011 இல் விட்னஸ் ஹிஸ்டரிக்கு தெரிவித்தார்.
மோசடி அம்பலமானது எப்படி?
எது எப்படியிருந்தாலும், ஹிட்லரின் டைரிகள் வெளியிடும் விஷயத்தில் முர்டோக் உறுதியாக இருந்தார். அதன் ஆசிரியர் ஃபிராங்க் கில்ஸின் தயக்கங்களையும் மீறி, ஸ்டெர்னின் பத்திரிகை அறிவிப்புக்கு முந்தைய நாள் ” world exclusive” என்ற தலைப்புடன் தி சண்டே டைம்ஸில் தொடரை அச்சிட துடித்தார்.
டைரிகளின் உண்மைத்தன்மை தொடர்பாக உறுதி செய்துக் கொள்வதற்காக லார்ட் டாக்ரேவை, கில்ஸ் அழைத்தார். டைரிகளின் உண்மைத்தன்மையில் தனக்கு சந்தேகம் இருப்பதாக அவர் தெரிவித்தார். “அறையில் கூடியிருந்த அனைத்து நிர்வாகிகளும் தலையில் கைவைத்து உட்கார்ந்துவிட்டோம், ஏனென்றால் செய்தி வெளியிடுவதற்கான முதன்மை அங்கீகாரத்தை நாங்கள் இழந்தோம்,” “செய்தி முற்றிலும் தவறு என்பது தெளிவாகத் தெரிந்தது” என்று நைட்லி கூறினார்.
பத்திரிகை அச்சடிப்பதை நிறுத்திவிட்டு, அதன் முதல் பக்கத்தை சண்டே டைம்ஸ் மாற்றியிருக்கலாம். ஆனால், கில்ஸ் பத்திரிக்கை உரிமையாளர் முர்டோக்கை அழைத்தபோது, “’டாக்ரே இவ்வளவு காலமாக இந்த விஷயத்தை உறுதியாக சொல்லவில்லை. எனவே, அவர் சொல்வதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் செய்தியை வெளியிடலாம்’ என்று கூறினார்” என்பதை நைட்லி நினைவுகூர்ந்தார்.
அடுத்த நாள் அதன் செய்தியாளர் சந்திப்பில் நிலைமை இன்னும் மோசமாகிவிட்டது. “அந்த டைரிகளில் உள்ள ஒவ்வொரு வார்த்தையையும் ஹிட்லர் எழுதினார் என்று 100% உறுதியாக நம்புவதாக” தலைமை ஆசிரியர் பீட்டர் கோச் அறிவித்த பிறகு, அவை உண்மையானவை என்று உறுதியளித்த வரலாற்றாசிரியரான லார்ட் டாக்ரே, பல கேள்விகளுக்குப் பிறகு தனக்கு டைரியின் உண்மைத்தன்மை தொடர்பாக தனக்கு இரண்டாவது கருத்து இருந்ததாக ஒப்புக்கொண்டார்.
ஸ்டெர்ன் நிர்வாகிகளுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தும் விதமாக பேசிய லார்ட் டாக்ரே, அதற்கான காரணத்தையும் கூறினார். விமான விபத்துக்கும் ஹிட்லரின் டைரிகளுக்கும் இடையே ஒரு தொடர்பை நிறுவ முடியவில்லை என்றும், இந்த விஷயத்தில் தனது முடிவை விரைவில் வழங்குமாறு தனக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
“ஒரு வரலாற்றாசிரியராக நான் சொல்வது என்னவென்றால், எல்லோருக்கும் முந்தி வெளியிடப்பட வேண்டும் என்பதற்காக, வரலாற்று சரிபார்ப்பின் நடைமுறைகள், ஓரளவு தியாகம் செய்ய வேண்டியிருந்தது. அதற்காக நான் வருத்தப்படுகிறேன்,” என்று அவர் கூறினார்.
குழப்பமான அந்த பத்திரிகையாளர் சந்திப்புக்கு அடுத்த நாள், பிபிசி பிரேக்ஃபாஸ்டிடம் பேசிய அமெரிக்க ஆட்டோகிராஃப் வியாபாரி சார்லஸ் ஹாமில்டன், டைரிகளின் பக்கங்களைப் பார்த்தவுடன் “அவற்றில் போலித் தன்மையை உணர முடிந்தது” என்று கூறினார்.
