இந்தியாவுடன் ஏற்பட்டுள்ள மோதலுக்கான பதற்றத்தைத் தணிக்க சவூதி அரேபியா உள்ளிட்ட முஸ்லிம் நாடுகளுக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் வேண்டுகோளொன்றை விடுத்துள்ளார்.

பஹல்காமில் 26 சுற்றுலாப் பயணிகளை பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்த சம்பவத்தையடுத்து, பாகிஸ்தான் மற்றும் இந்தியாவுக்கிடையில் மோதல் ஏற்படுவதற்கான பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் சவூதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் குவைத் தூதா்களை வெள்ளிக்கிழமை (02) சந்தித்தார்.

அப்போது, ‘மோதல் ஏற்படுவதற்கான பதற்றத்தைத் தவிர்க்க இந்தியாவுக்கு அறிவுறுத்துங்கள்’ என ஷாபாஸ் ஷெரீஃப் கோரிக்கை விடுத்துள்ளதாக பாகிஸ்தான் அரச ஊடகங்களில் வெளியான செய்திகளில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், ‘பஹல்காம் தாக்குதலில் பாகிஸ்தான் மீது இந்தியா சுமத்தும் குற்றச்சாட்டு ஆதாரமற்றது. இந்த சம்பவத்தில் வெளிப்படையான, பக்கச்சார்பற்ற சர்வதேச விசாரணை நடத்துவதே சரியானது. அனைத்து விதமான பயங்கரவாதத்துக்கும் பாகிஸ்தான் கண்டனம் தெரிவிக்கிறது.

கடந்த 15 மாதங்களில் சவூதி அரேபியா உள்ளிட்ட நட்பு நாடுகளின் உதவியோடு பொருளாதாரத்தை சரிவில் இருந்து மீட்டுள்ளோம். தற்போது பொறுப்பற்ற முறையில் செயல்பட்டு பொருளாதார வளா்ச்சியை சீா்குலைக்கும் நடவடிக்கைகளை பாகிஸ்தான் மேற்கொள்ளாது. பாகிஸ்தானுக்கு தொடா்ந்து ஆதரவளிக்கும் சகோதர நாடுகளுக்கு நன்றி’ என கூறியதாக பாகிஸ்தான் அரச ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply

Exit mobile version