உள்ளூராட்சி தேர்தல் தமிழ்த் தேசிய கட்சிகள் பலவற்றுக்கு, வடக்கில், குறிப்பாக யாழ்ப்பாணத்தில் பலத்த மாற்றத்தை அளித்திருக்கிறது.

அதற்கு முக்கிய காரணம், கடந்த வாரம் மேல்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தான்.

வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட சுமார் 72 ரிட் மனுக்களை விசாரித்த மேல்முறையீட்டு நீதிமன்றம், அந்த வேட்பு மனுக்களை ஏற்றுக்கொள்ளுமாறு மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தது.

இதே கோரிக்கையோடு உயர் நீதிமன்றத்திற்கு சென்ற தரப்பினருக்கு, பெரும் ஏமாற்றம் ஏற்பட்டது. ஏனென்றால் உயர் நீதிமன்றம் அந்த மனுக்களை தள்ளுபடி செய்தது.

ஆனால் மேல்முறையீட்டு நீதிமன்றம் அதற்கு மாறான உத்தரவை பிறப்பித்திருந்தது.

இலங்கையின் இரண்டு அதிக உச்ச அதிகாரங்களைக் கொண்ட நீதிமன்றங்கள், வெவ்வேறு விதமான உத்தரவுகளை பிறப்பித்தமை, தேர்தல்கள் ஆணைக்குழுவை பெரிதும் சிக்கலுக்கு உள்ளாக்கியது.

தீர்க்கமான ஒரு முடிவை எடுக்க முடியாத நிலையை ஏற்படுத்தியது.

உள்ளூராட்சி தேர்தல் நடத்துவதற்கு 2023 ஆம் ஆண்டு தேர்தல்கள் ஆணைக்குழு பூர்வாங்கப் பணிகளை தொடங்கியதில் இருந்தே, அது சிக்கல்களுக்கு மேல் சிக்கல்களை எதிர்கொண்டு வந்தது.

இப்போதும் கூட, உள்ளூராட்சி தேர்தலை நடத்துவதில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு தலைவலிகள் தீர்ந்தபாடில்லை.

நீதிமன்ற உத்தரவுகளாலும் செயற்பாடுகளாலும் தபால் மூல வாக்களிப்புத் திகதியில் மாற்றம் செய்ய வேண்டிய நிலையும் ஏற்பட்டது.

உள்ளூராட்சி தேர்தல் கூட மே ஆறாம் திகதி நடக்குமா என்ற கேள்விகளும் இருந்தன.

ஆனால், மேல்முறையீட்டு நீதிமன்றம் சுமார் 60 ரிட் மனுக்களை கடந்த செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்ததை அடுத்து, திட்டமிட்டபடி தேர்தல் நடத்தப்படுவதற்கான சாத்தியம் தென்படுகிறது.

உயர்நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்ட மனுக்களை மேல் முறையீட்டு நீதிமன்றத்திற்கு கொண்டு சென்ற தரப்புகள் அங்கும் ஏமாற்றத்தை சந்தித்திருக்கின்றன.

அவ்வாறு ஏமாற்றத்தை சந்தித்த தரப்புகளில் தமிழ் மக்கள் கூட்டணி , ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் போன்றனவும், வல்வெட்டித்துறை நகரசபையில் முன்னாள் நகரபிதா செல்வேந்திரா தலைமையிலான சுயேட்சைக் குழுவும் முக்கியமானவை.

இந்த தரப்புக்கள், அதிகம் நம்பியிருந்த உள்ளூராட்சி சபைகளில், வேட்புமனுக்களை. இழந்திருக்கின்றன. போட்டியிட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றன.

யாழ்ப்பாணம் மாநகர சபை, வல்வெட்டித்துறை மற்றும் சாவகச்சேரி நகர சபைகள், பருத்தித்துறை, வலிகாமம் தெற்கு உள்ளிட்ட பிரதேச சபைகளில் இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது.