தொடர்ந்து ஹிட்லரின் போலி ஆவணங்களை தான் பார்த்து வருவதால், ஹிட்லரின் இந்த கையெழுத்து உண்மையானது அல்ல என்று தனக்குத் தெரியும் என்று ஹாமில்டன் கூறினார்.
“விரைவில் இது எந்த கேள்வியும் இல்லாமல் இவை போலி என்பது உறுதிபடுத்தப்படும். எந்த நிபுணர் குழுவின் உறுதிபடுத்தலும் இல்லாமல், முழு விவகாரமும் இறந்துவிடும், மேலும் இது மனிதகுல வரலாற்றில் மிகப் பெரிய புரளியாக இருக்கும்,” என்று அவர் கூறினார்.
அவரது கூற்றில் தவறில்லை என்பது இரண்டு வாரங்களுக்குள் நிரூபணமானது. கடுமையான தடயவியல் பகுப்பாய்வுகள், டைரிகளை போலிகள் என்று அம்பலப்படுத்தின. ஹாமில்டன் பிபிசியிடம் சுட்டிக்காட்டியபடி, ஹிட்லரின் கையெழுத்து என்பதை துல்லியமாக நிரூபிக்க முடியவில்லை.
அத்துடன், வேதியியல் சோதனையில் டைரிகளில் இருந்த காகிதம், பசை மற்றும் மை இரண்டாம் உலகப் போர் நடக்கும் வரை தயாரிக்கப்படவில்லை என்பதும் தெரியவந்தது. அந்த ஆவணங்கள் போலி என்பதை நிரூபிக்க, அவற்றில் இருந்த பிழைகள், நவீனகால சொற்றொடர்கள், வரலாற்றுத் தவறுகள் மற்றும் ஹிட்லர் அறிந்திருக்க முடியாத தகவல்களும் அந்த டைரிகளில் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
இதுபோன்ற பல வெளிப்பாடுகளைத் தொடர்ந்து, தி சண்டே டைம்ஸ் ஹிட்லரின் டைரி தொடரை கைவிட்டு மன்னிப்பு கோரியது. தவறான செய்தியை வெளியிட்டதற்காக ஸ்டெர்ன் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டது.
புகழ் குறைந்தது, விற்பனை அதிகரித்தது!
தீவிரமான விசாரணையில், டைரிகளை வழங்கிய கிழக்கு ஜெர்மன் மூலமான கொன்ராட் குஜாவ் போலியானவர் என்றும், அவர் டைரிகளை உருவாக்கினார் என்பதை ஹைட்மேன் வெளிப்படுத்தினார். குஜாவ் ஒரு திறமையான கலைஞர், ஆனால் அவரது போலிகள் மிகவும் நுட்பமானவை அல்ல.
ஹிட்லர் எழுதியதாக கூறப்பட்ட டைரிகளை உருவாக்குவதற்காக குஜாவ், மேக்ஸ் டோமரஸ் எழுதிய, ‘ஹிட்லர்: பேச்சுகள் மற்றும் பிரகடனங்கள் 1932-1945 (Hitler: Speeches and Proclamations 1932-1945) புத்தகத்தின் பெரும்பகுதியைத் திருடியிருந்தார். அந்தப் புத்தகத்தின் முதல் பதிப்பில், காலவரிசை மற்றும் உண்மைத் தவறுகள் இருந்தன. அவற்றை அப்படியே வார்த்தைக்கு வார்த்தை நகலெடுத்திருந்தார்.
அதுமட்டுமல்ல, டைரிகளுக்கு கூடுதல் உணர்வை வழங்குவதற்காக, அவர் ஃப்யூரரின் வாழ்க்கையில் ஒரு சாதாரண பக்கத்தை கற்பனை செய்து, “நான் வேலையிலிருந்து வந்து ஈவாவைப் பார்க்கக் கூட முடியாது”, “தபால் நிலையத்துக்குச் செல்ல வேண்டும், சில தந்திகளை அனுப்ப வேண்டும்” மற்றும் “ஈவா எனக்கு வாய் துர்நாற்றம் வீசுகிறது என்று கூறுகிறார்” போன்ற வார்த்தைகளை பயன்படுத்தினார்.
டைரி அட்டைகளில் பயன்படுத்திய எழுத்துப் பாணியிலும் குஜாவ் தவறு செய்திருந்தார். AH க்கு பதிலாக FH என்ற முதலெழுத்துக்களை டைரியில் பயன்படுத்திவிட்டார், டைரிகளின் மீது தேநீர் ஊற்றி தனது மேசையில் அடித்து அவற்றை பழையதாக்க முயன்றார்.
