இலங்கை அரசியல் களத்தில் சமகாலத்தில் அதிக விவாதத்தை உருவாக்கியதுடன், ஆளும்-எதிர் தரப்புகள் தங்களை சுயமதிப்பீடு செய்து கொள்வதற்கான களமாகவும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் அமைந்திருந்தது.
குறிப்பாக வடக்கு- கிழக்கு தமிழர் தாயகத்தை பொறுத்த வரை பாராளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தி பெற்றுக் கொண்ட ஆசனங்களின் எண்ணிக்கை, தமிழ் தேசியத்தின் வீழ்ச்சியாக மதிப்பிடப்பட்டது.
அதனை சீர்செய்வதற்கான களமாகவே உள்ராட்சி சபைத் தேர்தல் பிரச்சாரம் அமைந்திருந்தது. தமிழ்த் தேசிய முலாம் பூசப்பட்ட கட்சிகள், தமிழ்த்தேசிய ஆர்வலர்கள் மற்றும் கருத்தியலாளர்கள் மத்தியில் பொது எதிரியாக ஜே.வி.பி பரிணாமமாகிய தேசிய மக்கள் சக்தி தோற்கடிக்கப்பட வேண்டும் எனும் பிரச்சாரமே முதன்மையாக காணப்பட்டது. தேர்தல் முடிவுகளிலும் அத்தகைய விளைவினையை அவதானிக்க கூடியதாகவும் உள்ளது.
அவ்வாறே தென்னிலங்கையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கணிசமான
சபைகளில் முன்னிலையை பெற்றுள்ள போதிலும், தனித்து ஆட்சியமைக்கக்கூடிய அறுதிப் பெரும்பான்மையை பெற முடியாத நிலைமைகளே காணப்படுகின்றது. இக்கட்டுரை உள்ளூராட்சி சபைகளது தேர்தல் முடிவுகளின் அரசியல் முக்கியத்துவத்தை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது.
மே-6ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகளில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நாடளாவிய ரீதியிலேயே கணிசமான வீழ்ச்சியை அடைந்துள்ளது.
2024-நவம்பரில் இடம்பெற்ற பொதுத்தேர்தலில் 61.56 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்த தேசிய மக்கள் சக்தி, நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் 43.37 சதவீதமான வாக்குகளையே பெற்றுள்ளார்கள்.
அவ்வாறே பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி 17.66% மற்றும் பொதுஜன பெரமுன 3.14% வாக்குகளை பெற்றிருந்த நிலையில் உள்ளூராட்சி சபை தேர்தலில் ஐக்கிய மக்களசக்தி 21.77% ஆகவும், பொதுஜன பெரமுன 9.20% ஆகவும் உயர்ச்சி அடைந்துள்ளமை கவனிக்கத்தக்க புள்ளிவிபரமாக காணப்படுகின்றது.
மேலும், வடக்கு-கிழக்கிலும் தேசிய மக்கள் சக்தி கணிசமான வீழ்ச்சியை பெற்றுள்ளார்கள். தமிழர் தாயகப் பகுதிகளில் எவ்வித சபைகளையும் கைப்பற்ற முடியவில்லை. குறைந்தபட்சம் முன்னிலையை கூட பெற்றிருக்க முடியவில்லை. வடக்கில் வவுனியா மற்றும் கிழக்கில் திருகோணமலை, அம்பாறை பிரதேச சபைகள் சிலவற்றில் முன்னிலையை உறுதி செய்துள்ளார்களெனில், அங்கே சிங்கள குடியிருப்புக்கள் நிறைந்து உள்ளது.
வடக்கு-கிழக்கில் சில சபைகளில் தேசிய மக்கள் சக்தி ஒரு வட்டார ஆசனத்தையும் மக்கள் நேரடி வாக்குகளால் பெற முடியாத நிலையில் தோற்கடிக்கப்பட்டுள்ளார்கள்.