ஏற்கெனவே தமிழ் தேசிய அரசியல் கட்சிகள், ஆளும் தேசிய மக்கள் சக்தியிடம் இருந்து கடுமையான சவால்களை எதிர்கொண்டு வருகின்றன.

ஆளுங்கட்சி அரச அதிகாரத்தை கையில் வைத்துக் கொண்டு கடந்த காலங்களில் எவ்வாறான மலினத்தனமான அரசியல் இலாபங்களை ஈட்ட முயன்று வந்ததோ , அதே வகையில் தற்போதைய ஆளும் கட்சியும் செயற்பட்டு வருகிறது.

பொய்யான வாக்குறுதிகளும், தேர்தல் காலத்தில் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள வீதிகளை திறந்து விடுவதும், வடக்கு தேர்தல் களத்தில் தமிழ் தேசிய கட்சிகளுக்கு சவாலான விடயங்களாக இருக்கின்றன.

கடந்த பொதுத்தேர்தலில் ஆளும் கட்சியை, தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒரு பொருட்டாக கருதியிருக்கவில்லை.

அந்தக் கணிப்புகளைத் தாண்டி, யாரும் எதிர்பாராத வகையில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றிருந்தது.

அதேபோக்கில் போனால், உள்ளூராட்சி தேர்தலில் ஆளும்கட்சி ஆசனங்களை அள்ளிக் கொண்டு போகும் ஆபத்து இருப்பதை தமிழ் தேசியக் கட்சிகள் புரிந்து கொண்டிருக்கின்றன.

தேசிய மக்கள் சக்தியை வடக்கில் தாங்கள் குறைவாக எடை போட்டு விட்டதை அவை புரிந்து கொண்டிருக்கின்றன.

எனவே, இந்த முறை தேசிய மக்கள் சக்திக்கு இடமளிக்கக் கூடாது என்பதில் தமிழ் கட்சிகள் மத்தியில் ஒருமித்த கருத்து இருப்பதை கவனிக்க முடிகிறது.

தேசிய மக்கள் சக்தியை உள்ளே அனுமதித்தால், அது பெரும் அபாயத்தை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்துள்ள தமிழ் கட்சிகள் இம்முறை அதனை கடுமையாக எதிர்க்க தொடங்கி இருக்கின்றன.

கடந்த பொதுத் தேர்தலின் போது, தமிழ் கட்சிகள் தமக்குள் அடிபட்டு கொண்டன, தம்மைத்தாமே விமர்சித்துக் கொண்டன. தமக்குத் தாமே சேறடித்துக் கொண்டன.

அந்தச் சூழலை தேசிய மக்கள் சக்தி பயன்படுத்திக் கொண்டது.

‘எல்லா தமிழ் கட்சிகளும் மோசமானவை, தமிழ் மக்களை ஏமாற்றுபவை, தமிழ் மக்களின் வாக்குகளை பெற்றுக் கொண்டு சொகுசு வாழ்க்கை வாழுகின்றவை’ என்ற ரீதியாக அது பிரசாரத்தை முன்னெடுத்தது.

இப்போதும் கூட அதே வழியில் தான் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

பிமல் ரத்நாயக்க, விஜித்த ஹேரத் போன்றவர்கள் தமிழ் தேசியக் கட்சிகள் தொடர்பாக வெளிப்படுத்தி வருகின்ற கருத்துக்கள் அத்தகையவை தான்.

தமிழ் கட்சிகள், தமிழ் மக்களை ஏமாற்றுவதாகவும் அவற்றை புறக்கணித்து விட்டு தங்களுடன் இணைந்து கொள்ள வேண்டும் என்றும் தேசிய மக்கள் சக்தி கூறி வருகிறது.

தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து கொள்வதால் தமிழ் மக்களுக்கு என்ன இலாபம் கிடைக்கப் போகிறது என்றால் அது பூச்சியமாகத்தான் இருக்கிறது.

ஏனென்றால், அந்தக் கட்சி அளித்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை.

