குர்திஸ் விடுதலை இயக்கமான குர்திஸ்தான் தொழிலாளர்; கட்சி, ஆயுதப் போராட்டத்தைக் கைவிடுவதாக அறிவித்துள்ளது.

அத்துடன், தங்கள் படைக் கட்டமைப்பைக் கலைத்து விடுவதாகவும் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு 40 வருட கால ஆயுதப் பேராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது. ஆனால், ஆயுத மோதல்கள் இத்துடன் நிறைவுக்கு வருமா என்ற கேள்வி எழுகின்றது.

ஐரோப்பா, ஆசியா என இரு கண்டங்களிலும் இடம்பிடித்துள்ள நாடு துருக்கி. 85 மில்லியன் மக்கள் வாழும் துருக்கியில் 20 சதவீத மக்கள் குர்திஸ் இனத்தவர்களாக உள்ளனர்.

துருக்கியின் தென் கிழக்குப் பகுதியில் பெரும்பான்மையாக வாழும் இந்த மக்கள் நீண்ட காலமாக தமது உரிமைகளுக்காகக் குரல் கொடுத்து வருகிறார்கள்.

மேலும், ஈரானின் வடமேற்குப் பகுதியிலும், ஈராக்கின் வடக்கு மலைப் பகுதிகளிலும், சிரியாவின் வட பகுதியிலும் குர்திஸ் இனத்தவர்கள் செறிவாக வாழ்ந்து வருகிறார்கள்.

தாங்கள் தனியான ஒரு இனம், தங்களுக்கு எனத் தனியான ஒரு நாடு தேவை என்பது இந்த மக்களது கோரிக்கை. இது நீண்டநாள் கோரிக்கையாக இருந்த போதிலும் துருக்கியில் குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி ஆரம்பித்த போராட்டத்தின் ஊடாகவே இது உலகின் கவனத்தைப் பெற்றது.

குர்திஸ்தான் தொழிலாளர் கட்சியின் தலைவராக அப்துல்லா ஒசலான் விளங்குகிறார். வறிய விவசாயக் குடும்பம் ஒன்றில் பிறந்த அவர் துருக்கியின் தலைநகர் அங்காரா சென்று பல்கலைக்கழகத்தில் அரசியல் விஞ்ஞானம் படித்த வேளையில்தான் தீவிர அரசியலில் கால் பதித்தார்.

துருக்கியில் வசிக்கும் குர்திஸ் இன மக்களுக்கு எதிராகக் கடைப்பிடிக்கப்படும் பாரபட்சமான கொள்கைகள் காரணமாக வெகுண்டெழுந்த அவர்,

1978ஆம் ஆண்டில் குர்திஸ்தான் தொழிலாளர் கட்சியை உருவாக்கினார். மார்க்சியக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டிருந்த அவர் முதலில் குர்திஸ் மக்களுக்கான அதிகாரப் பகிர்வைக் கோரிய போதும், பின்னாளில் தனது இலக்கைத் தனிநாட்டுக் கோரிக்கையாக மாற்றிக் கொண்டார்.

1984ஆம் ஆண்டில் குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி தனது ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்தது. அன்றைய காலகட்டத்தில் குர்திஸ் மொழியைப் பாடசாலையில் பயில்வது தடை செய்யப்பட்டிருந்தது. பிள்ளைகளுக்குக் கூட குர்திஸ் மொழியில் பெயரிடத் தடை இருந்தது. தாங்கள் ஒரு தனித் தேசிய இனம் எனச் சொல்வதற்குக் கூட முடியாமல் இருந்தது.

ஆகர்ச தலைவராகப் பரிமாணம் பெற்ற ஒசலானின் பின்னால் பெருமளவான இளைஞர்களும், யுவதிகளும் அணி திரண்டனர்.

சிரியாவின் வட பகுதியில் தலை மறைவு வாழ்க்கையை மேற்கொண்டிருந்த ஒசலான், அங்கிருந்தவாறே துருக்கிக்கு எதிரான படை நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தார்.

இடதுசாரி சாய்வைக் கொண்டிருந்த சிரிய அரசாங்கங்கள் அவருக்கு தொடர்ந்து ஆதரவு வழங்கி வந்தன. அதேவேளை, ஈராக், சிரியா மற்றும் ஈரான் நாடுகளில் வசிக்கும் குர்திஸ் இளைஞர்கள், யுவதிகளும் குர்திஸ்தான் தொழிலாளர் கட்சியில் தங்களைப் போராளிகளாக இணைத்துக் கொண்டனர்.

குர்திஸ் போராளிகளின் தாக்குதலுக்கு எதிரான துருக்கியின் பதில் தாக்குதல்கள் மிகவும் மோசமாக அமைந்தது.

போராட்டத்தைச் சாக்காக வைத்து குர்திஸ் மக்கள் மீது மாத்திரமன்றி, சொந்த மக்கள் மீதும் அடக்குமுறை ஏவி விடப்பட்டது. இரண்டு தரப்புக்கும் இடையிலான மோதலில் இதுவரை 40,000 வரையானோர் இறந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இலட்சக் கணக்கான குர்திஸ் மக்கள் உள்நாட்டிலும், வெளி நாடுகளிலும் இடம்பெயர்ந்து உள்ளனர்.

ஆயுதப் போராட்டம் எப்போதும் மரணத்தையும் துயரத்தையும் பரிசளிக்கும் என்பது மாற்ற முடியாத நியதி. ஆனால், உரிமைப் போராட்டத்தில் உயிரையே விலையாகத் தரத் தயாராக போராளிகள் துணிந்து நிற்கும் போது துன்ப துயரங்கள் பெரிது படுத்தப்படுவதில்லை.