விகிதாசார போனஸ் ஆசனங்களூடாகவே சில சபைகளில் ஆசனங்களை பெற்றுள்ளார்கள். மறுமுனையில் தென்னிலங்கையிலும் தேசிய மக்கள் சக்தி கணிசமான வீழ்ச்சியையே அவதானிக்கக் கூடியதாக உள்ளது. சில சபைகளில் சுயேட்சைக் குழுக்களும் எதிர்க் கட்சிகளும் ஆதிக்கம் பெற்றுள்ளன.
தேசிய மக்கள் சக்தி முன்னிலை பெற்றுள்ள சபைகளிலும் ஆட்சியமைக்கக்கூடிய அறுதிப் பெரும்பான்மையை பெற முடியவில்லை. ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசிய கட்சி போன்ற எதிர்க்கட்சிகளுடன் கூட்டிணைந்தே ஆட்சியமைக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. இதனை ஆழமாக நோக்குதல் அவசியமாகின்றது.
முதலாவது, தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் தனியாதிக்கம் சவாலுக்குட்படுத்தப்பட்டுள்ளது.
2024-செப்டெம்பர் ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசநாயக்க பெரும்பான்மையை (42.31%) பெற்று நிறைவேற்றுத்துறை அதிகாரத்தை பெற்றிருந்தார். தொடர்ச்சியாக 2024-நவம்பர் பொதுத்தேர்தலில் தேசிய மக்கள் சக்தி 2/3 பெரும்பான்மையை (61.56%) பெற்றிருந்தது.
எனினும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நிறைவேற்றுத்துறை ஜனாதிபதி மற்றும் 2/3 பெரும்பான்மை பாராளுமன்ற அதிகாரத்தைக் கொண்டு, மக்கள் எதிர்பார்த்த மற்றும் அரசாங்கம் பிரச்சாரப்படுத்திய ‘புதிய இலங்கைக்கான’ எத்தகைய முன்முயற்சி நகர்வுகளையும் மேற்கொண்டிருக்கவில்லை.
தேசிய மக்கள் சக்தியினரும் கடந்த ஆட்சியாளர்களின் மரபை தொடர்பவர்களாவே மக்களால் உணரப்பட்டுள்ளார்கள். ஆதலாலேயே முன்னைய தேர்தல்களில் வழங்கப்பட்ட தனியாதிக்கத்தை உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகளில் சவாலுக்குட்படுத்தியுள்ளார்கள்.
பாராளுமன்ற தேர்தல் காலப்பகுதியில் நடைபெற்ற எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலில் அறுதிப் பெரும்பான்மைக்கு 16 ஆசனங்கள் தேவைப்பட்ட நிலையில், 47.64சதவீத வாக்குகளுடன் 15 ஆனங்களை தேசிய மக்கள் சக்தி பெற்றிருந்தது. சுயேட்சைக்குழு ஒன்று இரு ஆசனங்களை பெற்றிருந்தது. எதிர்க்கட்சிகள் கூட்டிணைந்தும் அறுதிப்பெரும்பான்மையை உறுதி செய்ய முடியாத நிலையே காணப்பட்டது.
இந்நிலையில் எல்பிட்டிய பிரதேச சபையில் எதிர்க்கட்சிகளை தவிர்த்து ஆட்சியதிகாரத்தில் தேசிய மக்கள் சக்தி தனியாதிக்கத்தை பேணியது.
எனினும் 2024ஆம் ஆண்டு உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகளில் கணிசமானவையில் தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மையை பெறுகின்ற போதிலும், அறுதிப்பெரும்பான்மையூடாக ஆட்சியதிகாரத்தை பெறுவதற்கு எதிர்க்கட்சிகளின் ஆதரவை பெற வேண்டிய தேவை எழுந்துள்ளது.
எடுத்துக்காட்டாக கொழும்பு மாநகர சபையில் அறுதிப்பெரும்பான்மைக்கு 59 ஆசனங்கள் தேவைப்படுகின்ற நிலையில், தேசிய மக்கள் சக்தி 36.92% வாக்குகளை பெற்று 48 ஆசனங்களையே பெற்றுள்ளது. இங்கு எதிர்க்கட்சிகள் கூட்டுச்சேர்ந்து தேசிய மக்கள் சக்தியின் பெரும்பான்மையை வலுவிழக்கச்செய்யக்கூடிய வாய்ப்புகள் உணரப்படுகின்றது.