கடந்த இரண்டு தேர்தல்களில் அந்த கட்சியால் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளில் ஒன்று இரண்டைக் கூட நிறைவேற்றி விட்டு மீண்டும் வாக்குக் கேட்க சென்றிருக்கலாம்.

ஆனால், வெறும் கையுடன் மீண்டும் வந்து வாக்கு கேட்கத் தொடங்கி இருக்கிறது அந்த கட்சி.

இந்தச் சந்தர்ப்பத்தை தமிழ் தேசிய கட்சிகள் பயன்படுத்தி இருக்கின்றன.

அவை ஒட்டுமொத்தமாக தங்களுக்குள் விமர்சனம் செய்து கொள்வதை விட, தேசிய மக்கள் சக்தியை எதிர்ப்பதில், அதற்கு எதிராக பிரசாரத்தை ஒன்று குவிப்பதில். அக்கறை செலுத்துகின்றன.

தமிழ் தேசிய கட்சிகள் மத்தியில் ஒருமித்த நிலைப்பாடு அல்லது ஒருமித்த செயற்பாடு இல்லாவிட்டாலும்- ஒத்த மூலோபாயத்தையே எல்லா கட்சிகளும் பயன்படுத்துவதை அவதானிக்க முடிகிறது.

ஆங்காங்கே விதிவிலக்காக சில சந்தர்ப்பங்களில் பிற தமிழ் கட்சிகளை விமர்சிக்கின்ற போக்கு தென்பட்டாலும், தனக்கு மூக்கு போனாலும் எதிரிக்கு சகுன பிழையாக அமைந்து விட வேண்டும் என்ற வகையில், இந்த முறை செயற்பட்டுவது குறைவாகவே காணப்படுகிறது.

இது தேசிய மக்கள் சக்திக்கு ஒரு சவால்.

அதனால் தான், ஒட்டுமொத்த தமிழ் தேசிய கட்சிகளையும் அது குறிவைத்து தாக்குகிறது.

தமிழ் மக்களின் நலன்கள் குறித்துப் பேசுவதற்கு தமிழ்க் கட்சிகளுக்கு அருகதையில்லை என்று பிமல் ரத்நாயக்க கூறியிருக்கிறார்.

தமிழ் கட்சிகளின் கடந்தகால செயல்பாடுகளை விமர்சிக்கும் தேசிய மக்கள் சக்தி, தனது கடந்தகால செயற்பாடுகளை மறந்து விட்டது.

கடந்த காலங்களில் ஜே.வி.பி. தமிழ் மக்களுக்கு எதிராக மிக மோசமான செயற்பாடுகளை முன்னெடுத்தது, தமிழ் மக்களுக்கு எதிராக போராட்டங்களையும் செயற்பாடுகளையும் முன்னெடுத்திருந்தது.

அதனை மறந்து விட்டு தமிழ் கட்சிகளின் மீது கேள்வி கேட்க முனைவது தேசிய மக்கள் சக்தியின் அறிவீனம் தான்.

அதேவேளை, தமிழ் தேசிய கட்சிகள் இந்த முறை தங்களுக்குள் உள்ள பகைமையை தவிர்த்துக் கொள்ள முயன்றிருக்கின்றன.

தமக்கு வாக்களிக்காவிட்டாலும், சிங்கள தேசிய கட்சி எதற்கும் வாக்களிக்காமல்- ஏதாவதொரு தமிழ் கட்சிக்கு வாக்களியுங்கள் என கேட்கின்ற போக்கு பரவலாக தென்படுகிறது.

இது ஒரு மாற்றம் தான். தமிழ் மக்கள் இதனையே எதிர்பார்த்தனர்.

தமிழ் மக்களின் நலனுக்காக, தமிழ் தேசிய கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படுவதற்கான ஒரு வாய்ப்பை இது கொடுத்திருக்கிறது.

கபில் Virakesari

Share.
Leave A Reply

Exit mobile version