காலனித்துவவாதிகளின் கைகளில் இருந்து விடுதலை பெற்ற நாடுகளின் கதை, பெரும்பாலும் ஒரே மாதிரியாக இருக்கிறது. ஆதிக்கத்தின் பிடியிலிருந்து விடுபட்டு வந்த நாடுகளுக்கு, காலனித்துவவாதிகள் சுதந்திரம் என்ற பரிசுடன் சேர்த்து பிரச்சினைகளையும் பொதியாகக் கட்டி கொடுத்து விட்டுத்தான் சென்றிருக்கிறார்கள்.

இந்திய சுதந்திரமும் அதற்குப் பின்னா் ஏற்பட்ட பாகிஸ்தான் பிரிவினை குழப்பங்களும் இதற்கு சிறந்த எடுத்துக் காட்டாகும்.

இந்திய-பாகிஸ்தான் பிரிவினையின் போது, பிரித்தானியா வெறுமனே எல்லைக் கோடுகளை வரைந்து விட்டுச் செல்லவில்லை. பிரித்தானியா இனமுறுகல்களுக்கான விதைகளை தூவி விட்டு, பிளவுகளுக்கான அத்திவாரத்தை உறுதியாக அமைத்து விட்டுத்தான் இந்திய துணைகண்டத்தை விட்டு வெளியேறியது.

காலனித்துவவாதிகளால் வழங்கப்பட்ட சுதந்திரத்திற்குப் பிறகு, பல நாடுகள் தங்கள் அடையாளத்திற்காகவும், இறையாண்மைக்காகவும் தொடர்ந்து போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டன.

காலனித்துவவாதிகளின் கைகளிலிருந்து கிடைக்கப் பெற்ற சுதந்திரத்திற்குப் பின்னா், உலகின் பல நாடுகள் தங்கள் உண்மையான அடையாளத்திற்காகவும், முழுமையான இறையாண்மைக்காகவும் தொடர்ந்து போராடி வந்திருக்கின்றன.

இத்தகைய விடுதலைப் போராட்டத்திற்கு சிறந்த உதாரணமாக, 1971ஆம் ஆண்டில் கிழக்கு பாகிஸ்தான் என்ற பெயரிலிருந்து விடுதலை பெற்ற, பங்களாதேஷ் என்ற சுதந்திர நாட்டை குறிப்பிடலாம்.

பலுசிஸ்தான் போராட்டம்

கடந்த ஏழு தசாப்தங்களுக்கும் அதிகமாக பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் இருக்கும் பலுசிஸ்தான் தனது விடுதலைக்காக தொடர்ந்து போராடி வருகிறது. பாகிஸ்தான் – கைபா் பக்துங்க்வா, சிந்த், பஞ்சாப், பலுசிஸ்தான் என்ற நான்கு மாகாணங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் நான்கு மாவட்டங்களில், தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள கனிம வளங்கள் நிறைந்துள்ள மிகப்பெரிய மாநிலமாக பலுசிஸ்தான் கருதப்படுகிறது. குவெட்டா பலூச்சிஸ்தானின் தலைநகராகும்.

பலுசிஸ்தான் விடுதலை இராணுவம் (Baloch Liberation Army) என்ற அமைப்பு பல்லாண்டுகளாகத் தனி நாடு கோரி பாகிஸ்தானுக்கு எதிராக போராட்டம் நடாத்தி வருகின்றது.

பலூச் மக்கள் மீது மனித உரிமை மீறல்களை பாகிஸ்தான் தொடர்ந்து நடாத்தி வருவதாக மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டி வருகின்றன்.

ஆயிரக்கணக்கான பலூச் மக்கள் காணாமல் ஆக்கப்பட்டும், சித்திரவதைக்கு உள்ளாக்கட்டும், கொல்லப்பட்டும் உள்ளதாக மனித உரிமை அமைப்புகள் வெளியிட்டுள்ள புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

பல தசாப்தங்களாக நிகழ்ந்து வரும் பாகிஸ்தானின் ஒடுக்குமுறைக்கு எதிராக பலூச் மக்கள் தொடர்ந்து போராடி வந்த நிலையில், கடந்த வாரம் சுதந்திரத்திற்கான தமது குரலை உலகிற்கு உரத்து ஒலிக்க செய்துள்ளனர்.

பலுசிஸ்தான் போராளிகள் தனது நாட்டை சுதந்திர நாடாக பிரகடனம் செய்துள்ளனா்.

1947ஆம் ஆண்டு, இந்திய துணைக்கண்டத்திலிருந்து பிரித்தானியர் வெளியேறிய வேளையில், பலூச் மக்கள் வாழ்ந்த கலாட் எனும் சுதேச அரசுக்கும் சுதந்திரம் அறிவிக்கப்பட்டது.

ஆனால், அந்த சுதந்திரக் கனவு நீண்ட நாள் நீடிக்கவில்லை. வெறும் ஒரு ஆண்டிற்குள், 1948இல், பாகிஸ்தான் இராணுவ பலத்தைப் பயன்படுத்தி, பலூசிஸ்தானை வலுக்கட்டாயமாக தன்னோடு இணைத்துக் கொண்டது.

அந்நாள் முதல் இன்று வரை, பலூச் தேசியவாதிகள் இந்த அநீதியான இணைப்பை எதிர்த்து குரல் கொடுத்து வருகின்றனர்.