இரண்டாவது, தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் தனியாதிக்கம் சவாலுக்குட்படுத்தப்பட்ட நிலையில், அதன் ஜனரஞ்சக அரசியல் ஆயுதமான‘தூய்மையான இலங்கை’ பிரச்சாரம் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளது.
சுத்தமான இலங்கை பிரச்சாரம் என்பது கடந்த கால வரலாற்றை துடைப்பதாகவே பிரச்சாரப்படுத்தினார்கள். குறிப்பாக கடந்த கால ஆட்சியாளர்கள் அனைவரையும் தவறானவர்களாகவும் தம்மை மாத்திரமே தூய்மையானவர்களாகவும் பிரச்சாரப்படுத்தினார்கள்.
இந்தப்பின்னணியில் கடந்த கால ஆட்சியில் இடம்பெற்ற அதிகார துஷ்பிரயோகங்கள் மற்றும் ஊழல்களை முழுமையாக அகற்றுவதனூடாக கடந்த கால அரசியல் கட்சிகளை முழுமையாக நீக்கம் செய்வதே தூய்மையான இலங்கையின் பிரதான உள்ளடக்கமாக அமைந்திருந்தது.
விசேடமாக 2004ஆம் ஆண்டு சந்திரிக்கா தலைமையிலான மகிந்த ராஜபக்ஷ பிரதமராக இருந்த அமைச்சரவையில் ஜே.வி.பியின் பிரதிநிதியாக ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்கவும் அமைச்சராக இருந்தார் என்பதுவும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இவ்வரலாற்று உண்மைகளையும் துடைக்கும் நோக்கிலேயே சுத்தமான இலங்கை பிரச்சாரமும் அமைந்திருந்தது. எனினும் இதன் செயற்பாட்டு விளைவுகளை பாரியளவில் அவதானிக்க முடியவில்லை. வெறுமனவே எதிர்க்கட்சிகளுக்கு எதிரான பிரச்சாரமாகவும் குற்றச்சாட்டுக்களாகவுமே இருந்ததேயன்றி, எந்தவொரு ஊழல்வாதிகளும் கடந்த ஏழு மாதங்களில் தண்டிக்கப்படவுமில்லை.
குற்றச்சாட்டுக்கள் உறுதிப்படுத்தவுமில்லை. இந்நிலையில் உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகள் தேசிய மக்கள் சக்தியின் தனியாதிக்கத்தை சவாலுக்குட்படுத்தி உள்ளூராட்சி சபைகளில் எதிர்க்கட்சிகளுடன் கூட்டணிக்கு செல்ல வேண்டிய தேவையை ஏற்படுத்தியுள்ளது.
இது தேசிய மக்கள் சக்தி ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னரும் மற்றும் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றிய பின்னர் கடந்த ஏழு மாதங்களும் எதிர்க்கட்சிகள் மீது முன்வைத்துவரும் குற்றச்சாட்டுக்களோடு தேசிய மக்கள் சக்தி கூட்டு சேருகின்றதா என்ற கேள்வியை எழுப்புகிறது.
மேலும், அவ்வாறானதொரு கூட்டுக்குள் பயணிப்பார்களாயின் தேசிய மக்கள் சக்தியின் ‘தூய்மையான இலங்கை’ திட்டத்தின் ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகத்துக்கு எதிரான ஜனரஞ்சக பிரச்சாரங்கள் கைவிட வேண்டும். மாறாக தொடர்ச்சியாக எதிர்க்கட்சிகளுடன் தேசிய மக்கள் சக்தி முரண்டு பிடிக்குமாயின், ஆளுந்தரப்பு உள்ளூராட்சி சபை தேர்தலில் பாரிய தோல்வியாக பின்னடைவை எதிர்கொள்ளும்.