எத்துணை கஷ்டத்தை மக்கள் அனுபவித்த போதிலும் குர்திஸ்தான் மக்கள் கட்சிக்கான தமது ஆதரவை குர்திஸ் மக்கள் ஒருபோதும் வழங்கத் தவறியதில்லை. அதேவேளை, குர்திஸ்தான் தொழிலாளர் கட்சியைப் பயங்கரவாத அமைப்பாக துருக்கி பிரகடனம் செய்தது. அமெரிக்கா உட்பட மேற்குலகம் இதனை வழிமொழிந்தது.

சுதந்திரம் கோரும் நியாயபூர்வமான போராட்டங்கள் அனைத்துக்கும் இடதுசாரி முகாம் ஆதரவு வழங்கி வந்துள்ளமையை கிட்டிய உலக வரலாறு எங்கணும் காண முடிகின்றது.

அவ்வாறே குர்திஸ் விடுதலைப் போராட்டத்துக்கும் இடதுசாரி முகாம் தனது ஆதரவை வழங்கியிருந்தது. தவிர, புலம்பெயர் நாடுகளில் வாழும் குர்திஸ் இன மக்களும் தமது ஆதரவை இந்தப் போராட்டத்துக்கு வழங்கியிருந்தனர். பொருண்மிய ஆதரவு மாத்திரமன்றி, அரசியல் அடிப்படையிலான ஆதரவையும் அவர்கள் போராட்டத்துக்கு வழங்கத் தவறவில்லை.

துருக்கியின் அயல் நாடான கிரேக்கம், குர்திஸ் போராட்டத்துக்குத் தனது ஆதரவை வழங்கியிருந்தது என்ற சேதி வரலாற்றின் முரண்நகை. மேற்குலக நிலைப்பாட்டைப் புறந்தள்ளி குர்திஸ் போராட்டத்தை ஆதரிக்கவும், ஒசலானுக்கு அரசியல் தஞ்சம் வழங்கவும், வெளிநாடுகளில் அவருக்குப் பாதுகாப்பு அளிக்கவும் கிரேக்கம் முன்வரக் காரணம் துருக்கியுடனான மோதல் போக்கே.

ஓட்டோமான் சாம்ராஜ்ய காலம் முதல் தொடரும் இந்தப் பூசல் முதலாம் உலகப் போரின் பின்னர் உத்தியோகபூர்வமாக முடிவுக்கு வந்தாலும், சைப்பிரஸ் பிரச்சினையோடு மீண்டும் தொடர்வதைக் காண முடியும்.

1998ஆம் ஆண்டில் தனது சிரிய மறைவிடத்தில் இருந்து வெளியேற வேண்டிய நிர்ப்பந்தம் ஒசலானுக்கு ஏற்பட்டது.

அவரைக் கைது செய்ய சிரிய நாட்டுக்குள் ஊடுருவ துருக்கி முயற்சிப்பதாகக் கிடைத்த தகவல்களை அடுத்து அவர் சிரியாவை விட்டு வெளியேறினார்.

பல நாடுகளுக்கும் பயணம் செய்த அவர் இறுதியில் கென்யத் தலைநகர் நைரோபியில் வைத்து துருக்கியின் தேசிய புலனாய்வு முகவர்களால் கடத்தப்பட்டார். 1999 பெப்ரவரி 15ஆம் திகதி நடைபெற்ற இந்தச் சம்பவத்தின் பின்னால் அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ. இருந்ததாகத் தெரிகிறது.

கைது செய்யப்பட்ட ஒசலான் தனிமைச் சிறையில் வைக்கப்பட்டார். அவருக்கு எதிராக நடத்தப்பட்ட வழக்கில் அவருக்கு மரண தன்டனை வழங்கப்பட்ட போதிலும் அது பின்னர் ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது.

ஒசலானின் தற்போதைய அறிவிப்பைத் தொடர்ந்து பல கேள்விகள் எழுந்துள்ளன. 40 ஆண்டுகால ஆயுதப் போராட்டத்துக்குத் தலைமையேற்ற ஒரு தலைவர் தான் வாழும் காலத்திலேயே – தான் முன்வைத்துப் போராடிய கோரிக்கைக்கு எந்தவொரு தீர்வும் எட்டப்படாத நிலையில் – போராட்டத்தைக் கைவிடுவது என எடுத்த தீர்மானம் சரியானதுதனா? அவ்வாறு ஒரு தீர்மானத்தை அவர் எடுக்க உண்மையான காரணம் என்ன? அவரை நம்பி, அவர் காட்டிய வழியில் போராடி உயிர் துறந்த போராளிகளின் தியாகத்துக்கான பெறுமானம் என்ன? போராட்டம் காரணமாக தமது வாழ்விடங்களை விட்டு வெளியேறி அல்லல்பட்ட மக்களின் துயரத்துக்கான வெகுமதி என்ன?

ஒசலானின் முடிவை ஏற்றுக் கொண்டு அனைத்துப் போராளிகளும் தமது போராட்டத்தைக் கைவிட்டு விடுவார்களா? அல்லது ஈராக், சிரியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் போராட்டக் குழுக்களில் தம்மை இணைத்துக் கொள்வார்களா? அந்தந்த நாடுகளில் செயற்பட்டுக் கொண்டிருக்கும் போராட்டக் குழுக்கள் தமது ஆயுதப் போராட்டங்களைக் கைவிட்டுவிடுமா?

இவை விடை தெரியாத கேள்விகள். இவற்றுக்கான பதிலை அறிவதற்கு காத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை.

Share.
Leave A Reply

Exit mobile version