டைரிகளை நம்பக் காரணம் என்ன?
டைரிகளின் ஆரம்ப அங்கீகாரத்துக்கு உதவியது என்ன தெரியுமா? நாஜி நினைவுப் பொருட்கள் தொடர்பாக மிகவும் மோசடி செய்த குஜாவ் தான். ஸ்டெர்ன் நிபுணர்களுக்கு ஹிட்லரின் கையெழுத்தை ஒப்பிட்டுப் பார்க்க வழங்கிய “அசல்” ஆவணங்களில் பலவற்றை தயாரித்தவர் குஜால் தான். இறுதியில் அவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்ட போது, மோசடியில் தனது பங்கை ஒப்புக்கொண்டார்.
ஹிட்லரின் கையெழுத்து பாணியில் தனது வாக்குமூலத்தை எழுதி தனது குற்றத்தை நிரூபிக்கும் அளவுக்கு அவர் சென்றுவிட்டார். 1985 ஆம் ஆண்டில், ஹிட்லரின் டைரிகள் போலியானது என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. குஜாவ் செய்த மோசடி உறுதி செய்யப்பட்டு, அவருக்கு நான்கரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
விசாரணையில், டைரிகளுக்கு குஜாவ் கோரிய தொகையை ஹைட்மேன் உயர்த்தி தெரிவித்ததாகவும், ஸ்டெர்ன் செலுத்திய தொகைக்கும் குஜாவுக்கு கொடுக்கப்பட்ட தொகைக்கும் இடையிலான வித்தியாசத்தையும் காவல்துறை கண்டறிந்தது. தனது ஆடம்பர வாழ்க்கை முறை, தனது நாஜி படகை பராமரிப்பது மற்றும் சர்வாதிகாரிகளின் நினைவுப் பொருட்களை வாங்குவதற்கு என பல காரணங்களுக்காக அவருக்கு பணத்தேவை அதிகமாக இருந்தது.
அவர் இடி அமீனின் உள்ளாடைகளை வைத்திருப்பதாகக் கூறியதும் நினைவுகூரத்தக்கது. இப்படி, தான் செய்யும் செலவுகளுக்காக அவர் மோசடி செய்திருக்கிறார்.
1985 ஆம் ஆண்டு மோசடி குற்றச்சாட்டில் ஹைட்மேன் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் எட்டு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
ஆனால், காவல்துறை விசாரணையில், தானும் ஏமாற்றப்பட்டதாகவே ஹைட்மேன் கூறினார். இருந்தபோதிலும், டைரிகள் போலியானவை என்று ஹைட்மேனுக்குத் தெரியும் என்று குஜாவ் உறுதியாக கூறிவிட்டார்.
இந்த மோசடியின் விளைவாக, சிறந்த வரலாற்றாசிரியர் என்ற லார்ட் டாக்ரேவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டது. பீட்டர் கோச் மற்றும் ஸ்டெர்னின் மற்றொரு பத்திரிகை ஆசிரியரும் வேலையை இழந்தார்கள் என்றால், கில்ஸ் தி சண்டே டைம்ஸ் ஆசிரியர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
2012 ஆம் ஆண்டு லீவ்சன் விசாரணையில், செய்தியை வெளியிடுவதற்கான தனது முடிவு “நான் செய்த ஒரு பெரிய தவறு, அதற்கு நான் முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்கிறேன். என் வாழ்நாள் முழுவதும் நான் அதன் சுமையுடன் வாழ வேண்டியிருக்கும்” என்று பின்னர் மற்றொரு சந்தர்ப்பத்தில் முர்டோக் கூறினார்.
இவை அனைத்தையும் தாண்டி பொய்யான செய்தியை அச்சிடுவது தொடர்பான அவரது முடிவால் அவரது செய்தித்தாளின் விற்பனை அதிகரித்தது.
டைரிகள் போலியானவை என்பது உறுதியானால், தி சண்டே டைம்ஸ் பத்திரிகை, ஸ்டெர்ன்-க்கு செலுத்திய அனைத்துப் பணத்தையும் திருப்பித் தர வேண்டும் என்ற ஒரு ஷரத்தை முர்டோக் முன்வைத்திருந்தார். இதனால் பெயர் கெட்டுப்போனாலும், ஊடக அதிபருக்கு ஹிட்லரின் டைரி என்ற புரளியிலிருந்து பொருளாதார ரீதியில் லாபம் கிடைத்தது.