மூன்றாவது, வடக்கு-கிழக்கு தமிழர் தாயகப்பகுதியில் பாராளுமன்ற தேர்தலின் வெற்றியை தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தால் தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை.
தமிழ்த்தேசிய பிரச்சாரம் வெற்றி பெற்றுள்ளது.
பாராளுமன்ற தேர்தலில் வடக்கு-கிழக்கில் தமிழர் தாயகப்பகுதியில் மட்டக்களப்பு தவிர்ந்த ஏனைய தேர்தல் மாவட்டங்களில் தேசிய மக்கள் சக்தியின் தாக்கம் அதிகரித்திருந்தது. இதனை தக்கவைப்பதுடன் அதிகரிக்கும் நோக்கும் நிலையிலேயே உள்ளூராட்சி சபை தேர்தலை தேசிய மக்கள் சக்தி வடக்கு-கிழக்கில் கையாண்டிருந்தது. உள்ளூராட்சி சபை தேர்தல் அறிவிக்கப்பட்ட தொடர்ந்து ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சர்கள் என தொடர்ச்சியாக வடக்கு-கிழக்கை நோக்கி படையெடுத்து முகாமிட்டு பிரச்சார நடவடிக்கைகளில் மும்மரமாக செயல்பட்டிருந்தனர்.
எனினும் உள்ளூராட்சி தேர்தல் முடிவுகளில் வடக்கு-கிழக்கு தமிழர் தாயகப்பகுதிகளில்
சபைகளை வெற்றி கொள்ளக்கூடிய வகையிலாக முடிவுகளை பெற முடியவில்லை. யாழ்ப்பாணம் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையில் வட்டார முடிவுகளில் தேசிய மக்கள் சக்தியினரே 9 ஆசனங்களை பெற்று முன்னிலையில் இருந்தனர். எனினும் விகிதாசாரத்தில் 30.34% வாக்குகளுடன் தமிழரசுக்கட்சி வட்டாரம் மற்றும் போனஸ் உட்பட 11 ஆசனங்களுடன் பெரும்பான்மையை பெற்றிருந்தது.
தமிழர் தாயகப்பகுதியில் தேசிய மக்கள் சக்தியின் தாக்கம் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையில் மாத்திரமே அவதானிக்கக்கூடியதாக உள்ளது. ஏனைய தனித்தமிழ் சபைகளில் தமிழ்த்தேசிய முலாம் பூசப்பட்ட கட்சிகளே பெரும்பான்மையை பெற்றுள்ளது. குறிப்பாக கிளிநொச்சி மாவட்டத்தில் 3 சபைகளில் 40 வட்டார ஆசனங்களில் 36 ஆசனங்களை தமிழரசுக்கட்சி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எனினும் விகிதாசார போனஸ் ஆசனங்கடாக தமிழர் தாயகப்பகுதிகளில் அடித்தள நிர்வாக அரசியல் பிரிவான உள்ளூராட்சி சபைகளுக்குள் தேசிய மக்கள் சக்தி காலூன்றுவதற்கான வாய்ப்பை 2024ஆம் ஆண்டு உள்ராட்சி சபைத் தேர்தல் வழங்கியுள்ளது. குறிப்பாக யாழ்ப்பாணம் மாநாகர சபையில் 22.01% வாக்குகளுடன் 04 வட்டார ஆசனம் மற்றும் 6 போனஸ் ஆசனங்கள் உள்ளடங்கலாக மொத்தமாக 10 ஆசனங்களுடன் மூன்றாவது பெரிய கட்சியாக உள்ளது.
அவ்வாறே கிழக்கில் மட்டக்களப்பு மாநகர சபையில் 25.94% வாக்குகளுடன் 03 வட்டார ஆசனம் மற்றும் 06 போனஸ் ஆசனங்கள் உள்ளடங்கலாக மொத்தமாக 09 ஆசனங்களுடன் இரண்டாவது பெரிய கட்சியாக உள்ளது. இம்மாற்றங்கள் பகுதியளவில் கடந்த உள்ளூராட்சி
சபை தேர்தல்களில் ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன போன்ற தென்னிலங்கை கட்சிகள் பரவலாக பெற்றுக்கொண்ட ஆசனங்கள் இம்முறை தேசிய மக்கள் சக்திக்கு மாற்றப்பட்டுள்ளது என்பதே எதார்த்தபூர்வமானதாகும்.