பாகிஸ்தான் புள்ளிவிவர பணியகத்தால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட 2023 ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி பலூசிஸ்தானின் மக்கள் தொகை சுமார் 14.89 மில்லியன்களாகும். இதில் பெரும்பான்மையினர் முஸ்லிம்களாவா்.

எரிவாயு, கனிமங்கள் உள்ளிட்ட இயற்கை வளங்கள் நிறைந்த நிலமாக பலூசிஸ்தான் திகழ்கிறது. பாகிஸ்தானின் நிலப்பரப்பில் மிகப்பெரிய பகுதியாக இருந்தும், வளர்ச்சியில் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே இப்பகுதி உள்ளது. இதற்குக் காரணம்,

பாகிஸ்தான் அரசு இப்பகுதியின் வளங்களைச் சுரண்டி, அதன் பலன்களை உள்ளூர் மக்களுக்கு வழங்காமல் இருப்பதுதான் என்று பலூச் மக்கள் வேதனையுடன் குற்றம் சாட்டுகின்றனர்.

சமீபத்தில், மிர் யார் பலோச் எனும் பலூச் தேசியவாத தலைவரின் துணிச்சலான அறிவிப்பு, உலக அரங்கில் கவனத்தை ஈர்த்துள்ளது. “பலூசிஸ்தான் என்பது பாகிஸ்தான் அல்ல” என்ற அவரது உறுதியான குரல், பல தசாப்தங்களாக அடக்கப்பட்டிருந்த அந்த மண்ணின் மைந்தர்களின் விடுதலை வேட்கையை உலகிற்கு உரக்க அறிவித்தது.

“பலூசிஸ்தான் ஜனநாயகக் குடியரசை” ஒரு இறையாண்மை கொண்ட நாடாக அங்கீகரிக்குமாறு சர்வதேச சமூகத்தையும் ஐக்கிய நாடுகள் சபையையும் அவர் வலியுறுத்தி உள்ளார்.

இந்த சுதந்திர அறிவிப்புக்குப் பின்னால் உள்ள காரணங்களாக பலூச் மக்கள் மீதான பாகிஸ்தானின் இராணுவ ஒடுக்குமுறை, வலுக் கட்டாயமாக காணாமலாக்கப்படல், சிதிரவதைகள் போன்ற பல மனித உரிமை மீறல்கள் என்பன குறிப்பிடப்படுகின்றன.

சமூக ஊடகங்களில் #RepublicOfBalochistan என்ற ஹேஷ்டெக் உலகளவில் பரவியுள்ளது. பலூசிஸ்தானின் தேசியக் கொடி மற்றும் சுதந்திர பலூச் அரசின் வரைபடங்கள் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன.

மிர் யார் பலோச், இந்திய அரசாங்கத்தை புதுதில்லியில் பலூச் தூதரகத்தை நிறுவ அனுமதிக்குமாறும், ஐக்கிய நாடுகள் சபையை பலூசிஸ்தானுக்கு அமைதி காக்கும் படைகளை அனுப்புமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

“உலகம் இனி அமைதியாகப் பார்வையாளராக இருக்க முடியாது,” என்ற அவரது வார்த்தைகள், பலூச் மக்களின் நீதிக்கான தாகத்தை வெளிப்படுத்துகின்றன.

பஹல்கம் தாக்குதல்

இந்தியா-பாகிஸ்தான் இடையேயான அண்மைய பதற்றங்களின் பின்னணியில், மிர் யார் பலோச்சின் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

ஏப்ரல் 22 பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக, இந்தியா மே 7 அன்று ஒபரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத் தொடங்கியதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தானால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்த இந்தியாவின் நடவடிக்கைக்கு மிர் யார் பலோச் தனது ஆதரவைத் தெரிவித்திருந்தார்.

“நீங்கள் எங்களை அழித்தாலும், நாங்கள் புத்துயிர் பெற்று வருவோம், வாருங்கள் எங்களுடன் சேருங்கள்” என்ற அவரது செய்தி, பலூச் சமூகங்கள் மற்றும் இணையத்தில் உள்ள ஆதரவாளர்களிடம் வலுவாக எதிரொலித்துள்ளது.

பலூசிஸ்தானின் விடுதலைக்கான போராட்டம் வெறும் அரசியல் கோரிக்கை மட்டுமல்ல; அது அந்த மக்களின் அடையாளத்திற்கான, கண்ணியத்திற்கான, சுயமரியாதைக்கான போராட்டமாகும். அவர்களின் மண்ணின் வளங்கள் சுரண்டப்படாமல், அவர்களின் உரிமைகள் மதிக்கப்படும் ஒரு சமூகத்தை கட்டமைக்க வேண்டும் என்பதே அவர்களின் எதிர்பார்ப்பாகும்.

இந்த விடுதலைக்கான தீராத வேட்கையில், பலூச் மக்கள் சர்வதேச சமூகத்தின் ஆதரவை நம்பிக்கையுடன் இப்போது நாடியுள்ளனர்.

“பலூசிஸ்தான் குடியரசு” என்ற அவர்களின் நீண்ட நாள் கனவு நனவாகுமா? சா்வதேசம் இந்த பிரச்சினையை எவ்வாறு அணுகப் போகிறது? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

சூரியா

Share.
Leave A Reply

Exit mobile version