எனினும் தேசிய மக்கள் சக்தி எனும் புதியதொரு தென்னிலங்கை அரசியல் கட்சி தமிழர் தாயகத்தின் அடித்தள அரசியல் நிர்வாக கட்டமைப்பில் உருவாகியுள்ளது என்ற எதார்த்தத்தையும் புரிந்து கொள்ள வேண்டும்.
எனவே, 2025ஆம் ஆண்டு உள்ளூராட்சி சபைத் தேர்தல் நாடி பிடித்து பார்க்கும் களத்தில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் வீழ்ச்சியையே நாடளவிய ரீதியில் உறுதி செய்துள்ளது.
குறிப்பாக கடந்த பொதுத்தேர்தலில் மக்கள் வழங்கிய தனியாதிக்க ஆட்சியை தேசிய மக்கள்
சக்தி அரசாங்கம் சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை என்பதேயே தேர்தல் முடிவுகள் உறுதி செய்கின்றது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஜனரஞ்ச ஆயுதமான இடூஞுச்ண குணூடிடூச்ணடுச் (தூய்மையான இலங்கை) திட்டத்தை உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகள் கேள்விக்குட்படுத்தியுள்ளதுடன், நெருக்கடிக்கும் தள்ளியுள்ளது.
சுத்தமான இலங்கை எனும் பிரச்சார திட்டத்தினூடான இலங்கையின் ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகங்கள் சீர்செய்யப்படவில்லை என்பதையே தேர்தல் முடிவுகள் கேள்விக்குட்படுத்துகின்றது.
அவ்வாறே தேசிய மக்கள் சக்தியின் தனியாதிக்கம் உள்ளூராட்சி
சபை தேர்தல் முடிவுகள் சவாலுக்குட்படுத்தியுள்ளதால் உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைக்க எதிர்க்கட்சிகளை நாட வேண்டி தூண்டப்படுவதனால் சுத்தமான இலங்கை பிரச்சார திட்டம் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. அவ்வாறே வடக்கு-கிழக்கு தமிழர்கள் தேசிய மக்கள் சக்திக்கு பின்னால் திரட்டப்பட்டுள்ளார்கள் என சர்வதேச அரங்குகளில் அரசாங்கம் கட்டமைத்து வந்த பிரம்மையை தமிழ் வாக்காளர்கள் உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகளில் உடைத்துள்ளார்கள்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஜனாதிபதி மற்றும் அமைச்சர்கள் வடக்கு-கிழக்கில் மூர்க்கத்தனமாக மேற்கொண்ட பிரச்சாரங்களின் விளைவாக, 2025ஆம் ஆண்டு உள்ளூராட்சி சபைத்தேர்தல் முடிவுகளின் வரைபடம் இலங்கை இரு தேசம் என்ற செய்தியை சொல்வதாகவே அமைந்துள்ளது.
மேலும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தென்னிலங்கையில் கொழும்பு மாநகர சபை மற்றும் தமிழர் தாயகப்பகுதில் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மாநாகர சபைகளை கைப்பற்றுவதில் முனைப்பாக செயற்பட்டிருந்தார்கள்.
அரச இயந்திரத்தையும் பயன்படுத்தியதாக பொதுவில் குற்றச்சாட்டுக்களும் காணப்படுகின்றது. எனினும் யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு மாநகர சபைகளில் பெரும்பான்மையைக் கூட பெறமுடியாத நிலையும், கொழும்பு மாநாகர சபையில் அறுதிப்பெரும்பான்மையை உறுதி செய்ய முடியாத நிலையும் தேசிய மக்கள் சக்தியின் சரிவையே அடையாளப்படுத்துகின்றது.
ஐ.வி.மகாசேனன்-தினக்குரல்